ஸ்டெர்லைட் வழக்கு கடந்து வந்த பாதை

பட மூலாதாரம், ARUN SANKAR
தூத்துக்குடி மாவட்ட சிப்காட்டில் அமைந்திருக்கும் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் இன்று (திங்கட்கிழமை) உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவுள்ள நிலையில், இந்த வழக்கு மற்றும் இந்த ஆலை தொடர்பான பிரச்சனைகள் குறித்த முக்கிய நிகழ்வுகளை இங்கு காணலாம்.
ஸ்டெர்லைட் ஆலை எப்போது தொடங்கப்பட்டது?
`வேதாந்தா` உலகின் மிகப்பெரிய உலோகம் மற்றும் சுரங்கத் தொழில் நிறுவனம். அதன் உரிமையாளர் அனில் அகர்வால். பாட்னாவில் பிறந்த இவர், பள்ளிப்படிப்பை முடித்ததும், 1972 ஆம் ஆண்டு தந்தையுடன் அலுமினிய தொழிலில் ஈடுப்பட்டார். பின் மும்பைக்கு சென்றவர், வேதாந்தா நிறுவனத்தை தொடங்கினார். லண்டன் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் இந்திய நிறுவனம் இது.
வேதாந்தாவின் துணை நிறுவனம்தான் ஸ்டர்லைட், இது குஜராத்தின் சில்வஸா மற்றும் தமிழ்நாட்டின் தூத்துக்குடி ஆகிய இரு பகுதிகளில் இயங்குகிறது. தூத்துக்குடியில் உள்ள ஆலை ஓர் ஆண்டுக்கு 4 லட்சம் மெட்ரிக் டன் தாமிரத்தை உற்பத்தி செய்கிறது. 2017 ஆம் நிதியாண்டில் அதன் வர்த்தகம் 11.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.


மஹாராஷ்ட்ரா தொழில் வளர்ச்சி நிறுவனம், முதலில் 1992ஆம் ஆண்டு, ஸ்டர்லைட் நிறுவனத்துக்கு கடலோர பகுதியான ரத்னகிரியில் 500 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது.
ஆனால், உள்ளூர் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்ததை அடுத்து, மஹாராஷ்ட்ர ஆரசு இதற்கான ஒரு ஆய்வு குழுவை அமைத்தது. அவர்கள் அளித்த பரிந்துரையின்படி, 1993 ஆம் ஆண்டு கட்டுமான பணிகளை நிறுத்தும்படி ஆட்சியர் ஸ்டர்லைட் நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பினார்.

பட மூலாதாரம், Getty Images
1994ஆம் ஆண்டு தமிழ்நாடு மாசுக் கட்டுபாட்டு வாரியம் இந்நிறுவனத்துக்கு தடையில்லா சான்றிதழ் அளித்தது. சூழலியல் மாசை கருத்தில் கொண்டு மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கி.மீ தொலைவில்தான் இந்நிறுவனம் அமைக்கப்பட வேண்டும் என்றது. ஆனால், இந்நிறுவனம் மன்னார் வளைகுடாவிலிருந்து 14 கி.மீ தொலைவிலேயே அமைக்கப்பட்டது.
போராட்டங்கள் மற்றும் வழக்குகள்
ஸ்டெர்லைட் நிறுவனம் சூழலியல் மாசை உண்டாக்குவதாக குற்றஞ்சாட்டி, நேஷனல் ட்ரஸ்ட் ஆஃப் க்ளீன் என்விரான்மென்ட், உள்ளிட்ட பல்வேறு தரப்புகளில் இருந்து வழக்குகள் பதியப்பட்டன.

பட மூலாதாரம், TWITTER/TN YOUNGSTERS TEAM
1997-2012 ஆம் ஆண்டு காலத்தில் சில ஆண்டுகள் முறையான அரசு ஒப்புதல்களை புதுப்பிக்காமலும் ஆலையை நடத்தியதுதான் இந்த நிறுவனத்தின் மீதான பிரதான குற்றச்சாட்டு.
1996ன் பிற்பகுதியில் ஸ்டெர்லைட் ஆலை இயங்க ஆரம்பித்ததிலிருந்தே சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் இதனை எதிர்த்து அவ்வப்போது போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 2013 மார்ச் 23ஆம் தேதியன்று ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்தவர்களுக்கு மூச்சுத் திணறலும் கண் எரிச்சலும் ஏற்பட்டது.
இதையடுத்து தொழிற்சாலை மூடப்பட்டது. அப்போதும் போராட்டங்கள் நடைபெற்றன. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த குழுவின் ஒப்புதலையடுத்து மீண்டும் இந்தத் தொழிற்சாலை இயங்க ஆரம்பித்தது.

பட மூலாதாரம், Reuters
2018-ஆம் ஆண்டு இந்த ஆலையை மூட கோரி ஏராளமான போராட்டங்கள் நடந்தன. மார்ச் மாதத்தில் நடந்த போராட்டம் நாடு முழுவதிலும் பலரின் கவனத்தை ஈர்த்தது.
மிகவும் முக்கிய நிகழ்வாக மே மாதம் நடந்த போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து தமிழக அரசால் ஆலை மூடப்பட்டது.
2018 மே மாதம் 28ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஏராளமான கண்டனங்கள் மற்றும் கேள்விகள் எழுந்தன. நீதிமன்றமும் துப்பாக்கிசூடு தொடர்பாக வினவியது.
அதேவேளையில் போராட்டத்தின்போது கலவரத்தில் ஈடுபட்டதாகவும், கலவரத்திற்கு காரணமாக இருந்ததாகவும், சட்டத்திற்கு புறம்பாக அரசு சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும் 200க்கும் மேற்பட்ட வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர். பலர் கைது செய்யப்பட்டனர்.


ஸ்டெர்லைட் ஆலையை மூடியது செல்லாது என்று கூறி அந்த ஆலையை நடத்தி வந்த வேதாந்தா குழுமம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.
கடந்த நவம்பர் மாதத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட தருண் அகர்வால் குழுவினர், ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்கலாம் என்று அறிக்கை தாக்கல் செய்தனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்தது.

பட மூலாதாரம், VEDANTA
ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ளதுடன், தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மீண்டும் ஆலையைத் திறப்பதற்கான வழிமுறைகளை வகுத்து, ஆலை இயங்குவதற்கான அனுமதியை மூன்று வார காலத்துக்குள் வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.


ஆலை மூடப்பட்டதற்காக தமிழக அரசு தெரிவித்த காரணங்கள் ஏற்புடையதாக இல்லை என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை கண்காணிக்கவும் தீர்ப்பாயம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து செயற்பாட்டாளர் பாத்திமா சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் முறையீடு செய்கிறார். இதன் அடிப்படையில், தாம் விசாரித்து உத்தரவிடும் வரையில் இப்போதுள்ள நிலையே தொடரவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், உச்ச நீதிமன்றத்தை அணுகியது. இதற்கிடையே, தமிழக அரசும் பசுமைத் தீர்ப்பாயத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகியது.
இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாரிமன், நவீன் சின்ஹா அடங்கிய அமர்வு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு செல்லும் என்றும் ஆனால், இந்த வழக்கை விசாரித்து உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பே இறுதியானது என்றும் உத்தரவிட்டது.
இது அந்த ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில், உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தியது.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
நிறுவனம் சொல்வது என்ன?
தூத்துக்குடி மக்கள் பலர் ஒன்று சேர்ந்து நடத்திய போராட்டத்தில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ள மக்கள் தொடர்பு அதிகாரி எம். இசக்கியப்பன், ஆலையின் விரிவாக்கத்திற்கு தேவையான எல்லா அனுமதிகளையும் அரசாங்கத்திடம் பெற்றுள்ளதாக தனது அறிக்கையில் கூறுகிறார்.
''ஆலையின் கழிவுகள் எந்த விதத்திலும் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் நீடித்த பயன்பாட்டிற்கு எடுத்துச்செல்கிறோம். ஆலைக் கழிவுகளை தீவிரமாகக் கண்காணித்து நிலம், நீர், காற்று என சுற்றுப்புறத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கிறோம்.'' என்கிறது அந்நிறுவனம்
பிற செய்திகள்:
- ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை - உச்ச நீதிமன்றம் உத்தரவு
- ‘ஒரே ஒரு நிமிடம் ஒதுக்குங்கள்’ - நீங்கள் இங்கு வாழ விரும்பலாம்
- ஜப்பானில் குச்சிகளை தேடும் போட்டி: நிர்வாணமாக போராடும் ஆண்கள்
- இரண்டு தந்தையர், ஒரு தாய், இரட்டை குழந்தைகள்: எப்படி சாத்தியமானது?
- 'மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல்தான் இலக்கு' - ரஜினிகாந்த்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












