கேரளாவில் தற்கொலை குண்டுவெடிப்பை நடத்த திட்டமிட்ட நபர் கைது

கேரளாவில் தற்கொலை குண்டுவெடிப்பை நடத்த திட்டமிட்ட நபர் கைது

பட மூலாதாரம், Mark Kolbe

படக்குறிப்பு, (சித்தரிப்பு படம்)

ஐஎஸ் அமைப்பினை பின்தொடர்ந்து வந்ததுடன், கேரளாவில் தற்கொலை தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்ட நபரொருவரை நேற்று (திங்கட்கிழமை) கைது செய்துள்ளதாக இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

கேரளாவின் காசர்கோடு என்னும் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, கைது செய்யப்பட்டுள்ள ரியாஸ் அபூபக்கர் என்னும் ரியாஸை இன்று (செவ்வாய்க்கிழமை) கொச்சியிலுள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ரியாஸிடம் விசாரணை நடத்தியபோது, இந்தியாவில் தாக்குதல்களை நடத்துமாறு வலியுறுத்தும் வகையிலான ஒலி கோப்புகளை வெளியிட்டுவிட்டு தற்போது தலைமறைவாகிவிட்ட அபு இசா எனும் அப்துல் ரஷீத் அப்துல்லாஹ் என்பவருடன் தான் இணையதளம் வாயிலாக தொடர்பில் இருந்ததாக அவர் கூறியுள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சஹ்ரான் காசிம்
படக்குறிப்பு, சஹ்ரான் ஹாஷிம்

அதுமட்டுமின்றி, வளப்பட்டனம் ஐஎஸ் இயக்க வழக்குடன் தொடர்புடையவராகவும், தற்போது சிரியாவில் இருப்பதாக சந்தேகிக்கப்படுபவருமான அபு காலித் எனும் அப்துல் கயூம் என்பவருடனும் தான் தொடர்பில் இருந்ததாக ரியாஸ் கூறியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த தாக்குதல்களின் சூத்திரதாரி என்று இலங்கை பாதுகாப்பு படைகளால் சந்தேகிக்கப்படும் சஹ்ரான் ஹாஷிமின் உரைகள் மற்றும் காணொளிகளை கடந்த ஓராண்டுகாலத்திற்கு மேலாக தான் பின்தொடர்ந்து வந்ததாக ரியாஸ் தெரிவித்துள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேரளாவிலிருந்து ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளுக்கு ஏற்கனவே சென்றுவிட்ட அப்துல் ரஷீத், அஷூஃபாக் மஜீத், அப்துல் கயூம் உள்ளிட்ட நான்கு பேரிடம் கேரளாவை சேர்ந்த நான்கு பேர் கொண்ட அணியினர் தொடர்பில் உள்ளதாக தங்களுக்கு தகவல்கள் கிடைத்ததாகவும், அதன் பேரில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) அம்மாநிலத்திலுள்ள காசர்கோடு, பாலக்காடு ஆகிய பகுதியிலுள்ள மூன்று இடங்களில் ஆய்வு நடத்தியதாகவும், அப்போது பிடிபட்ட மூன்று பேரிடம், அவர்களுக்கும் ஐஎஸ் அமைப்புக்கும் உள்ள தொடர்பு, திட்டம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தேசிய புலனாய்வு அமைப்பின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு கேரளாவிலுள்ள காசர்கோடு பகுதியை சேர்ந்த 15 இளைஞர்கள் மாயமானதுடன், அவர்கள் ஆப்கானிஸ்தான், சிரியா ஆகிய நாடுகளுக்கு இடம்பெயர்வு செய்தது தொடர்பாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :