You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மக்களவை தேர்தல் 2019: சொல்லப்பட்ட நேரத்தில் புல்லட் ரயில் செயல்பாட்டிற்கு வருமா? #BBCRealityCheck
- எழுதியவர், வினீத் கரே
- பதவி, பிபிசி ரியாலிட்டி செக்
கூற்று: 165 ஆண்டுகள் பழமையான இந்தியாவின் ரயில் சேவையை மேம்படுத்துவதாக உறுதியளித்திருந்த மத்திய அரசு, 2022ல் புல்லட் ரயில் சேவை திட்டத்தை தொடங்குவதாக அறிவித்திருந்தது.
தீர்ப்பு: 2022ல் குறிப்பிட்ட இடத்தில் செயல்படுத்தப்படவுள்ள இந்த நவீன அதிவேக ரயிலில் லட்சக்கணக்கான இந்தியர்கள் பயணம் செய்யலாம். ஆனால், அப்போதோ அல்லது அதற்கு அடுத்த ஆண்டிலோ இத்திட்டம் உறுதியளிக்கப்பட்டது போல செயல்பாட்டிற்கு வருமா என்று தெரியவில்லை.
அகமதாபாத்தில் இருந்து மும்பை வரை புல்லட் ரயில் சேவை இயக்க திட்டமிடப்பட்டு 2015ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதற்கான பொருளாதார உதவியை ஜப்பான் செய்யும் என்றும் இந்தியா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
செப்டம்பர் 2017ல் இருநாட்டு பிரதமர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டபோது இதற்கான வேலை அதிகாரபூர்வமாக தொடங்கப்பட்டது.
அந்தாண்டு இந்திய ரயில்வே துறை, "2022 ஆகஸ்டு 15ஆம் தேதிக்குள் மும்பை - அகமதாபாத் அதிவேக ரயில் திட்டத்தை முடிக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்" என்று கூறியது.
எனினும், அதில் ஒரு சிறு பகுதியை மட்டும் இயக்குவதை குறிக்கோளாக வைத்துள்ள அதிகாரிகள், மீதமுள்ள தடத்தை அதற்கு அடுத்த ஆண்டு முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
"இது ஒரு மாய ரயில்" என்று குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இது என்றுமே முடிவுக்கு வராது என்று கூறினார்.
இதன் தேவை என்ன?
இந்தியா முழுவதும் பரவியுள்ள ரயில் சேவை தினமும் 22 மில்லியன் மக்களின் போக்குவரத்து தேவையை குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகிறது. நாள் ஒன்றுக்கு சுமார் 9000 ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஆனால், சேவையின் தரம் மோசமாக இருப்பதாகவும், அதனை நவீனப்படுத்த போதிய முதலீடுகள் செய்யப்படவில்லை என்றும் பயணிகள் நீண்ட நாட்களாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
தற்போதைய நிலையில், இந்தியாவின் வேகமான ரயில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ். இது சோதனையின் போது மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்தது.
எனினும், ஐப்பானிய புல்லட் ரயில் மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும்.
1400 கோடி டாலர்கள் மதிப்பிலான இத்திட்டம் முடிக்கப்பட்டால், நாட்டின் பொருளாதார மற்றும் பெரு வணிக மையமான மும்பையையும், குஜராத்தின் முக்கிய வணிக மையமான சூரத் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களையும் இது இணைக்கும்.
தற்போது இந்த 500 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க எட்டு மணி நேரம் ஆகிறது. ஆனால், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், மூன்று மணி நேரத்திற்கும் குறைவாகவே இந்த பயணம் இருக்கும். பயண நேரம் சரியாக இரண்டு மணி நேரம் ஏழு நிமிடங்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.
முதலில் 2022ஆம் ஆண்டு இத்திட்டம் முடிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், பின்னர் ஓராண்டு காலம் அதிகரிக்கப்பட்டது.
இந்த ரயில் 2023ஆம் ஆண்டில் தான் செயல்பாட்டுக்கு வரும் என்று சம்பந்தப்பட்டவர்கள் கூறியிருந்தனர்.
ஆனால், அதுவும் சாத்தியமில்லை என்று சில வல்லுநர்கள் கூறுகின்றனர்.
"திட்டப்பணிகள் எவ்வளவு மெதுவாக நடைபெறுகிறது என்பது எனக்கு தெளிவாக தெரியவில்லை" என்கிறார் பிபிசியிடம் பேசிய நகர்ப்புற அலுவல்கள் தேசிய நிறுவனத்தின் இணை பேராசிரியர் டெபொலினா குன்டு.
மேலும் இதில் அதிகாரம் மிக்கவர்கள் கொடுக்கும் அழுத்தங்களும் இருக்கும் என்று அவர் தெரிவிக்கிறார்.
இத்திட்டத்தை செயல்படுத்துவதில் ஈடுபட்டுள்ள நிறுவனம், இதற்காக கொடுக்கப்பட்ட காலத்தை "கடினமான காலக்கெடு" என்று கூறியுள்ளது என்று தலைவர் அசல் காரே தெரிவித்தார்.
சூரத் மற்றும் பிலிமொரா நகரங்களுக்கு இடையே உள்ள 48 கிலோ மீட்டர் தூரத்தை வேண்டுமானால் ஆகஸ்டு 2022க்குள் முடிக்கலாம் என்று கூறுகிறது தேசிய அதிவேக ரயில் நிறுவனம்.
முழு திட்டத்திற்கான காலக்கெடு குறித்து கேட்கையில், டிசம்பர் 2023 என்று அவர்கள் தெரிவித்தனர்.
நிலம் ஏன் பிரச்சனையாக உள்ளது?
இத்திட்டத்திற்கு இருக்கும் முக்கியமான பிரச்சனை நிலம் கையகப்படுத்துதல்.
புல்லட் ரயில் திட்டத்திற்கு 1400 ஹெக்டேருக்கும் அதிகமான நிலம் கையகப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. இதில் பெரும்பாலான நிலங்கள் தனியாருக்கு சொந்தமானவை.
இதனை கடந்த ஆண்டு இறுதிலேயே முடித்திருக்க வேண்டும். ஆனால் 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் அளவில் இது முடிவடையும் என்று சமீபத்தில் கூறப்பட்டது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட நில உரிமையாளர்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டதாக தேசிய அதிவேக ரயில் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் பிபிசியிடம் தெரிவித்திருந்தது. ஆனால், அது மொத்தம் கணக்கிடப்பட்டுள்ள 6000த்தில் ஒரு பகுதிதான்.
நில உரிமையாளர்களுக்கு குறைந்தபட்ச விலையை கொடுப்பதனால், இதில் சிக்கல் நிலவுவதாகவும் கூறப்படுகிறது.
எனினும் சில இடங்களில் நிலம் கையகப்படுத்தல் தொடர்பாக போராட்டம் நடந்து வந்த நிலையில், நீதிமன்றத்தில் இது தொடர்பாக பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நிலம் கையகப்படுத்தல் தொடர்பான வழக்குகள் முடிய பல ஆண்டுகள் ஆகலாம்.
இதில் உள்ள மற்றும் ஒரு முக்கிய பிரச்சனை வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் சான்றிதழ் வாழ்க தாமதம் ஆகலாம். ஏனெனில், இந்த புல்லட் ரயில் மூன்று வனப்பகுதிகள் மற்றும் கடற்கரை பகுதிகள் வழியாக செல்கிறது.
பிற செய்திகள்:
- காதலனை தேட பெண்களுக்கு “டேட்டிங் விடுமுறை”
- உலக முதலீட்டாளர் மாநாடு: ‘புதிய முதலீடுகள் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு’
- தன்னை மீட்க அறிவிக்கப்பட்ட வெகுமதியை தானே வென்ற சிறுமி
- உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸிற்கு உயிர் கொடுப்பாரா பிரியங்கா காந்தி?
- இஸ்லாம் மதத்தை `சீனமயமாக்க' சீனாவின் ஐந்தாண்டு திட்டம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :