விமானி என ஏமாற்றி 25 ஆண்டுகள் விமானம் ஓட்டிய பொறியாளர் மற்றும் பிற செய்திகள்

தென்னாப்பிரிக்க அரசுக்குச் சொந்தமான சௌத் ஆஃப்ரிக்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தில், விமானிகளுக்கான உரிமம் இல்லாமல் 25 ஆண்டுகள் விமானங்களை இயக்கி வந்த 'விமானி' பதவி விலகியுள்ளார்.

வில்லியம் சாண்ட்லர் எனும் அந்த நபர் செய்த முறைகேட்டை அவரது ஆவணங்கள் சரிபார்ப்பின்போது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அவரிடம் இருந்து இழப்பீடாக பெரும் தொகையை கோரியுள்ள விமான சேவை நிறுவனம், அவர் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்போவதாக அறிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் இருந்து ஜெர்மனி செல்லும் ஒரு பயணத்தின்போது, சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத்தொடருக்கு மேல் விமானம் பறந்துகொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட அதிர்வுகளின்போது, அவர் விமானத்தை வினோதமாக இயக்கிய விதம் அவர் மீது சந்தேகத்தைத் தூண்டியது என மெயில் அண்ட் கார்டியன் எனும் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

விமானி ஆவதற்கு முன்பு வில்லியம் விமானப் பொறியாளராக பணியாற்றியுள்ளார்.

சர்வதேச விமானங்களை இயக்கும் விமானிகள் ஏர்லைன் டிரான்ஸ்போர்ட் பைலட் லைசன்ஸ் எனும் உரிமத்தை வாங்குவது கட்டாயமாகும். அதை ஆண்டுதோறும் புதுப்பிப்பதுடன், உடல் தகுதி தேர்வுக்கும் தங்களை உள்படுத்திக்கொள்ள வேண்டும்.

சிக்கலில் மாட்டிய மத போதகர்

சவப்பெட்டியில் இருக்கும் இறந்தவரின் உடலை பார்த்து "எழுந்திரு, எழுந்திரு!" என்று மத போதகர் ஒருவர் கத்துவது போன்ற காணொளி ஒன்று தென்னாப்பிரிக்காவில் வைரலாக பகிரப்பட்டுள்ளது.

இறந்தவர் மெதுவாக எழந்து நேராக உட்காருகிறார். அங்கு கூடியிருப்போர் ஆச்சர்யமடைகின்றனர். ஆரவாரம் செய்கின்றனர்.

ஆனால், நவீன கால அற்புத செயலாக கூறப்படும் இதனை எல்லாரும் நம்பத் தயாராக இல்லை.

"காங்கிரஸ் அம்பேத்கரைத் தோற்கடித்தது"

எதிர்க்கட்சிகளுக்கு சமூக நீதியில் நம்பிக்கை இல்லை என்று குற்றம் சாட்டிய பிரமதர், "காங்கிரஸ் அம்பேத்கரை இரு முறை தோற்கடித்தது. அவருக்கு பாரத ரத்னா விருதை வழங்கவில்லை. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அவர்கள் வைக்கவில்லை. பா.ஜ.க. ஆதரவில் இருந்த அரசுதான் இவை இரண்டையும் செய்தது." என்று தெரிவித்தார்.

2009ல் தி.மு.கவும் காங்கிரசும் இணைந்து அமைத்த அரசில் அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்ட விதத்தை குறை கூறினார் மோதி. "பிரதமர் அமைச்சர்களைத் தேர்வு செய்யவில்லை. பொது வாழ்வில் சம்பந்தமில்லாதவர்கள் தொலைபேசி மூலம் இலாகாக்களை பகிர்ந்தளித்தார்கள்" என்று குறிப்பிட்டார்.

ஊடகங்கள் பொறுப்பாக செயல்பட்டனவா?

புல்வாமா தாக்குதல் போன்ற ஒரு சம்பவம் பொது சமூகத்தின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியதுதான். இறந்த படைவீரர்களின் குடும்பத்திடம் மட்டும் இந்த நிகழ்வு சோகத்தையும் கவலையையும் விதைக்காது, சமூகத்தின் பல்வேறு தரப்பு மக்களையும் கவலையுற செய்யும்.

இது போன்ற சம்பவங்களுக்கு பிறகு சூழ்நிலையை மிகவும் கவனமாக கையாள வேண்டும். ராஜீய ரீதியாக அணுகவேண்டும். விவேகமான நாட்டின் தலைவர் இதனை தேசிய வெறியாக மாறிவிடாமல் காக்க வேண்டும்.

இங்கு என்ன நடந்தது? சமூகத்தின் அனைத்து தரப்பும் எவ்வாறு நடந்து கொண்டன?

காட்டுத்தீ ஏற்படுத்தியுள்ள சேதங்கள்

பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் தொடர்ந்து எரிந்த காட்டுத் தீயினால் ஏறக்குறைய 3000 ஹெக்டேர் வனப்பரப்பு எரிந்து போய் உள்ளது என்கிறார் பந்திபூர் வனப்பகுதிகளில் சூழலியல் செயல்பாடுகளை முன்னெடுத்து வரும் கவுரவ வன உயிரின காப்பாளர் ராஜ்குமார்.

பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் குந்திக்கரே என்னும் வனப்பகுதியில் தொடங்கிய காட்டுத்தீ , பந்திப்பூரா, மத்தூர், நீலகோளே, கோபால்சாமி பெட்டா வரை வேகமாக பரவிவிட்டது. தீ பற்றி படர்வதற்கான முக்கியமான காரணம் காடுகளில் கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் பரவியுள்ள உண்ணிச்செடி எனப்படும் லேண்டனா காமரா. காடுகளின் மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ள இந்த களைச் செடிகளால் தீ மிக வேகமாகப் பரவுகின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :