மக்களவை தேர்தல் 2019: அதிமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக

பட மூலாதாரம், Twitter
மக்களவை தேர்தலுக்கான அதிமுக பாஜக கூட்டணியில் தேமுதிகவும் இணைந்துள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டணியில் தேமுதிகவுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என அதிமுகவின் கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
அதிமுக-தேமுதிக கூட்டணிக்கான ஒப்பந்தத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி இன்று மாலை அறிவிக்கப்பட்டதை அடுத்த, சில மணிநேரத்தில் அதிமுக-தேமுதிக கூட்டணி முடிவு எட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கூட்டணி குறித்த மூன்று வார கால இழுபறி நிலைக்கு பிறகு அதிமுகவுடனான கூட்டணியை தேமுதிக அறிவித்துள்ளது.
தற்போது, தேமுதிகவுக்கு அளிக்கப்பட்ட நான்கு தொகுதிகளுடன், அதிமுக கூட்டணியில் பாமக ஏழு தொகுதிகளை பெற்றுள்ளது, பாஜக ஐந்து தொகுதிகளையும், புதிய தமிழகம் மற்றும் புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதியை பெற்றுள்ளன. தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளில் 20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக ஒதுக்கியுள்ளது.
அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளிடமும் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானபோதும், அதிமுக தலைவர்கள் தேமுதிக தங்களோடுதான் கூட்டணியில் போட்டியிடும் என உறுதியாக தெரிவித்துவந்தனர்.
கூட்டணி உறுதி செய்யப்பட்டதும் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என வெகு விரைவில் தகவல் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
இந்த கூட்டணி அறிவிப்பு செய்தியாளர் சந்திப்பில், உடல்நலக்குறைவால் பல நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்றிருந்தார். இருப்பினும் அவர் செய்தியாளர்களிடம் ஏதும் பேசவில்லை செய்தியாளர்கள் அவரிடம் நலம் விசாரித்தபோது, தன்னால் பேசமுடியவில்லை என செய்கையில் தெரிவித்தார் விஜயகாந்த்.
கூட்டணி குறித்து பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, "சட்டமன்ற இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்,'' என்று தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- காதலனை தேட பெண்களுக்கு “டேட்டிங் விடுமுறை”
- உலக முதலீட்டாளர் மாநாடு: ‘புதிய முதலீடுகள் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு’
- தன்னை மீட்க அறிவிக்கப்பட்ட வெகுமதியை தானே வென்ற சிறுமி
- உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸிற்கு உயிர் கொடுப்பாரா பிரியங்கா காந்தி?
- இஸ்லாம் மதத்தை `சீனமயமாக்க' சீனாவின் ஐந்தாண்டு திட்டம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












