புல்வாமா குறித்து மோதியிடம் நேருக்கு நேராக நின்று கேள்வி கேட்பேன்: தேஜ் பகதூர் யாதவ்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆதர்ஷ் ரதோர்
- பதவி, பிபிசி செய்தியாளர்
வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோதிக்கு எதிராக சமாஜ்வாதி கட்சி முன்னாள் பி.எஸ்.எப். வீரர் தேஜ் பகதூர் யாதவை தங்கள் வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
முன்பு சுயேட்சை வேட்பாளராக இருந்த பகதூர், இப்போது பிரதமருக்கு எதிராகப் போட்டியிடும் மகாபந்தன் வேட்பாளராக இருக்கிறார்.
பி.பி.சி. செய்தியாளருக்குப் பேட்டி அளித்த தேஜ் பகதூர், அனைத்துக் கட்சிகளுக்கும் தாம் கடிதம் எழுதியதாகவும், அதில் சமாஜ்வாதி கட்சியிடம் இருந்து அழைப்பு வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
``வாரணாசிக்கு சென்ற பிறகு, அனைத்துக் கட்சிகளுக்கும் நான் கடிதம் எழுதினேன். விவசாயிகள், ராணுவ வீரர்கள், வேலையற்றோர் நலன்கள் பற்றிப் பேசும் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அதில் கோரிக்கை விடுத்திருந்தேன். முதன்முதலில் எனக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு சமாஜ்வாதி கட்சியில் இருந்து அழைப்பு வந்தது. லக்னோவுக்கு வருமாறு கேட்டுக் கொண்டார்கள்'' என்று அவர் கூறினார்.
``அகிலேஷ் யாதவை நான் சந்தித்தேன். அந்தக் கட்சி வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பு தரப்பட்டது. நான் கூறிய அனைத்து விஷயங்களுக்கும் சமாஜ்வாதி கட்சி ஒப்புதல் தெரிவித்துள்ளது'' என்று தேஜ் பகதூர் தெரிவித்தார்.
சமாஜ்வாதி கட்சியில் இருந்து அழைப்பு வந்திருப்பதுடன், காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைத்திருந்தால் ஏற்றிருப்பீர்களா என்று அவரிடம் கேட்கப்பட்டது. ``நான் முன்வைக்கும் பிரச்சினைகளை ஒரு கட்சி சரியாகப் புரிந்து கொண்டு, அவற்றை முன்னெடுத்துச் சென்றால், அந்தக் கட்சியின் சார்பில் நான் போட்டியிட்டிருப்பேன். நான் முன்வைக்கும் பிரச்சினைகளை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டிருந்தால், அந்தக் கட்சியின் சார்பில் போட்டியிட்டிருப்பேன். ஆனால் நான் கூறிய விஷயங்களை காங்கிரஸ் கட்சி தங்கள் தேர்தல் அறிக்கையில் சேர்க்கவில்லை'' என்று அவர் கூறினார்.
ஷாலினியும் ஆதரவு அளிப்பார்
ஓர் அரசியல் கட்சியின் சார்பில் போட்டியிடுவது அவர் முன்வைக்கும் விஷயங்களை பலவீனப்படுத்தி விடாதா? கட்சியின் கொள்கைகள் ஆதிக்கம் செலுத்தாதா? இதுபற்றிக் கேட்டதற்கு, ``நான் முன்வைக்கும் பிரச்சினைகள், கட்சியின் பிரச்சினைகளும் கூட. இளைஞர்கள், விவசாயிகள், வேலையில்லாதோர் மற்றும் தொழிலாளர்களுக்காக உழைப்பதாக அந்தக் கட்சி கூறியுள்ளது. ராணுவ வீரர்களின் ஓய்வூதியம் மற்றும் தியாகி அந்தஸ்து போன்ற பிரச்சினைகளை இந்தக் கட்சி எழுப்பியுள்ளது. அவர்கள் முன்வைக்கும் பிரச்சினைகளுடன், நான் முன்வைக்கும் விஷயங்களும் சேர்க்கப் பட்டுள்ளன'' என்று அவர் பதில் அளித்தார்.
முன்பு வாரணாசி தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் ஷாலினி யாதவ் என்பவர் போட்டியிடுவதாக அறிவிக்கப் பட்டிருந்தது. இப்போது அவருக்குப் பதிலாக அந்தக் கட்சியின் வேட்பாளராக தேஜ் பகதூர் மாற்றப் பட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
தேர்தல் பிரச்சாரத்தில் அவருக்கு ஷாலினி யாதவ் உதவி செய்வாரா? இந்தக் கேள்வியைக் கேட்டபோது, ``பெண்கள் சார்பாக எனக்கு ஆதரவு அளிப்பதாகவும், என்னுடன் பிரச்சாரத்துக்கு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவர்கள் (பாஜகவினர்) மிகவும் கெட்டவர்கள். தடைகளை உருவாக்கி எனது வேட்புமனுவை அவர்கள் ரத்து செய்யலாம். என்னை வேட்பாளராக நிறுத்தும் முடிவு கட்சித் தலைவர் எடுத்த முடிவு. சில சிந்தனைகள் மூலமாக என்னை வேட்பாளராக ஆக்கியதில் அவர் ராஜதந்திரமாக செயல்பட்டிருக்கலாம்'' என்று அவர் கூறினார்.
கட்சியின் சார்பிலான வேட்பாளராக ஆக்கப்பட்ட பிறகு, தன்னுடைய தேர்தல் பிரச்சாரம் வலுப்பெற்றிருப்பதாக தேஜ் பகதூர் கூறுகிறார். மகா கூட்டணி சார்பில் வலுவான தேர்தல் சின்னத்தில் இப்போது போட்டியிடுவதாக அவர் குறிப்பிடுகிறார்.
வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயும் களத்தில் இருக்கிறார். காங்கிரஸ் கட்சிக்கும் கடிதம் எழுதி தமக்கு ஆதரவு கேட்டிருக்கிறார் தேஜ் பகதூர்.
``நான் முன்வைக்கும் பிரச்சினைகளை அவர்கள் புரிந்து கொண்டால், என்னுடன் சேர்ந்து கொள்வார்கள். அப்படி நடந்தால், மிகவும் நல்ல விஷயமாக இருக்கும்'' என்று அவர் கூறினார்.
மோதியிடம் கேள்விகள்
ஹரியானாவைச் சேர்ந்த தேஜ் பகதூரின் விடியோ 2017ல் வைரலாகப் பரவியது. அப்போது அவர் பி.எஸ்.எப். வீரராகப் பணிபுரிந்து வந்தார். பி.எஸ்.எப். வீரர்களுக்கு அளிக்கப்படும் உணவின் தரம் குறித்து அவர் புகார் கூறும் விடியோ அது.
வாரணாசியில் போட்டியிடுவது ஏன் என்று அவரிடம் கேட்டதற்கு, ``கால பைரவரின் தலமாக காசி உள்ளது. இங்கு மோதி வெற்றி பெற முடியும் என்றால், எனக்கும் வாரணாசி மக்கள் ஆசிர்வாதம் செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. முதன்முறையாக நான் இங்கு வந்திருக்கிறேன்'' என்று பதில் அளித்தார்.

பட மூலாதாரம், Getty Images
``மோதி வாக்குறுதிகள் அளித்தார். பி.எஸ்.எப்.-ல் பணியில் இருந்தபோது உணவுக்காக நான் கேள்வி எழுப்பினேன். அதன் தொடர்ச்சியாக வேலையில் இருந்து நீக்கப்பட்டேன். பிறகு என் மகனும் இறந்துவிட்டார். நாட்டுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் பிரதமர் நிறைவேற்றவில்லை. இப்போது நேரடியாக பிரதமரிடம் கேள்வி கேட்பதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன். 2014ல் அளித்த வாக்குறுதிகள் எதையாவது நிறைவேற்றி இருக்கிறார் என்று அவரிடம் நான் கேட்பேன்'' என்று தேஜ் பகதூர் கூறினார்.
``வாரணாசிக்கு நான் வந்ததன் முதல் நோக்கம், நாட்டின் பாதுகாப்பு தான். வாரணாசி தொகுதியின் பிரச்சினைகளும் நான் முன்வைக்கும் பிரச்சினைகளாக இருக்கும். ஆனால் நாட்டின் பிரச்சினைகள் பற்றியும் நான் பேசுவேன். நாட்டின் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு போன்ற மற்ற பிரச்சினைகள் பற்றியும் பேசப்படும்'' என்றும் அவர் தெரிவித்தார்.
தன்னுடைய ஆட்சிக் காலத்தில் நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது என்று தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோதி சொல்லிக் கொண்டிருக்கிறார். இதுபற்றிக் கேள்வி எழுப்பும் தேஜ் பகதூர், ``அது உண்மையாக இருந்தால், புல்வாமா தாக்குதல் எப்படி நடந்தது, அதுபற்றி ஏன் புலனாய்வு செய்யவில்லை என்று மோதி கூற வேண்டும்'' என்று கூறுகிறார்.
உணவுக்கு ஏங்கும் நிலை
``பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருக்கிறது என்றால், எனது தேர்தல் பிரச்சாரத்திற்கு ராணுவ வீரர்கள் ஏன் தீவிர ஆதரவு அளிக்க வேண்டும்? 997 வீரர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதுபற்றி அவர் பேசவில்லை. 775 வீரர்கள் உயிர்த் தியாகம் செய்திருக்கிறார்கள். எங்களிடம் புள்ளிவிவரங்கள் உள்ளன. பாகிஸ்தான் தொடர்ச்சியாக செயல்பாடுகளை காட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் தேர்தல் நேரத்தில் மட்டுமே அதுபற்றி மோதி பேசுகிறார்'' என்று தேஜ் பகதூர் கூறினார்.
தனது வீடியோ மூலம் தான் மக்களின் கவனத்தை ஈர்த்தார் தேஜ் பகதூர். ராணுவத்தினருக்கு தரப்படும் உணவின் தரம் பற்றி அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.
வீடியோவை ஏன் பகிர்ந்தீர்கள் என்று அவரிடம் கேட்கப்பட்டது. ``அது ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் நடந்தது. என்னுடைய நம்பிக்கை மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டு மக்களின் நம்பிக்கை. நாட்டுக்கு நல்ல பிரதமர் கிடைத்திருக்கிறார் என்று நான் நினைத்தேன். தமக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று அவர் திரும்பத் திரும்ப கோரிக்கை விடுத்துக் கொண்டிருந்தார். பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்டபோது, கோவாவில் நடந்த கூட்டத்தில் பேசிய பிரதமர், தனக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஒவ்வொரு இந்தியரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறினார். நாட்டின் பிரதமர் நிறைய உழைக்கிறார், ஓர் இந்தியன் என்ற முறையில் நம்முடைய பிரச்சினையையும் நாம் முன்வைக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். அந்த நம்பிக்கையில் என்னுடைய கருத்துகளை முன்வைத்தேன். ஆனால் எனக்கு என்ன கிடைத்தது? நான் பணி நீக்கம் செய்யப்பட்டேன். ஒற்றை தானியத்துக்கு என் குடும்பம் ஏங்கும் நிலை ஏற்பட்டது. என் மகனும் உலகைவிட்டுப் பிரிந்துவிட்டான்'' என்று அவர் கூறினார்.
ராணுவ ஒழுக்கத்தை தேஜ் பகதூர் மீறிவிட்டார் என்று கூறி டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
``ராணுவ ஒழுங்கை மீறிவிட்டேன் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், எனக்கான நிதி? நான் 21 ஆண்டு காலம் பணியாற்றி இருக்கிறேன். அதற்கான ஓய்வூதியத்தைக் கொடுங்கள். அதையும்கூட தராவிட்டால், ஊழல் அதிகாரிகளை நீக்குங்கள். ஆனால் இதைக்கூட அவர் செய்யவில்லை. ஊழலுக்கு எதிரான குரலை அடக்குவது, ஊழல் செய்பவர்களைப் பாதுகாப்பது என்பது தான் அவர்களுடைய கொள்கையாக இருக்கிறது'' என்று அவர் சொல்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












