இந்தியா-பாகிஸ்தான் விமான மோதல்: ஊடகங்கள் பொறுப்பாக செயல்பட்டனவா?

    • எழுதியவர், சுஹாஸ் பால்ஷிகர்,
    • பதவி, மூத்த அரசியல் ஆய்வாளர்

(இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

புல்வாமா தாக்குதல் போன்ற ஒரு சம்பவம் பொது சமூகத்தின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியதுதான். இறந்த படைவீரர்களின் குடும்பத்திடம் மட்டும் இந்த நிகழ்வு சோகத்தையும் கவலையையும் விதைக்காது, சமூகத்தின் பல்வேறு தரப்பு மக்களையும் கவலையுற செய்யும்.

இது போன்ற சம்பவங்களுக்கு பிறகு சூழ்நிலையை மிகவும் கவனமாக கையாள வேண்டும். ராஜீய ரீதியாக அணுகவேண்டும். விவேகமான நாட்டின் தலைவர் இதனை தேசிய வெறியாக மாறிவிடாமல் காக்க வேண்டும்.

இங்கு என்ன நடந்தது? சமூகத்தின் அனைத்து தரப்பும் எவ்வாறு நடந்து கொண்டன?

எதிர்க்கட்சிகள் காண்பிக்கும் கட்டுப்பாடு

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து நடந்த நிகழ்வுகளில் மற்றொன்றும் இருக்கிறது. தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக 'முன்னாள் அரசாங்கங்களின்' மீதும், அவர்களின் தோல்விகள் குறித்தும் மறைமுகமாக 'அதிகாரப்பூர்வமான வட்டாரங்கள்' தாக்குதல் நடத்தினாலும், எதிர்க்கட்சிகள் தங்கள் எதிர்வினைகளை கட்டுப்பாட்டுனே வெளியிட்டன.

அரசாங்கத்துக்கும், எதிர்க்கட்சிகளுக்கு இருக்கும் பதற்றமான உறவுகளை வைத்துப் பார்த்தால், இது ஒரு பெரிய விஷயம்தான்.

புல்வாமா தாக்குதல் குறித்து, நேரடியாக சில முக்கிய கேள்விகளை கேட்பதை எதிர்க்கட்சிகள் தாமதப்படுத்தின.

இது எப்போது தேசிய நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர்களுக்குள்ள பகுத்தறிவை காண்பிக்கிறது.

ஆட்சியாளர்களின் ஆவேசம்

ஆனால், இந்திய பிரதமர் பொறுப்புமிக்க ஆட்சியாளரா அல்லது தனது கட்சிக்கான பிரசாரகரா என்று வித்தியாசப்படுத்த முடியாத அளவுக்கு அவரது செயல்கள் உள்ளன. புல்வாமா தக்குதலுக்கு பின்பு அவர் 'நமது கட்சி, நமது கட்சி மற்று நமது அரசு மட்டும்தான் இந்த நாட்டின் உண்மையான பாதுகாவலர்கள்' என்று வலியுறுத்தினார். போர் நினைவு சின்னத்தை திறந்து வைத்த போதும் அவர் இப்படித்தான் பேசினார்.

ஒரு நாட்டை வழிநடத்தும் தலைவரே இவ்வாறாக பேசுவாரென்றால், அவரது கட்சியின் மூத்த தலைவர்கள் உயிர்த்தியாகம் செய்த ராணுவத்தினருக்கான உண்மையான அஞ்சலி இந்த வான் தாக்குதல் என்று கருதுவதில் எந்த வியப்பும் இல்லை.

ஊடகமா அல்லது அரசின் சொ.ப.செவா?

பாலகோட் விவகாரத்தில் ஊடகங்களின் பொறுமையின்மை உண்மையில் கவலை அளிக்கக் கூடியது. ஊடகங்கள் இவ்வாறாக செயல்படுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பு மும்பையில் நடந்த பயங்கரவாத சம்பவத்தின் போதும், ஊடகங்கள் இவ்வாறாகவே நடந்து கொண்டன.

இந்த முறை ஊடகங்கள் தங்களது பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து கொள்ளும் நோக்கத்துடனும் தேசியவாதத்திற்கு ஏகபோக உரிமை கொண்டவர்கள் தாங்கள்தான் என்பது போலவும் அவை நடந்து கொண்டன.

செய்தி சேகரிப்பது, கேள்வி கேட்பது ஆகிய அடிப்படை பணிகளை கடந்து ஊடகங்கள் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர்கள் போல நடந்து கொண்டன. பழிவாங்குதல் என்ற பதத்தை அரசாங்கம் பயன்படுத்துவதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் போரை கொண்டாடி ஊடகங்களும் செய்தி வெளியிட்டன.

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு தீவிர தேசியவாத அலை நாடெங்கும் பரவியது. ஆனால். இதை ஊடகங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டன. தேசிய வெறியை ஊட்டுவது ஊடகத்தின் பணி அல்ல.

இதற்கடுத்து சமூக ஊடகங்கள். எப்போது போர் தொடங்கும் என்ற தொனியில் கருத்துகளை வெளியிட்டன.

புல்வாமா தாக்குதலை அடுத்து தொலைக்காட்சி சானல்களும் போர் வெறியை ஊட்டுவது போல காணொளிகளையும், சித்தரிக்கப்பட்ட காட்சிகளையும் வெளியிட்டன.

இதற்கு நாளிதழ்களும் விதிவிலக்கல்ல. பாகிஸ்தன் முடிக்கப்பட வேண்டும் என்ற தொனியில் அவை செய்திகள் வெளியிட்டன.

அடுத்து என்ன?

இதற்கெல்லாம் பிறகு, உண்மையான சிக்கல்கள் வெளியாகின்றன. துரதிஷ்டவசமாக, ஊடகம் மற்றும் அரசாங்கத்தினால் ஒற்றை சார்பான சூழ்நிலை உருவாக்கப்பட்டது. மேலும், புதிய சிக்கல்களை எதிர்கொள்ளும் திறனை நம் சமூகம் இழந்திருக்கலாம்.

பழி என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. விமானத்தாக்குதல் குறித்த விவாதம் மீண்டும் மீண்டும் தீர்க்கமாக கூறப்படுகிறது. ஆனால், நம் முன் இருக்கும் உண்மையான பிரச்சனைகள் குறித்து நாம் என்ன செய்யப் போகிறோம்? இதை அனுமதிக்கப் போகிறோமா அல்லது முயற்சி செய்து கட்டுப்படுத்தப் போகிறோமா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: