You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமேசான் நிறுவனர் விவாகரத்து - 35 பில்லியன் டாலர்கள் இழப்பீடாக வழங்குகிறார் மற்றும் பிற செய்திகள்
உலகின் மிகப் பெரிய பணக்காரரான ஜெஃப் பெசோஸ் தனது மனைவி மெக்கின்ஸிக்கு விவாகரத்து இழப்பீடாக 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.
எனினும், 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெஃப் பெசோஸ் தொடங்கிய இணையதள வணிக நிறுவனமான அமேசானில் மெக்கின்ஸிக்கு உள்ள நான்கு சதவீத பங்கை அவர் தொடர்ந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜெஃபுக்கு சொந்தமான விண்வெளி சுற்றுலா நிறுவனமான ப்ளூ ஆரிஜின் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாள் நிறுவனத்தில் கொண்டுள்ள பங்கை கைவிடுவதற்கு மெக்கன்சி முடிவெடுத்துள்ளார்.
இதற்கு முன்புவரை, கலை வியாபாரி அலெக் வொலின்ஸ்டைன் மற்றும் அவரது மனைவி ஜோசலினுக்கிடையேயான 3.8 பில்லியன் விவாகரத்து இழப்பீடு உலகளவில் அதிகமானதாக கருதப்பட்டது.
"இருவரின் தார்மீக ஆதரவுடன் எங்களது மண முறிவு செயல்பாடு முடிவடைந்துள்ளது" என்று மெக்கின்ஸி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
"ஆண் யானைகள் தொடர்ந்து மின் வேலிகளில் சிக்கி இறப்பதால் யானை இனத்துக்கு ஆபத்து"
கோவை, மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பகுதியில் தோட்டத்தில் வைத்திருந்த மின்வேலியில் சிக்கி ஓர் ஆண் யானை ஓரிரு தினங்களுக்கு முன்பு உயிரிழந்தது.
சிறு முகையில் ஓடும் பவானி ஆற்றின் தெற்கு கரையினை ஒட்டி உள்ள பவானி சாகர் அணைக்கு சொந்தமான இடத்தில் நாசர் அலி என்பவர், வாழைப் பயிர் செய்துள்ளார். இந்த வாழைத் தோட்டத்தினை சுற்றி மின்வேலி அமைத்துள்ளார்.
இந்த வேலியில் பாய்ந்த மின்சாரம் தாக்கி, ஆண் யானை ஒன்று ஓரிரு நாள்கள் முன்பு உயிரிழந்தது. வனத்துறையினர் தோட்டத்திற்கு சொந்தமான நாசர் அலியிடம் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
சட்டவிரோதமாக அவர் அந்த வேலியில் மின்சாரம் பாய்ச்சி வந்ததாகக் கூறப்படுகிறது.
விரிவாக படிக்க:மின் வேலிகளால் தொடர்ந்து ஆண் யானைகள் பலியாவதால் புதிய ஆபத்து
பாமகவை நம்பும் அதிமுக: வட மாவட்டங்களில் கூட்டணிக்கு வெற்றி கிட்டுமா?
கடந்த இரண்டு தசாப்தங்களாக தமிழக அரசியல்களத்தில், குறிப்பாக வட மாவட்டங்களில் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்துவரும் கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) கருதப்படுகிறது.
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் சம பலத்தில் இருக்கும் தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி இருக்கும் கூட்டணியே வெற்றிக்கூட்டணியாக கருதப்பட்டது.
சட்டப்பேரவை தேர்தல்களை பொருத்தவரை பாமக 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலை தவிர தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் உறுப்பினர்களை பெற்றிருந்தது.
ராகுல் ஆளுமையில் ஏற்பட்ட வளர்ச்சி, மோதியை பதவியிறக்கப் போதுமானதா?
இந்திரா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவரானபோது அவருக்கு வயது 42. சஞ்சய் காந்தி தனது முதல் தேர்தலில் போட்டியிட்டபோது, அவருக்கு வயது 30.
ராஜீவ் காந்தி அரசியலில் நுழைந்தபோது, அவருக்கு 36 வயதே பூர்த்தியாகி இருந்தது. 2004-ம் ஆண்டில் ராகுல் அரசியலில் நுழைந்தபோது, அவருக்கு 34 வயதாக இருந்தாலும், இந்திய அரசியல் தரத்திற்கு முன்னால் அவர் ஒரு குழந்தையாகவே இருந்தார்.
சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அவர் அரசியலுக்கு வந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், இன்னமும் குழந்தையாகவே கருதப்படுகிறார்.
2008-ல் ராஜ்நாத் சிங், அவரை 'சிறுவன்' என்று பெயரிட்டு, அரசியலில் இருந்து வெளியேற்ற முயன்றபோது, ராகுல் கடுமையாக எதிர்த்தார்.
போயிங் 737 விமானம் தலைகீழாக விழுந்ததை நிறுத்த இயலாத விமானிகள்
கடந்த மாதம் தரையில் மோதி விபத்திற்குள்ளான எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் விமானம், தரையில் மோதுவதற்குள் பல முறை கர்ணம் அடித்து விழுந்துள்ளது என்று முதல் கட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
மோதுவதற்கு முன்னர், போயிங் நிறுவனம் வழங்கிய செயல்முறைகளை விமானிகள் மீண்டும் மீண்டும் பின்பற்றியுள்ளதாக இந்த பேரிடரின் முதலாவது அதிகாரபூர்வ அறிக்கை குறிப்பிடுகிறது.
விமானிகள் முயற்சிகள் எடுத்தபோதும், விமானத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் டாக்மாவிச் மோகஸ் தெரிவித்துள்ளார்.
இடி302 விமானம் அடிஸ் அபாபாவில் இருந்து மேலேழுந்து பறந்த சற்று நேரத்தில் கீழே விழுந்து மோதியதில் அதில் பயணம் செய்த 157 பேரும் இறந்தனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்