ஜெயலலிதா சிகிச்சை: உணவுக்காக ஒரு கோடிக்கும் மேல் செலவானது எப்படி? - அப்போலோ விளக்கம்

ஜெயலலிதா

பட மூலாதாரம், Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி: 'சிகிச்சையின் போது ஜெயலலிதா பழரசம் மட்டுமே அருந்தினார்'

சிகிச்சையின்போது, ஜெயலலிதா பழரசம் மட்டுமே அருந்தியதாக சென்னை உயர் நீதிமன்றத்தில், அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்தது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

"நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு எதிராக அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் செவ்வாய்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

சிகிச்சையின்போது ஜெயலலிதா பழரசம் மட்டுமே அருந்தினார். அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினருக்கும் 3 வேளையும் உணவு வழங்கப்பட்டதால் தான் உணவு கட்டணம் ரூ.1.15 கோடி செலவானது.

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு மருத்துவர்கள் ஆஜராகாத விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையம் எச்சரிக்கை விடுத்தது. ஆணையத்தின் செயல்பாட்டால் அப்பல்லோ, சசிகலா ஆகியோர் குற்றச்சாட்டுக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சையின் போது, அவருக்கு வழங்கப்பட்ட உணவு, அது தொடர்பான கணக்கு விவரங்கள் ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களில் வெளியானது எப்படி என அப்பல்லோ மருத்துவமனை சார்பில் உயர்நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதையடுத்து, வழக்கு விசாரணை புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது." என்று அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

line

இந்து தமிழ்: 'இந்தியா, பாகிஸ்தான் போர் பதற்றத்தால் பாதிக்கப்பட்ட திருமணம்'

ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டம், கெஜாத் காபார் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திர சிங் (23). இவருக்கும் பாகிஸ்தானின் சிந்து மாகாணம், அமர்கோட் மாவட்டம், சினாய் கிராமத்தை சேர்ந்த சாகன் கன்வாருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

பாகிஸ்தானில் உள்ள மணமகள் இல்லத்தில் வரும் 8-ம் தேதி திருமணத்தை நடத்த இருவீட்டாரும் திட்டமிட்டிருந்தனர். இதற்காக மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் 90 நாள் பாகிஸ்தான் விசாவை பெற்றனர். பாகிஸ்தானின் தார் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவும் செய்து வைத்திருந்தனர்.

கடந்த பிப்ரவரி 14-ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் மீதான தாக்குதல், இதற்குப் பதிலடியாக கடந்த 26-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை இந்திய போர் விமானங்கள் குண்டுகளை வீசி அழித்தது ஆகியவற்றால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் எழுந்துள்ளது.

இதுகுறித்து மணமகன் மகேந்திர சிங் கூறியபோது, "போர் பதற்றம் காரணமாக திருமணத்தை தள்ளிவைத்துள்ளோம். இருநாடுகளிடையே அமைதி திரும்பியபிறகு திருமணம் செய்து கொள்வேன்" என்று தெரிவித்தார்.

- இவ்வாறாக அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

line
line

தினத்தந்தி: 'ஜெயலலிதா, ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்'

ரஜினி

பட மூலாதாரம், Getty Images

சென்னை, போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா மற்றும் ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக கோவையை சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

"சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை 6 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் போனில் பேசினார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா வீட்டிலும், அப்பகுதியில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிலும் சற்று நேரத்தில் குண்டு வெடிக்கப்போகிறது என்று கூறி விட்டு மர்ம நபர் போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

உடனடியாக ஜெயலலிதா மற்றும் ரஜினிகாந்த் வீடுகளுக்கு போலீசார் விரைந்தனர். அங்கு அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தினார்கள். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. அது மிரட்டல் என்று தெரியவந்தது.

இதுதொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பேசிய நபர் கோவையை சேர்ந்த வாலிபர் என்று தெரியவந்தது.

சென்னை, போலீசார் கொடுத்த தகவலின் பேரில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் பிடித்தனர். அவருடைய பெயர் முகமது அலி என்று தெரியவந்தது. அவர் மனஅழுத்தம் காரணமாக இவ்வாறு மிரட்டல் விடுத்து பேசியது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது."

- இவ்வாறாக அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

line
கூட்டணி

பட மூலாதாரம், இந்து தமிழ்

line

தி இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'இந்திய கிரிக்கெட் அணியின் 500வது வெற்றி'

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளிடையே செவ்வாயன்று நாக்பூரில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றது, அனைத்து நாளிதழ்களிலும் செய்தியாக வந்துள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின், முதல் இரண்டு போட்டிகளிலும் வென்று இந்தியா முன்னிலை வகிக்கிறது.

நேற்றைய இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, இந்தியா 250 ரன்கள் எடுத்தது.

242 ரன்கள் எடுத்து 49.3 ஓவர்களில் ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து எட்டு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்தப் போட்டியின் வெற்றி ஒருநாள் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியின் 500வது வெற்றியாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :