சென்னையில் நரேந்திரமோதி - ''என்னை தடுக்கவேண்டுமென்றே எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன''

நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் எதிர்க்கட்சிகள் அலட்சியம் காட்டுவதாக பிரதமர் நரேந்திர மோதி பேசினார்.
சென்னை அருகே புதன்கிழமை நடந்த அதிமுக தலைமையிலான கூட்டணியின் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோதி, "தமிழகம் நலம்பெற மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. ஜெயலலிதா கனவு கண்ட முன்னேற்ற பாதையில் நாம் சென்று கொண்டிருக்கிறோம்" என்று பேசினார்.
இக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், பொன் ராதாகிருஷ்ணன், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்கள் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கே. கிருஷ்ணசாமி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
பிபிசி தமிழ் நேரலை:
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சென்னை சென்ட்ரலுக்கு எம்.ஜி.ஆர் பெயர் - பிரதமர் மோதி
சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையம், எம்ஜிஆர் பெயரால் இனி அழைக்கப்படும் என்று அறிவித்த மோதி, தமிழகத்திற்கு வந்து செல்லும் விமானங்களில் இனி தமிழில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.
மேலும் பேசிய அவர், காஞ்சிபுரத்தில் உள்ள நெசவாளர்கள் நம் நாட்டின் பெருமைக்குரியவர்கள். ஜவுளித்துறைக்கென 7000 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் காஞ்சிபுரம், தமிழகம் ஆகியவை சிறந்த சுற்றுலாத்தலங்கள் ஆகும். தேசிய ஜனநாயக கூட்டணி சுற்றுலா துறையை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. 2013 - 17ஆம் ஆண்டுவரை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. ஓரிடத்தில் சுற்றுலாத்துறை வளர்ந்தால், அங்கு பொருளாதாரம் வளருவதற்கான வாய்ப்புகளும் அதிகமாகிறது. சுற்றுலா வழிகாட்டிகள், சிற்றுண்டி கடை வைத்துள்ளவர்கள், ஏன் தேநீர் விற்பவர்கள்கூட இதனால் லாபம் பெறுவார்கள் என்று பிரதமர் மோதி குறிப்பிட்டார்.

நாட்டின் பாதுகாப்புக்கு முக்கிய கவனம் அளிக்கப்படுவதாக பேசிய மோதி, இரண்டு பாதுகாப்பு தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், அதில் ஒன்று தமிழகத்தில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதன் மூலமாக தொழில் வளர்ச்சி பெருகி, இளைஞர்களுக்கான வாய்ப்புகளும் அதிகமாகும் என்றும் அவர் கூறினார்.
நாட்டின் பாதுகாப்பில் எதிர்கட்சிகள் அலட்சியம் காட்டிவருவதாக பேசிய அவர், வலிமையான ராணுவத்தை அவர்கள் விரும்பவில்லை என்றார். முடிவுகள் டெல்லியில் எடுக்கப்படுவதில்லை என்றும் நாட்டு மக்களே உச்சபட்ச கமாண்டர்கள் என்றும் பிரதமர் மோதி பேசினார்.
மக்கள் தான் தம் தலைமை என்று குறிப்பிட்ட பிரதமர் மோதி, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் மாநில விருப்பார்வங்களை பூர்த்தி செய்ய முடியவில்லை என்றார்.
மாநிலத் தலைவர்களை காங்கிரஸ் அவமானப்படுத்தியதாகவும், சர்வாதிகாரம் மற்றும் குடும்ப ஆட்சியை எதிர்த்த காமராஜர் அவமானப்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Arun Karthick
"மேலும் பல மாநில அரசுகள் காங்கிரஸ் ஆட்சியில் கலைக்கப்பட்டுள்ளன. இந்திரா காந்தியே 50 முறை மாநில அரசுகளைக் கலைத்துள்ளார். திமுக ஆட்சிக் கூட கலைக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று சந்தர்பவாத அரசியலால் திமுக, காங்கிரசுடன் இணைந்துள்ளது" என்றார்.
"மோதி வெறுப்பு என்பது புதிய எல்லையை தொட்டிருக்கிறது. என்னைப்பற்றி வசைபாட அனைவரும் போட்டி போடுகின்றனர்" என்று கூறிய மோதி தன் குடும்பத்தை பற்றி, தன் ஏழ்மையைப் பற்றி, தன் பின்தங்கிய சாதிப் பின்புலம் பற்றி தவறாக பேகின்றனர் என்றார். ஆனால், அதுகுறித்து தமக்கு கவலையில்லை என்று கூறிய அவர், தாம் இருப்பது மக்களுக்காகவே என்றார். "என் ஒவ்வொரு சொட்டு ரத்தமும், என் ஒவ்வொரு நிமிடமும் நம் நாட்டு மக்களுக்காகவே செலவழிக்கிறேன்" என்று அவர் பேசினார்.
"மோதியை தடுக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன. முதலில் இந்தியா, முதலில் மக்கள் என்பதுதான் நம் கொள்கை. மக்கள் ஆசிர்வாதத்தில் இன்னும் நிறைய செய்வோம். எங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுங்கள்" என்று பேசிய அவர்,
"நாளை நமதே நாற்பதும் நமதே" என்று தமிழில் கூறி தன் உரையை முடித்தார்.
"இந்தியாவுக்கு பிரதமராக இருக்கக்கூடிய தகுதி மோதிக்கு மட்டுமே உள்ளது" - எடப்பாடி பழனிசாமி
பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கு பிரதமராக இருக்கக்கூடிய தகுதி மோதிக்கு மட்டுமே உள்ளது என்று தெரிவித்தார்.
130 கோடி மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது அவர் மட்டுமே என்றும் அவரால்தான் மக்கள் நிம்மதியாக உறங்குகின்றனர் என்றும் அவர் பேசினார்.

பட மூலாதாரம், Getty Images
அனைத்து பிரச்சனைகளை தாக்குப்பிடிக்கக்கூடிய ஒரே தலைவர் பிரதமர் மோதிதான் என்று குறிப்பிட்ட முதல்வர் பழனிசாமி, வலிமையான பாரதப் பிரதமர் இருந்த காரணத்தினால்தான் புல்வாமா சம்பவத்திற்கு பிறகு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க முடிந்தது என்றார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், பல வெளிநாடுகளுக்கு சென்று நம் அடையாளங்னளை பிரதமர் மோதி நிறுவியதால்தான், அனைத்து நாடுகளும் நமக்கு ஆதரவு அளிக்கின்றனர் என்றார்.
விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் எந்த காயமும் இல்லாமல் திரும்பி வந்த வரலாற்றை மோதி படைத்துள்ளார் எனறும் முதல்வர் பேசினார்.
"முதல்வரும், துணைமுதல்வரும் அமைத்துள்ளது வெற்றிக்கூட்டணி" - ராமதாஸ்
"ஒரு அருமையான கூட்டணியை முதல்வரும், துணை முதல்வரும் ஆழ்ந்து யோசித்து, வெற்றிகரமான கூட்டணியாக அமைத்திருக்கிறார்கள்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பேசினார்.
மேலும் பேசிய அவர், தமிழகத்தினுடைய நலன்கள் பெருக வேண்டும் என்பதற்காகவே 10 அம்ச கோரிக்கைகளை தாங்கள் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.
ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் தாம் கோரிக்கை வைத்துள்ளதாக அவர் கூறின்னார்.
"ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்றால் மாநிலத்துக்கு அதிக உரிமைகள் கொடுக்கப்பட வேண்டும். ஆனால், தற்போது அப்படியில்லை. மாநிலங்கள் அதிகாரமற்று இருப்பதை நாம் உணர்கிறோம்" என்றும் ராமதாஸ் பேசினார்.
தமிழ் உட்பட 22 இந்திய மொழிகளை தேசிய அலுவல் மொழியாக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி ஆளும் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்துள்ளன. இந்தக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி ஆகியவையும் இணைந்துள்ளன.
இந்த நிலையில் இந்தக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்கும் பொதுக்கூட்டம் ஒன்று வண்டலூர் அருகேயுள்ள கிளாம்பாக்கத்தில் புதன்கிழமை பிற்பகலில் தொடங்கி நடந்தது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோதி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் 4 மணியளவில் கூட்டம் நடக்கும் மைதானத்திற்கு வந்தார்.

முதலில் நடந்த அரசு நிகழ்ச்சியில் இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் ரூ. 5,150 கோடி செலவில் அமைக்கப்பட்ட எண்ணூர் திரவ எரிவாயு முனையத்தை திறந்துவைத்த பிரதமர் மோதி, தென்னக ரயில்வேயில் ஈரோடு - கரூர் - திருச்சி இடையே 142 கிலோ மீட்டர் தூரத்துக்கும், சேலம் - கரூர் - திண்டுக்கல் இடையே 158 கிலோ மீட்டர் தூரத்துக்கும் அமைக்கப்பட்டுள்ள மின்மயமாக்கப்பட்ட ரெயில் பாதைகளையும் திறந்துவைத்ததுடன், சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். - ஜானகி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். சிலையை காணொளி காட்சி மூலம் திறந்துவைத்தார்.
இதற்குப் பிறகு, அருகில் உள்ள மேடையில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மோதி பங்கேற்றுப்பேசினார்.
பிரதமர் மோதி தமிழகம் வரும்போதெல்லாம் கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபடும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இந்த முறை பிரதமருக்கு கறுப்புக் கொடி காட்டப்போவதில்லையென அறிவித்திருக்கிறார். தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பிரதமர் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதால் அவரை எதிர்க்கப்போவதில்லையெனக் கூறினார்.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் உள்ள எதிர்க்கட்சியினர் மோதிக்கு எதிரான பதிவுகளை #GoBackSadistModi என்ற ஹாஷ்டாகின் மூலம் ஒருங்கிணைத்துவருகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












