You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மக்களவைத் தேர்தல் 2019: 'பாமகவின் இம்சையால் திமுகவுடன் இணைந்தோம்' - ஐஜேகே நிறுவனரின் காரணம்
2019 மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய ஜனநாயகக் கட்சியும், அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சியும் இன்று இணைந்துள்ளன. இரண்டு கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியில் இணைவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவது பற்றி அடுத்த இரண்டு நாட்களில் சந்தோசமான தகவல் வெளியாகும் என அதிமுகவின் கழக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இணைந்தமைக்கு விளக்கம் அளித்த இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் பச்சமுத்து, அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக இருப்பதால் அந்த கூட்டணியில் தொடரமுடியவில்லை என தெரிவித்தார்.
''மக்களவை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளோம். தமிழகத்தில் மு.க. ஸ்டாலினால்தான் மாற்றத்தை ஏற்படுத்தமுடியும். பாஜக கூட்டணியில் நாங்கள் இல்லாமல் போனதற்கான காரணம் பெரும்பாலான மக்களுக்கு தெரிந்திருக்கும். அந்த கூட்டணியில் எங்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துக்கொண்டிருந்த, இம்சித்துக்கொண்டிருந்த, தனிப்பட்ட முறையில், பல்கலைக்கழகத்திற்கும்(எஸ்.ஆர்.எம்) தொந்தரவு கொடுத்த பாமக இருப்பதால், நாங்கள் தொடரமுடியாது,'' என்று பச்சமுத்து, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அடுத்த சில நிமிடங்களில், கூட்டணி தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வந்தார்.
புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும் என அதிமுகவின் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதோடு மட்டுமல்லாமல், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் 21 இடங்களிலும் புதிய தமிழகம் அதிமுகவுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
தற்போது வரை அதிமுக கூட்டணியில் பாமக ஏழு இடங்களையும், பாஜக ஐந்து இடங்களையும் பெற்றுள்ளன. தற்போது 13வது தொகுதியை புதிய தமிழகம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. திமுக கூட்டணியைப் பொறுத்தவரை தோழமை கட்சிகளுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்