You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"சர்ஜிகல் தாக்குதலை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தடுத்தது": பிரதமர் மோதி
கன்னியாகுமரியில் பல்வேறு திட்டங்களைத் துவக்கிவைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
புதிய பாம்பன் பாலம், தனுஷ்கோடிக்கு ரயில் பாதை, மதுரை - சென்னை தேஜஸ் ரயில் துவக்க விழா உள்ளிட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் துவக்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோதி வெள்ளிக்கிழமை கன்னியாகுமரிக்கு வந்தார். இதற்கான விழா அகஸ்தீஸ்வரத்தில் உள்ள விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஞ
இந்த விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்புத் துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதிலும் விங் கமாண்டர் அபிநந்தன் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதிலும் பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்தார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் குறித்து பேசிய மோதி, எதிர்க்கட்சிகளைக் கடுமையாக குற்றம்சாட்டினார்.
"நாம் பயங்கரவாதம் என்ற பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கிறோம். ஆனால், முன்பிருந்த நிலைக்கும் தற்போதுள்ள நிலைக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. 2004லிருந்து 2014 வரை நாடு முழுவதும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தன. ஹைதராபாத், அகமதாபாத், பெங்களூர், புனேவில் பல குண்டுகள் வெடித்தன. ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
26/11 தாக்குதலுக்குப் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், நம் காலத்தில் உரியில் நம் ராணுவம் துணிச்சலான பதிலடி கொடுத்தது. புல்வாமா சம்பவத்திற்குப் பிறகு ராணுவம் துணிச்சலுடன் நடவடிக்கை எடுத்தது" என்றார்.
"சர்ஜிகல் தாக்குதலை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தடுத்தது"
"முன்பு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டபோது, சர்ஜிகல் தாக்குதல் நடத்த ராணுவம் விரும்பியது. ஆனால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அதைத் தடுத்தது. ஆனால் இப்போது என்ன செய்தியைப் படிக்கிறீர்கள், நம் ராணுவத்திற்கு முழு சுதந்திரம் தரப்பட்டுள்ளது என்ற செய்தியைப் படிக்கிறீர்கள். புதிய இந்தியாவில் பயங்கரவாதிகளால் ஏற்படும் பாதிப்புக்கு வட்டியும் முதலுமாக திருப்பித் தரப்படும். கடந்த சில நாட்களாக நடக்கும் நிகழ்வுகள் நம் ராணுவத்தின் சாதனையை எடுத்துக்காட்டுகிறது. துரதிர்ஷ்டவசமாக சில அரசியல் கட்சிகளின் மோதி வெறுப்பு, நாட்டிற்கு எதிரான வெறுப்பாக மாறியிருக்கிறது. எல்லோரும் நம் ராணுவத்தைப் பாராட்டும்போது அவர்கள், அதனை சந்தேகப்படுகிறார்கள். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் யுத்தத்தை உலகம் ஆதரிக்கிறது. ஆனால், சில கட்சிகள் அதனை சந்தேகிக்கிறார்கள். நீங்கள் பாராட்டும் அறிக்கைகள் பாகிஸ்தானுக்கு உதவிகரமாக இருக்கிறது. இந்தியாவைக் காயப்படுத்துகிறது. இவர்களுடைய அறிக்கைகள் நாடாளுமன்றத்திலும் வானொலியிலும் மகிழ்ச்சியுடன் மேற்கோள் காட்டப்படுகின்றன" என்று கடுமையாக குற்றம் சாட்டினார்.
நம் ராணுவத்தை ஆதரிக்கிறீர்களா அல்லது சந்தேகிக்கிறீர்களா என எதிர்க்கட்சிகளிடம் கேள்வியெழுப்பிய பிரதமர் மோதி, உங்கள் அரசியலுக்காக இந்த நாட்டை பலவீனப்படுத்திவிடாதீர்கள் என்று குறிப்பிட்டார்.
அதன் பிறகு, ஊழல் குறித்துப் பேசிய பிரதமர், "போலி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. போலி பயனாளிகள் நீக்கப்பட்டுள்ளனர். ஊழல் செய்தவர்கள் பதில் சொல்ல வேண்டும்.
'ரீ-கவுன்டிங் மினிஸ்டர்' நீதிமன்றத்தில் குடும்பத்திற்காக ஜாமீன் கோரி நிற்கிறார்" என்று ப. சிதம்பரத்தை மறைமுகமாக விமர்சித்தார்.
தன்னுடைய உரையில் ராஜாஜியையும் சுட்டிக்காட்டி பிரதமர் மோதி பேசினார். "காங்கிரசின் பொருளாதாரக் கொள்கையை எதிர்த்து குரல் கொடுத்தவர் தமிழகத்தைச் சேர்ந்த ராஜாஜி. நாம் அவருடைய கனவை நிறைவேற்றும் வண்ணம் மக்களுக்கு ஆதரவான பொருளாதார கொள்கையை கொண்டுவருவதில் முனைப்பாக இருக்கிறோம்." என்றார் அவர்.
"காங்கிரஸ் அம்பேத்கரைத் தோற்கடித்தது"
எதிர்க்கட்சிகளுக்கு சமூக நீதியில் நம்பிக்கை இல்லை என்று குற்றம் சாட்டிய பிரமதர், "காங்கிரஸ் அம்பேத்கரை இரு முறை தோற்கடித்தது. அவருக்கு பாரத ரத்னா விருதை வழங்கவில்லை. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அவர்கள் வைக்கவில்லை. பா.ஜ.க. ஆதரவில் இருந்த அரசுதான் இவை இரண்டையும் செய்தது." என்று தெரிவித்தார்.
2009ல் தி.மு.கவும் காங்கிரசும் இணைந்து அமைத்த அரசில் அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்ட விதத்தை குறை கூறினார் மோதி. "பிரதமர் அமைச்சர்களைத் தேர்வு செய்யவில்லை. பொது வாழ்வில் சம்பந்தமில்லாதவர்கள் தொலைபேசி மூலம் இலாகாக்களை பகிர்ந்தளித்தார்கள்" என்று குறிப்பிட்டார்.
மத்திய அரசின் சில நலத்திட்டங்கள் குறித்து விவரித்தவர், காங்கிரசின் கடன் தள்ளுபடி வாக்குறுதியை விமர்சித்தார்.
"கிஸான் சம்மான் நிதி திட்டத்தில் இதுவரை 1 கோடியே 10 லட்சம் பேருக்கு கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த மாதம் அறிவிக்கப்பட்ட திட்டம், இந்த மாதத்திலேயே செயல்படுத்தப்பட்டிருப்பதை கற்பனைகூட செய்துபார்க்க முடியாது. இரவு பகல் பார்க்காமல் அதற்காக வேலை பார்த்திருக்கிறோம். காங்கிரஸ் அறிவிக்கும் கடன் தள்ளுபடித் திட்டம் அவ்வப்போதுதான் பலனளிக்கும். அதுவும் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை. முந்தைய மத்திய அரசின் திட்டங்கள் சிலருக்கு மட்டுமே பலனளித்தன. ஆனால், கிஸான் சம்மான் நிதி திட்டம் ஒவ்வொரு விவசாயிக்கும் சென்றடைகிறது." என்று கூறினார்.
மேலும், "30 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய வாய்ப்பாக 2014ல் முழு பெரும்பான்மையோடு ஓர் அரசு அமைந்தது. உறுதியான முடிவெடுக்கக்கூடிய அரசு வேண்டுமென்ற முடிவை மக்கள் எடுத்தார்கள். மக்கள் முன்னேற்றத்தை விரும்புகிறார்கள். கொள்கை முடக்கத்தை அல்ல. நேர்மையை விரும்புகிறார்கள் வாரிசு அரசியலை அல்ல. மக்களுக்கு வாய்ப்பு தேவை, தடை அல்ல. மக்கள் அனைவருக்குமான முன்னேற்றத்தை விரும்புகிறார்கள். வாக்கு வங்கி அரசியலை அல்ல" என்று குறிப்பிட்டவர், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மீனவர்களுக்கென தனி இலாகாவை ஏற்படுத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
"விவசாய கடன் அட்டை திட்டம் மீனவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு இஸ்ரோவினால் தயார் செய்யப்பட்ட தொடர்பு சாதனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளூர் மொழியிலும் இதில் செய்திகள் வழங்கப்படும். மீன் பிடிப்பது தொடர்பான செய்திகள் மட்டுமல்ல, தட்பவெப்பம் தொடர்பான தகவல்களும் இதன் மூலம் அளிக்கப்படுகின்றன.
மீனவர் வருவாய் உயரவேண்டுமானால், மீன் பிடி துறையில் கட்டமைப்பு மேம்பட வேண்டும். முகையூர், நாகை மீன் பிடி துறைமுகங்கள் முடிவுறும் நிலையில் உள்ளன. 2014லிருந்து இதுவரை 1900 மீனவர்களை இலங்கையிலிருந்து விடுவித்திருக்கிறோம். மீன்பிடி துறைமுகங்களை உருவாக்குவது மட்டுமல்லாமல், ஏற்கனவே உள்ள துறைமுகங்களின் கட்டமைப்பும் மேம்படுத்தப்பட்டுவருகிறது. இதன் மூலம் வரவிருக்கும் தலைமுறையின் முன்னேற்றமும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது." என்றும் மோடி குறிப்பிட்டார்.
பிரதமர் நரேந்திர மோதி இன்று தமிழகம் வருவதையொட்டி, எதிர்க்கட்சியினர் வழக்கம்போல ட்விட்டர் பிரசாரத்தை மேற்கொண்டனர். நள்ளிரவு முதலே #Gobackmodi என்ற ஹாஷ்டாக் மூலம் மோதி எதிர்ப்பு ட்விட்டர் கருத்துகளை ஒருங்கிணைத்தனர். காலை முதல் இந்த ஹாஷ்டாக் இந்திய அளவில் முதலிடத்தில் இருந்தது.
இந்தியப் பிரதமர் தமிழகம் வரும்போது ட்விட்டர் மூலம் இவ்வாறு பிரசாரம் மேற்கொள்வது இது நான்காவது முறையாகும்.
கருப்புக்கொடி போராட்டம்
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்பட அவரது கட்சியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், மக்களவை தேர்தலை ஒட்டி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவதற்காகவும் பிரதமர் நரேந்திர மோதி சற்று முன்னர் கன்னியாகுமரி வந்தடைந்தார்.
இந்நிலையில், இன்று காலை முதலே பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் அக்கட்சியினர் கண்டன முழக்கங்களை எழுப்பியதுடன், கருப்புக்கொடி காண்பித்தும், கருப்பு பலூன்களை பறக்கவிட்டும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
அப்போது பேசிய வைகோ, "பிரதமர் மோடி காவிரி பிரச்சனையில் தமிழகத்துக்கு துரோகம் செய்து விட்டார். கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணை கட்ட அனுமதி அளித்து தமிழகத்தை வஞ்சித்து விட்டார். காவிரி மண்டலத்தை ஹைட்ரோகார்பன் திட்டத்தின் மூலம் அழிக்க முயற்சிக்கிறார். முல்லைப் பெரியாறு அணையை கேரள அரசு இடிக்க முயற்சிப்பதற்கு துணை போகிறார்" என்று அவர் பேசினார்.
அதுமட்டுமின்றி, தலைவர்கள் போராடி பெற்றுத் தந்த சமூகநீதியை ஒழித்துக் கட்டும் செயலிலும் ஈடுபடும் மோதி, அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் ஒற்றுமையாக வாழும் நாட்டில் இந்துத்துவாவை திணித்து சீர்குலைக்க முயற்சிக்கிறார் என்றும், கஜ' புயலால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டபோது அனுதாபம் கூட தெரிவிக்காமல், தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் மோதி தமிழகத்துக்கு வர எந்த அருகதையும் இல்லை என்று அவர் மேலும் கூறினார்.
பிறகு, மதிமுகவினர் போராட்டம் நடத்திய இடத்துக்கு பாஜகவினர் வரவே, இருதரப்பினருக்கும் இடையே ஆரம்பித்த வார்த்தை மோதல் ஒருகட்டத்தில் கல்வீச்சாக தாக்குதலாக உருமாறியது. இதனையடுத்து களத்தில் இறங்கிய காவல்துறை அதிகாரிகள் தடியடியை நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து, வைகோ உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மதிமுகவினர் கைது செய்யப்பட்டு காவல்துறையின் வேன்களில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்