ஓ.பி.எஸ். விளக்கம்: "பா.ஜ.கவுக்கு செல்லப்போகிறேனா?"

பன்னீர் செல்வம்

தான் பாரதீய ஜனதாக் கட்சியில் சேரப்போவதாக வந்துள்ள செய்திகள் பொய்யானவை என்றும் உயிர்போகும்போது தன் உடல் மீது அ.தி.மு.க. கொடி போர்த்தப்படுவதே தன் லட்சியம் என்றும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.

தமிழில் வெளிவரும் வாரமிருமுறை இதழ் ஒன்றில் "நிம்மதி போச்சு; எடப்பாடி டார்ச்சர் - காசியில் பொங்கிய பன்னீர்" என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியானது. அதில், பிரதமர் நரேந்திர மோதி உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்யச் சென்றபோது அதில் பங்கேற்பதற்காக ஒரு நாள் முன்னதாகவே ஓ. பன்னீர்செல்வம் சென்றதாகவும் அப்போது மத்திய அமைச்சர் பியூஷ் கோயலைச் சந்தித்து அவர் புலம்பியதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டின் துணை முதல்வராக இருந்தால்கூட தன்னிடம் எந்த அதிகாரமும் இல்லை என்றும் எடப்பாடியின் பிடியில்தான் கட்சியும் ஆட்சியும் உள்ளது என்றும் புலம்பிய ஓ. பன்னீர்செல்வம், தேனி தொகுதியில் வெற்றிபெற்றால் தன் மகனுக்கு அமைச்சர் பதவியைக் கேட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.

அதன் பிறகு, தான் அ.தி.மு.கவில் தொடரும் மன நிலையில் இல்லை என்றும் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு பா.ஜ.கவுக்கு வரும் எண்ணம் உள்ளதாக அவர் கூறியதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், ஓ. பன்னீர்செல்வம் பா.ஜ.கவின் ஏஜென்டாக இருந்ததால்தான் அவரை பதவியிலிருந்து இறக்கியதாகவும் அ.தி.மு.க. கொடியின் மத்தியில் காவி வண்ணத்தை அவர்கள் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்றும் கூறினார்.

இந்த நிலையில், இந்தச் செய்திகளுக்கு ஓ. பன்னீர்செல்வம் மறுப்புத் தெரிவித்திருக்கிறார். "மோடியின் பதவியேற்பு விழாவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்றிருக்கிறார். அதேபோல ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோதி பங்கேற்றார். அந்த வழியையே தானும் பின்பற்றுவதாகவும்" பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.

இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி கே. பழனிச்சாமியுடன் இணைந்து அ.தி.மு.கவை இமைபோல காப்பதற்காக ஆயுள் மொத்தத்தையும் அ.தி.மு.கவுக்காக ஒப்படைத்து தொண்டாற்றும் ஊழியன் தான் என்றும் தன் உயிர்போகும் நாளில் உடல் மீது அ.தி.மு.க கொடி போர்த்துவதையே தன் வாழ்நாள் லட்சியமாக கொண்டு வாழ்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :