ப.சிதம்பரம் பேட்டி: ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏன் அறிவிக்கவில்லை?

ப.சிதம்பரம்

பட மூலாதாரம், The India Today Group

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை பெரும் கவனத்தை ஈர்த்திருக்கும் நிலையில், தேர்தல் அறிக்கை குறித்து, வரவிருக்கும் அரசு குறித்து, நியாய் திட்டத்திற்கான நிதி ஆதாரம் குறித்தெல்லாம் தன் மானகிரி இல்லத்திலிருந்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம். பேட்டியிலிருந்து:

கே. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நியாய் திட்டம் அதாவது, வறுமைக் கோட்டிற்குக் கீழிருப்பவர்களுக்கு வருடத்திற்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் பெரும் கவனிப்பைப் பெற்றிருக்கிறது. ஆனால், இதற்கான நிதி எங்கிருந்து வரும் என்ற சந்தேகம் எழுப்பப்படுகிறது..

ப. நிதி திரட்ட முடியாது என்று தெரிந்திருந்தால் நாங்கள் இந்தத் திட்டத்தை அறிவித்திருப்போமா? இந்தியாவில் இதற்குப் போதுமான நிதி இருக்கிறது. இன்றைய இந்தியாவின் மொத்த உற்பத்தி 210 லட்சம் கோடி ரூபாய். மாநில அரசு, மத்திய அரசுகளின் ஆண்டுச் செலவு 60 லட்சம் கோடி ரூபாய்கள். ஐந்து ஆண்டுகளில் தேசத்தின் மொத்த உற்பத்தி, கிட்டத்தட்ட 400 லட்சம் கோடி ரூபாயாக உயரக்கூடும். அரசின் செலவினங்கள், ஏறத்தாழ 120, 130 லட்சம் கோடிகளாக உயரக்கூடும். இவ்வளவு செலவினங்கள் இருக்கக்கூடிய நாட்டில் ஏழை, எளிய மக்களுக்காக மூன்றரை லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க முடியாது என்பது அபத்தமான வாதம். இது நம் மொத்த உற்பத்தியில் 1 சதவீதத்திற்கும் குறைவு. இந்தியாவில் வசிக்கும் 20 சதவீதம் மக்களுக்காக ஒரு சதவீதம்கூட ஒதுக்க முடியாதா? பணக்காரர்களுக்கு எத்தனை சலுகைகளைத் தருகிறீர்கள், அதற்கு எத்தனை சதவீதம் ஒதுக்குகிறீர்கள்? நிச்சயமாக இதற்கான நிதி ஆதாரத்தைத் தேட முடியுமென நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

காங்கிரஸ்

கே. வறுமைக் கோட்டிற்குக் கீழிருக்கும் மக்களுக்கு இப்படி நேரடியாக நிதியைக் கொடுக்கவிருப்பதால், கல்வி, மருத்துவம் போன்றவற்றுக்கான நிதி குறைக்கப்படுமா என்ற அச்சம் எழுந்திருக்கிறது..

ப. தேர்தல் அறிக்கையின் மற்ற பக்கங்களைப் பாருங்கள். ஐந்து ஆண்டுகளில் கல்விகான ஒதுக்கீடு ஆறு சதவீதமாக உயரப்போகிறது. மருத்துவத்திற்கான ஒதுக்கீடு 3 சதவீதமாக உயரப்போகிறது. ஆக, எதுவும் குறையாது. தேவையில்லாத செலவினங்கள் குறையலாம். தேவையுள்ள செலவினங்கள் எதுவும் குறையாது.

கே. ஆட்சிக்கு வந்தவுடன் 22 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என அறிவித்திருக்கிறீர்கள். அதாவது மத்திய, மாநில அரசுப் பணிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதன் மூலம் இதைச் செய்வோம் என்கிறீர்கள். இதில் 4 லட்சம் மட்டுமே மத்திய அரசுப் பணிகள். மீதத்தை மாநில அரசுகள்தான் செய்ய வேண்டும். பெரும்பாலான அரசுகள், பா.ஜ.கவாலும் அதன் கூட்டணிக் கட்சிகளும் நடத்தப்படுகின்றன. அவர்கள் மறுத்தால் என்ன செய்வீர்கள்?

ப. அவர்கள் நம் இளைஞர்கள் முன்பாக அம்பலப்பட்டுபோவார்கள். சில அரசுகள் செய்து, பா.ஜ.க. அரசுகள் அதைச் செய்யாவிட்டால் மக்கள் கலகத்தில் ஈடுபடுவார்கள். இளைஞர்கள் போராடுவார்கள். நீங்கள் ஏன் காலியிடங்களை நிரப்பவில்லையென முதலமைச்சரைக் கேள்வி கேட்பார்கள். அவர்கள் மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும். ஆக, மக்களின் கோரிக்கைகள், அழுத்தம் ஆகியவை சேர்ந்து இந்த பணியடங்களை நிரப்ப மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுக்கும்.

முரளிதரன்

கே. சிறப்பு ஆயுதப்படைச் சட்டம் தொடர்பான உங்களது அறிப்பு எதிர்க்கட்சிகளிடம் பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ப. அந்தச் சட்டத்தை திருத்த வேண்டும் எனச் சொல்லியிருக்கிறோம். ஆனால், அந்தச் சட்டத்தையே நீக்கியிருக்கிறார்களே. 2015ஆம் ஆண்டு திரிபுராவிலிருந்து நீக்கியது பாரதீய ஜனதாக் கட்சி. 2018ல் மேகாலயாவிலிருந்து முற்றிலும் நீக்கியது பாரதீய ஜனதாக் கட்சி. ஏப்ரல் மாதம் முதல் தேதி, அருணாச்சலப் பிரதேசத்திலிருந்து மூன்று மாவட்டங்களிலிருந்து இந்தச் சட்டம் முற்றிலுமாக நீக்கிக்கொள்ளப்பட்டது. ஏப்ரல் 2ஆம் தேதி இந்தச் சட்டத்தைத் திருத்துவோம் என்று நாங்கள் சொன்னால், அதை தவறு என்கிறீர்கள். யாரை முட்டாளாகப் பார்க்கிறார்கள்? இதை யாராவது ஏற்பார்களா?

கே. இந்தச் சட்டம் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சட்டமா, இதை திருத்துவோம் என்று சொல்வதன் மூலம் வாக்குகள் கிடைக்குமென நினைத்தீர்களா.

ப. அப்படியல்ல. மனித உரிமைகளை இந்திய நாட்டில் நிலை நாட்ட வேண்டும். அதுதான் தர்மம், அதுதான் அறம். மனித உரிமை மீறல் என்பது அத்து மீறிப் போய்விட்டது. எல்லா மனித உரிமைகளும் இந்த அரசால் மீறப்படுகின்றன. மனித உரிமைகளை நிலை நாட்ட வேண்டும். லட்சக் கணக்கான, கோடிக் கணக்கான மக்கள் மனித உரிமைகளுக்காக நிற்கிறார்கள். இது தேர்தலுக்கான வாக்குறுதியல்ல. தேர்தல் அறிக்கையில் இருப்பதால் நீங்கள் அப்படிச் சொல்லலாம். தேர்தல் இல்லாவிட்டாலும் இருந்தாலும் இதைச் செய்தே ஆக வேண்டும்.

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராகுல் காந்தி

கே. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல முக்கியமான மாநிலங்களில் சரியான கூட்டணிகள் அமையவில்லை. குறிப்பாக உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம்..

ப. நீங்கள் கூட்டணி அமையாத மாநிலங்களைச் சொல்கிறீர்கள். மிகப் பெரிய மாநிலம் மகாராஷ்ட்ரா. அங்கு அமைந்திருக்கிறது. பெரிய மாநிலங்களில் ஒன்று பிஹார். இங்கே அமைந்திருக்கிறது. பெரிய மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. இங்கே அமைந்திருக்கிறது. இந்த மூன்று மாநிலங்களிலும் சேர்த்து 128 இடங்கள் இருக்கின்றன. இதை மறந்துவிடுகிறீர்கள்.

உத்தரப்பிரதேசத்திலும் மேற்கு வங்கத்திலும் கூட்டணி அமையவில்லை. ஆனால், நாங்கள் அதற்கு முயற்சிக்கவில்லையென அர்த்தமில்லை. எத்தனை மாநிலங்களில் பா.ஜ.கவுக்கு கூட்டணி இருக்கிறது? தமிழ்நாடு, பிஹார், மகாராஷ்ட்ரா உள்ளிட்ட நான்கு மாநிலங்களில்தான் இருக்கிறது. தமிழகத்தில் இருப்பது பயனில்லாத கூட்டணி. வேறு எங்கு அவர்களுக்கு கூட்டணி இருக்கிறது?

கே. இந்தத் தேர்தலின் முடிவில் மூன்றாவது அணி என்பது மிக வலுவான ஒரு முனையாக வரக்கூடும் என்ற தோற்றம் ஏற்பட்டிருக்கிறது..

ப. வரட்டுமே. மூன்றாவது அணி வென்று வந்தால் நாங்கள் அதை மகிழ்ச்சியோடு வரவேற்போம். ஏனென்றால் தேர்தலுக்குப் பிறகு, பா.ஜ.க. அல்லாத கட்சிகள் வலிமையான கூட்டணி அமைய அது உதவியாக இருக்கும். மம்தா பானர்ஜி வெற்றியையோ, வேறு கட்சிகளின் வெற்றியையோ நாங்கள் வெறுக்கவில்லை. கூட்டணிக்கு நீங்களும் முயற்சி செய்யுங்கள். நாங்களும் முயற்சி செய்கிறோம் என்றுதானே சொல்கிறோம்.

கே. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தென்னகத்தில் போட்டியிடுவதன் நோக்கம் என்ன?

ப. முழு இந்தியாவையும் நாங்கள் நேசிக்கிறோம். காங்கிரஸ் கட்சி முழு இந்தியாவுக்கும் பொதுவானது. பா.ஜ.கவைப் போல வட நாட்டு, இந்தி பேசும் மாநிலங்களுக்கான கட்சி அல்ல. பா.ஜ.க. முழுக்க முழுக்க இந்தி பேசும் மாநிலங்களுக்கான கட்சி. இந்தி ஆதிக்கம் செய்யும் ஒரு கட்சி. அவர்களுக்கு தென்னாட்டைப் பற்றி அக்கறையும் கிடையாது. கவலையும் கிடையாது. அதனால்தான் தென்னாட்டில் அக்கட்சி இதுவரை கால் ஊன்ற முடியவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சி அனைத்து மாநிலங்களுக்கும் சொந்தமான கட்சி என்பதைச் சொல்வதற்காக வட நாட்டிலும் போட்டியிடுகிறார். வயநாட்டிலும் போட்டியிடுகிறார்.

கே. உங்கள் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் தி.மு.க. போன்ற கட்சிகள், மேலும் மேலும் கூட்டாட்சி தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தக்கூடும்.

ப. வலியுறுத்தட்டுமே. விவாதம்தானே. ஜனநாயகத்தில் ஒரு கட்சி தன் கோரிக்கையை வலியுறுத்துவது, கருத்தைச் சொல்வதையெல்லாம் இயல்பாக ஏற்றுக்கொள்வதையெல்லாம் இயல்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இதை ஏதோ சண்டையைப் போல பார்க்கக்கூடாது. நம் ஜனநாயகத்தைப் பற்றி இந்திய ஊடகங்கள் தங்கள் மனப் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். இதெல்லாம் ஜனநாயகத்தில் இயற்கை. எந்த விவாதத்தையும் பற்றி காங்கிரஸ் கட்சி அஞ்சியதே கிடையாது. காங்கிரஸ் கட்சி அடிப்படையிலேயே விவாதங்களின் அடிப்படையில் உருவான கட்சி. சுதந்திரத்திற்கு முன்னால் காங்கிரஸ் காரியக் கமிட்டியில் நடந்தவை எத்தனை விவாதங்கள்? மகாத்மா காந்திக்கும் சுபாஷ் சந்திர போஸுக்கும் இடையில் நடந்தவை எத்தனை விவாதங்கள்?

எடப்பாடி

பட மூலாதாரம், ARUN SANKAR/AFP/GETTY IMAGES

கே. தமிழக அரசைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?

ப. இது அரசே இல்லையே... இது கைப்பாவை. பாரதீய ஜனதாக் கட்சியின் கைப்பாவை. இது மைனாரிட்டி அரசு. சிறுபான்மை அரசு. ஒரு நிமிடம்கூட அரசுக் கட்டிலில்கூட அமரத் தகுதியில்லாத அரசு. தமிழ்நாட்டில் இதுவரை உள்ளாட்சித் தேர்தலையே நடத்தவில்லை. ஏன் நடத்தவில்லை? தோற்றுப்போய்விடுவோம் என்ற அச்சம். இந்த இடைத் தேர்தல்களை நடத்துவதில் எவ்வளவு தடைசெய்தார்கள், எவ்வளவு வில்லங்கம் செய்தார்கள்? அதையெல்லாம் மீறி இப்போது இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

கே. இருந்தபோதும் ஆளும்கட்சி பல இடங்களில் வெல்லலாம் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ப. கிடைக்கட்டுமே. மக்கள் வாக்களித்தால் கிடைக்கட்டுமே. நான் என்ன வேண்டாமென்றா சொல்கிறேன்? நான் முழுக்க முழுக்க ஜனநாயகவாதி.

இலங்கை
இலங்கை

கே. இந்தத் தேர்தலில் அ.ம.மு.கவின் டிடிவி தினகரன் பெரிய அளவில் வாக்குகளை சிதறடிப்பார் என நம்பப்படுகிறது. அவருடைய தாக்கம் எப்படி இருக்குமென நினைக்கிறீர்கள்..

ப. நான் ஆரூடம் சொல்வதில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டாக பிளவுபட்ட ஒரு கட்சி. அந்தக் கட்சியில் இவர்களுக்கு ஒரு மாவட்டச் செயலாளர், அவர்களுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என கிளைக் கழகம் வரை பிளவுபட்ட ஒரு கட்சி. யார் பெரிய பாதி, யார் சிறிய பாதியென நான் சொல்லத் தயாரில்லை. ஆனால், பிளவுபட்ட கட்சி. இந்த இரண்டு பிரிவுகளின் நோக்கம் தேர்தல்களில் வெற்றிபெறுவதில்லை. அரசமைப்பதல்ல. கட்சியைக் கைப்பற்றுவது. ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ். கட்சியைக் கைப்பற்றப் போகிறார்களா அல்லது டிடிவி கட்சியைக் கைப்பற்றப் போகிறாரா என்பதுதான் கேள்வி. கட்சியைக் கைப்பற்ற தேர்தலிலே தங்கள் பலத்தை நிரூபித்துக்காட்ட முயற்சி செய்கிறார்கள். அவர்களுக்கும் நல்லரசுக்கும் சம்பந்தமே கிடையாது.

தினகரன்

பட மூலாதாரம், டிடிவி

கே. பா.ஜ.க. தங்கள் பிரதமராக நரேந்திர மோதியை திரும்பவும் முன்னிறுத்துகிறது. ஆனால், காங்கிரஸ் ஏன் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளரென அறிவிக்கவில்லை?

ப. எங்கள் கருத்தைத் தெளிவாக நாங்கள் சொல்லிவிட்டோம். இந்தத் தேர்தலில் கூட்டணி அரசுதான் அமையப் போகிறது என நாங்கள் நம்புகிறோம். ஆக, இந்தத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் வெல்ல வேண்டும். தேர்தலுக்குப் பிறகு, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒன்றுகூடி, யார் பிரதமரென்பதைத் தேர்வுசெய்வார்கள். இது ஒன்றும் முன்னுதாரணம் இல்லாத நிகழ்வு அல்ல. 1977ல் மொரார்ஜி தேசாய் பிரதமரென ஜெயப்பிரகாஷ் நாராயணன் தேர்தலுக்கு முன்பு அறிவித்தாரா, பின்பு அறிவித்தாரா? 1989ல் வி.பி. சிங் பிரதமரென முன்னால் அறிவித்தார்களா, பின்னால் அறிவித்தார்களா? தேவகவுடா 1996ல் பிரதமரென தேர்தலுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டாரா, பின்னால் அறிவிக்கப்பட்டாரா? ஆக, தேர்தலுக்கு பிறகு கூட்டணிக் கட்சிகள் ஒன்று சேர்ந்து யார் பிரதமர் என்பதைத் தேர்வுசெய்வார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :