காதலனை தேட பெண்களுக்கு “டேட்டிங் விடுமுறை”: சீன நிறுவனங்களின் கவர்ச்சித் திட்டம்

வேலை செய்வதில் சிறு இடைவெளி எடுத்துவிட்டு, சீனாவின் சந்திர நாள்காட்டியின்படி, புத்தாண்டில் தங்களின் குடும்பத்தினரை சந்திக்க செல்ல மில்லியன்கணக்கான மக்கள் தயாராகி வருகின்றனர்.

ஆனால், சில தொழிலாளர்களுக்கு வழக்கமாக இந்த புத்தாண்டில் கிடைக்கின்ற 7 விடுமுறை நாட்களோடு மேலும் 8 நாட்கள் அதிகமாக கிடைக்கின்ற வாய்ப்பைப் பெற்றிருக்கின்றனர்.

திருமணம் ஆகாமல், 30 வயதுகளில் இருக்கின்ற பெண்களுக்கு இந்த `அதிர்ஷ்டம்ட கிடைத்துள்ளது. காதலரை கண்டறிவதற்காக இந்த விடுமுறை வழங்கப்படுகிறது.

ஹாங்செளவில் வரலாற்று பின்னணியிலான சுற்றுலா பூங்காவில் அமைந்துள்ள இரண்டு நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு "டேட்டிங் விடுமுறை" வழங்குவதாக "சௌத் சைனா போஸ்ட்" தெரிவித்துள்ளது.

"எஞ்சிய பெண்கள்"

சீனாவில் 30 வயதை நெருங்குகின்ற பெண்களுக்கு திருமணம் ஆகாமல் இருந்தால் அவர்களை இழிவாக "ஷெங் நு" அல்லது "எஞ்சிய பெண்கள்" என்று அழைக்கிறார்கள்.

தங்களுடைய தொழில்முறை வாழ்க்கையில் கவனம் செலுத்தவும், திருமணம் செய்து கொள்ளாமலும் இருக்க பல பெண்கள் முடிவு செய்வதால் இந்நிலை பொதுவாக அதிகரித்து வருகிறது.

ஆனால், திருமணம் செய்துகொள்ள வேண்டுமென பெண்கள் அழுத்தங்களை சந்தித்து வருகிறார்கள். சீனாவில் முதியோரின் எண்ணிக்கை அதிகரிப்பது, வேலை திறன் குறைவது பற்றி அரசு கவலை அடைந்துள்ளது.

"Leftover Women" and "Betraying Big Brother: The Feminist Awakening in China" என்ற புத்தகத்தை எழுதியவர் ஆசிரியர் லெடா ஹொங் ஃபின்ச்சர்.

லெடா ஹொங்கை பொறுத்தவரை "25 முதல் 30 வயதில் திருமணம் ஆகாமல் இருக்கின்ற பெண்களை முத்திரை குத்துவதற்கு சீன அரசின் திட்டமிட்ட பரப்புரை பிரசாரம்" எனக் கருதுகிறார்.

இவை எல்லாம், கல்வி கற்ற பெண்கள் திருமணம் செய்து, பின்னர் குழந்தைகளை பெற்றெடுத்து வாழ்வதற்கு அரசு எடுக்கின்ற முயற்சிகளின் ஒரு பகுதி" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்,

பிறப்பு விகிதம் குறைவு

2015ம் ஆண்டு "ஒரு குழந்தை கொள்கை"யை சீனா முடிவுக்கு கொண்டு வந்தாலும், குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. 2013ம் ஆண்டு தொடங்கி ஒவ்வோர் ஆண்டும் திருமணம் செய்வோரின் விகிதமும் குறைந்துள்ளது.

2018ம் ஆண்டு 15 மில்லியன் குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால், இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டைவிட 2 மில்லியன் குறைவாகும்.

ஆண் குழந்தைகளை பெற்றுக்கொள்ள குடும்பங்களை ஊக்கமூட்டிய கொள்கையால், மிக மோசமான பாலின சமமின்மையை சீனா சந்திப்பதாக லெடா ஹொங் கூறுகிறார்.

"சீனாவில் பெண்கள் குறைவாக உள்ளனர். அரசு புள்ளிவிவரங்களின்படி, தற்போது குறைந்தது 30 மில்லியன் ஆண்கள், பெண்களை விட அதிகமாக உள்ளனர்" என்று அவர் கூறுகிறார்.

இன்றைய சுமார் 1.4 பில்லியன் மக்கள்தொகையில் இருந்து, அடுத்த 50 ஆண்டுகளில் சீனாவின் மக்கள்தொகை 1.2 பில்லியனாக குறையும் என்று சீன சமூக அறிவியல் கழகம் கணித்துள்ளது.

சீன மக்கள்தொகையில் அதிகமானோர் முதுமை அடைவதோடு, குழந்தை பிறப்பு குறைவது பொது நிதி மற்றும் சமூக நலவாழ்வு அமைப்பில் பெரிய அழுத்தங்களை ஏற்படுத்தலாம்.

காதலனை கண்டறிதல்

ஆனால், டேட்டிங் செய்வதற்கு விடுமுறை வழங்குவது என்பது பெண்கள் ஒரு காதலரை சந்திக்க உதவுவதிலும், பின்னர் அவர்கள் குழந்தைகளை பெற்றெடுப்பர் என்பதிலும் எந்த தெளிவையும் வழங்கவில்லை.

ஹாங்செள சொங்செங் பெர்ஃபாமன்ஸ் நிறுவனத்தின் மனிதவள மேலாளர் ஹூவாங் லெய் என்பவர் ட்சஜியாங் ஆன்லைனில், "சில பெண் ஊழியர்கள் வெளியுலகோடு குறைவான தொடர்பையே கொண்டுள்ளனர்.

எனவே, தங்களின் எதிர்பாலினத்தவரோடு தொடர்பு கொண்டு, நேரம் செலவிடுவதற்கு ஏற்றவாறு, அதிக நேரத்தையும், வாய்ப்புகளையும் வழங்குவதற்கு பெண் ஊழியர்களுக்கு அதிக விடுமுறை அளிக்க விரும்புகிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

"இந்த டேட்டிங் விடுமுறை தொழிலாளர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது" என்றும் அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், இந்த முயற்சி பெரிய அளவில் செயல்திறன் மிக்கதாக இருக்காது என்று ஹொங் ஃபின்ச்சர் தெரிவிக்கிறார்.

வித்தியாசமான பரிசோதனைகள் மற்றும் கொள்கைகளில் இதுவும் ஒன்று என்று அவர் குறிப்பிடுகிறார்.

"ஆனால், திருணம் செய்வதற்கும், குழந்தைகளை பெற்றெடுப்பதற்கும் அவசரப்படாத பெண்கள் பெருமளவில் அதிகரித்து வருகின்றனர்" என்கிறார் ஹொங் ஃபின்ச்சர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :