You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியா - பாகிஸ்தான் போரின்போது இந்தியாவில் இருந்து தப்பிச் சென்றாரா ராஜீவ் காந்தி? #BBCFactCheck
- எழுதியவர், உண்மை பரிசோதிக்கும் குழு
- பதவி, பிபிசி
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்த தவறான செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது என்னவென்றால், "1971ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போரின்போது, நாட்டிற்கு அவர் தேவைப்பட்டபோது, இந்திய விமானப்படையின் விமானியான ராஜீவ் காந்தி இங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்" என்பதாகும்.
தாங்கள் பிடித்து வைத்திருந்த விங் கமாண்டர் அபிநந்தன் இந்தியா திரும்பிய பிறகு, இந்த பகிர்வு வைரலாகியிருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த பிப்ரவரி 27ம் தேதி பாகிஸ்தானிடம் பிடிப்பட்டார் அபிநந்தன்.
இந்நிலையில், ராஜீவ் காந்தி குறித்த இந்த செய்தி வலதுசாரிகள் இடையே பரப்பப்பட்டு ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸப் குழுக்களிலும் பகிரப்பட்டு வருகிறது.
அதில் கூறியிருப்பதாவது: "இந்தியாவின் விமானத் தாக்குதலுக்காக ராகுல் காந்தி ஆதாரம் தேடிக் கொண்டிருக்கிறார். ஆனால், நாட்டின் மிகவும் இக்கட்டான சூழலில் அவரது தந்தை நாட்டுக்காக நிற்கவில்லை."
இதனை நிரூபிப்பதற்காக ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பயனாளர்கள் 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டு "Postcard" மற்றும் "Pica Post" வலைதளங்களில் வந்த செய்திகளை சுட்டிக்காட்டியுள்ளனர். இது ஆயிரக்கணக்கான முறை பகிரப்பட்டுள்ளது.
ஆனால், இது தவறானது என்று பிபிசியின் உண்மை பரிசோதிக்கும் குழு கண்டுபிடித்துள்ளது.
உண்மை பரிசோதனை
இந்திய பிரதமர்களுக்கான அதிகாரப்பூர்வ வலைதளத்தின்படி, ராஜீவ் காந்தி 1944ஆம் ஆண்டு ஆகஸ்டு 20ம் தேதி மும்பையில் பிறந்துள்ளார். மேலும், அவர் பிரதமராகும்போது அவருக்கு வயது 40.
1971 இந்தியா - பாகிஸ்தான் போரின்போது, இந்திரா காந்தி நாட்டின் பிரதமராக இருந்தார். அப்போது அவரது மகன் ராஜீவ் காந்தி அரசியலில் ஈடுபட்டிருக்கவில்லை.
அதிகாரபூர்வ வலைதளத்தில் ராஜீவ் காந்தியின் பொழுதுபோக்கு, விமானம் ஓட்டுவது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 1968ஆம் ஆண்டு அவர், இந்தியன் ஏர்லைன்ஸ் சேவையில் விமானியாக பணியாற்றத் தொடங்கினார். சுமார் பத்தாண்டுகளுக்கு விமானியாக ராஜீவ் காந்தி பணிபுரிந்துள்ளார்.
ஆனால், இந்திய விமானப்படையின் விமானியாக அவர் இருந்ததில்லை. அவர் போர் விமானங்களை இயக்கினார் என்ற கூற்று தவறானது.
"1971 போருக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் ஏர் இந்தியாவில் பயணிகள் விமானங்களை இயக்கியுள்ளார். போயிங் ரக விமானங்களை இயக்குவது அவருக்கு மிகவும் பிடிக்கும். அவர் பணியில் சேர்ந்தபோது, இந்தியாவில் பயணிகள் விமானம் பெரிதாக இருக்கவில்லை. ஆனால், அவர் இதில் பணியாற்றிய கடைசி காலத்தில் போயிங் விமானங்களை ஓட்டினார்" என்று ‘Sonia: A Biography‘ என்ற புத்தகத்தின் ஆசிரியர் ரஷீத் கித்வாய் பிபிசியிடம் தெரிவித்தார்.
குழந்தைகளுடன் இந்தியாவில் இருந்து தப்பித்தாரா?
இது தொடர்பான மற்றொரு செய்தியில், ராஜீவ் காந்தி, அவரது மனைவி சோனியா காந்தியோடு அவரது குழந்தைகளுடன் (பிரியங்கா மற்றும் ராகுல்) 1971 போரின்போது இத்தாலிக்கு தப்பிச் சென்றார் என்று கூறுவதும் பொய்யானதே.
போரின்போது ராகுல் காந்தி சுமார் ஆறு மாத குழந்தையாக இருந்தார். பிரியங்கா காந்தி போர் முடிந்து 1972ஆம் ஆண்டுதான் பிறந்தார்
மேலும், ராஜீவ் காந்தி நாட்டை விட்டுச் சென்றார் என்பதும் வெறும் வதந்திகள்தான் என்றும் கித்வாய் கூறுகிறார்.
"போரில் ராஜீவ் காந்திக்கு எந்த பங்கும் கிடையாது. அவரது தாய்தான் நாட்டை ஆண்டு கொண்டிருந்தார். மற்றுமொரு முக்கியமான விஷயம், 1971 போரின்போது இந்திரா காந்தி எங்கும் செல்லவில்லை. மேலும் அவரது ஆட்சிக்காலத்தில்தான், பாகிஸ்தானை இந்திய ராணுவம் வீழ்த்தியது. இதனால், அவரது மகனையோ அல்லது ராகுலையோ எவ்வாறு குற்றம் சொல்ல முடியும்" என்றும் அவர் தெரிவித்தார்.
ராஜீவ் காந்தி இந்தியாவில் இருந்து தப்பித்தார் என்ற கூற்றினை மூத்த பத்திரிகையாளர் நீனா கோபாலும் சந்தேகிக்கிறார்.
"எது எப்படியிருந்தாலும், ராஜீவ் காந்தி கோழையாக இல்லை. அவர் பயத்தில் நாட்டை விட்டுச் சென்றார் என்று கூறுவது அவமரியாதையாக உள்ளது" என்கிறார் நீனா.
ஆனால், தவறாக பகிரப்படும் செய்தியில் இருக்கும் புகைப்படம் மட்டும் உண்மை. அதில் விமானி சீருடையை அவர் அணிந்திருப்பார். ராஜீவ் காந்தியின் இந்த புகைப்படத்தை "Delhi Flying Club" தளத்திலும் பார்க்க முடியும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்