You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சேலம் மக்களவைத் தொகுதி: திமுக சார்பாக போட்டியிட்ட ஆர். எஸ். பார்த்திபன் வெற்றி
- எழுதியவர், அ.தா.பாலசுப்ரமணியன்
- பதவி, பிபிசி தமிழ்
சேலம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்ட ஆர். எஸ். பார்த்திபன் வெற்றி பெற்றுள்ளார்.
விவசாயிகளில் ஒரு பிரிவினர் கடுமையாக எதிர்த்த சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு முனைந்தது, கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட சேலம் எஃகு ஆலை விரிவாக்கத் திட்டத்தை மத்திய பாஜக அரசு கிடப்பில் போட்டது ஆகிய இரண்டும் சேலம் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் எப்படி தாக்கத்தை செலுத்தும் என்பது கூர்ந்து பார்க்கப்படும்.
முதுபெரும் தலைவர் ராஜாஜி, சென்னை மாகாண முதல்வராக இருந்த பி.சுப்பராயன், அவரது மகனும் கம்யூனிஸ்ட் தலைவராக இருந்தவருமான மோகன் குமாரமங்கலம், அவரது மகனும், பின்னாளில் பாஜகவில் இணைந்து மத்திய அமைச்சரானவருமான ரங்கராஜன் குமாரமங்கலம், சுதந்திரப் போராட்ட வீரரும், பின்னாளில் தமிழ்நாடு, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற நாளேடுகளை நிறுவியவருமான வரதராஜுலு நாயுடு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்களாக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி, கே.வி.தங்கபாலு, எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவராக இருந்த பி.கண்ணன், முன்னாள் சட்டமன்ற அவைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான க.ராசாராம், திமுக-வுக்குள் கருணாநிதியையே கேள்வி கேட்கும் அதிகாரத்துடன் இருந்த வீரபாண்டி ஆறுமுகம் போன்ற தலைவர்கள் அரசியல் பயின்ற களம் சேலம்.
தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்தான்.
ஓமலூர், சேலம்-வடக்கு, சேலம்-தெற்கு, சேலம்-மேற்கு, வீரபாண்டி, எடப்பாடி ஆகிய சட்டமன்றப் பிரிவுகளை உள்ளடக்கியது சேலம் மக்களவைத் தொகுதி.
வேறு சில தொகுதிகளைப் போல அல்லாமல், இந்திய விடுதலைக்குப் பிறகு நடந்த 16 மக்களவைத் தேர்தல்களிலும் சேலம் மக்களவைத் தொகுதி இடம்பெற்றே வந்துள்ளது.
இதில் ஏழு முறை காங்கிரசும், ஒரு முறை தமிழ் மாநில காங்கிரசும், ஒரு முறை காங்கிரசில் இருந்து பிரிந்து சென்று திவாரி காங்கிரசில் இணைந்த வாழப்பாடி ராமமூர்த்தியும் வெற்றி பெற்றுள்ளனர். ஆக 9 முறை ஏதோ ஒருவகையில் காங்கிரஸ் தொடர்புடையவர்களே இத்தொகுதியில் வென்றுள்ளனர். நான்கு முறை அதிமுக-வும், மூன்று முறை திமுக-வும் வென்றுள்ளன. ஆனால், கடந்த இரண்டு தேர்தல்களிலும் அதிமுக-வே வென்றுள்ளது.
1980 தேர்தலுக்குப் பிறகு இங்கு திமுக நேரடியாக 3 முறை போட்டியிட்டு மூன்று முறையும் தோற்றுள்ளது.
இந்த முறை அதிமுக சார்பில் கே.ஆர்.எஸ். சரவணனும், திமுக சார்பில் எஸ்.ஆர்.பார்த்திபனும் போட்டியிடுகின்றனர்.
மாம்பழங்களால் புகழ்பெற்றது சேலம். வேளாண்மை தவிர, மக்னீசியம், பாக்ஸைட் சுரங்கங்கள் ஆகியவை சேலத்தின் தொழில்துறையின் அடையாளங்களாக உள்ளன. ஆனால், சுரங்கத் தொழில் வீழ்ச்சியில் உள்ளது.
சேலம் எஃகு ஆலை
சேலத்தின் மற்றொரு அடையாளமாக இருப்பது சேலம் எஃகு ஆலை. 1973-ல் இந்திரா காந்திர பிரதமராக இருந்தபோது தொடங்கப்பட்ட இந்த ஆலையை, மேம்படுத்தவேண்டும், விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் தலைமையிலான 2009-14 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஏற்றது.
ரூ.1,902 கோடி மதிப்பில் ஆலையை விரிவுபடுத்தும், நவீனமயப்படுத்தும் திட்டத்துக்கு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் 2008-ம் ஆண்டு மே மாதம் அடிக்கல் நாட்டினார். அடுத்து ஆட்சி மாறிய நிலையில், இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் ஆண்டுக்கு 1.80 லட்சம் டன் எஃகு பாளங்கள் உற்பத்தி செய்யும் திறன் பெற்ற முழுவதும் ஒருங்கிணைந்த தொழிற்சாலையாக இந்த ஆலை தரம் உயர்ந்திருக்கும்.
ஆனால், ஏராளமான விளைநிலங்களை கையகப்படுத்தும், மேலும் பலரின் நிலங்களை பயன்படுத்த முடியாததாக மாற்றும் சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை மத்திய அரசும், மாநில அரசும் தீட்டின. இதற்கு எதிராகப் போராடிய மக்களை மோசமாக ஒடுக்கியது மாநில அரசு. இந்த இரண்டும் தேர்தலில் எதிரொலிக்கும் என்பது கவனிக்கப்படும்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் சேலம் ரயில்வே கோட்டம் உருவாக்கப்பட்டது. இதற்கு இணையாக சொல்லிக்கொள்ளும்படி பாஜக அரசு சேலத்துக்கு செய்த திட்டம் ஒன்றும் இல்லை. திமுக ஆட்சிக் காலத்தில் சேலத்தில் உருவாக்கப்பட்ட பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை கூட செயல் முடங்கிப் போயிருந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தற்போது ஓரளவு அந்த மருந்துவமனை செயல்படத் தொடங்கியுள்ளது.
பெங்களூரில் நெரிசல் மிகுவதால், அங்கு வர விரும்பும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை தமிழகத்துக்கு அழைக்கும் நோக்குடன் திமுக ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட ஐ.டி. பார்க், அரசின் பாராமுகத்தால் பயனேதும் இல்லாமல் இருந்துவருகிறது.
வேளாண் நசிவுடன், தொழில் வளர்ச்சி சந்திக்கும் இந்தப் பிரச்சனைகள் தேர்தலில் எப்படி எதிரொலிக்கும் என்பதும், தொடர்ந்து அதிமுக பெற்ற வெற்றி, கூட்டணிக் கட்சியான பாமக-வுக்கு உள்ள கணிசமான வாக்குகள் அதிமுக அணிக்கு எப்படி உதவும் என்பதும் தேர்தல் முடிவுகளில் தெரியவரும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்