ஜப்பானில் குச்சிகளை தேடும் போட்டி: நிர்வாணமாக போராடும் ஆண்கள் மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
ஜப்பானில் நடந்த பாரம்பரிய திருவிழா ஒன்றில், கிட்டத்தட்ட நிர்வாணமாக இருந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் இரண்டு புனித குச்சிகளை தேடும் போட்டியில் ஈடுபட்டனர்.
ஜப்பானின் ஒகாயாமாவிலுள்ள பிரபல புத்த மத ஆலயம் ஒன்றில் நடைபெற்ற இந்த திருவிழாவில், அரைக்கச்சைகளை அணிந்திருந்துக்கொண்டு சுமார் 10,000 ஆண்கள் பங்கேற்றிருப்பர் என்று கருதப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் புனித குச்சிகளை எடுக்க செல்வதற்கு முன், போட்டியில் பங்கேற்கும் அனைவரும் தண்ணீரில் மூழ்கி எழுகின்றனர்.
'சிங்கி' என்றழைக்கப்படும் சுமார் 20 செ.மீ நீளமுள்ள புனித குச்சிகளை கண்டெடுப்பவர் அந்த ஆண்டின் அதிர்ஷ்ட நபராக கருதப்படுவார்.

"ஜல்லிக்கட்டு கோவை பகுதிக்கு அவசியமற்ற ஒன்று"

ஒவ்வொரு பகுதியிலும் இருப்பதுதான் அந்த பகுதிக்குரிய நாட்டு மாடுகள். அந்த கால்நடை சார்ந்த விளையாட்டுகள் அந்தந்த பகுதியில் நடப்பதுதான் பாரம்பரியம் என்பதால் கோவையில் ஜல்லிக்கட்டு தேவையில்லை என்றே கருதுகிறேன் என்று கோவையில் நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டு குறித்து பேசியுள்ளார் கார்த்திகேய சிவசேனாபதி.
இந்த ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாடுகள் வந்துள்ளதாகவும், 600கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் கலந்து கொள்கின்றனர் என்றும், விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். சென்ற வருடம் முதன் முதலாக ஜல்லிக்கட்டு நடைபெற்றது, இது இரண்டாம் வருடம்.
கொங்கு பகுதிக்கும், ஜல்லிக்கட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன, இந்தப் பகுதியில் ஜல்லிக்கட்டு நடைபெற்றதற்கான வரலாறு உள்ளதா என்பது குறித்து, சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் கார்த்திகேய சிவசேனாபதி அவர்களிடம் பிபிசி தமிழ் பேசியது.

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ரத்து

பட மூலாதாரம், @RAJNATHSINGH
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பிரிவினைவாத தலைவர்கள் ஐந்து பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் திரும்ப பெற்றுள்ளது.
பிரிவினைவாத தலைவர்களான மிர்வாஸ் உமர் ஃபரூக், அப்துல் கனி பட், பிலால் லோன், ஹஷிம் குரேஷி, மற்றும் ஷபிர் ஷா ஆகியோருக்கான பாதுகாப்புகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
ஆனால் இதில் பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதி சையத் அலி ஷா கிலானியின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
இந்த ஆணையின்படி, ஞாயிறு மாலையுடன் பிரிவினைவாத தலைவர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து பாதுகாப்பு மற்றும் வாகனங்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளப்படும்.

பேருந்தில் பணிக்கு செல்லும் இலங்கையின் முன்னாள் அமைச்சர்

சொகுசு வாகனங்கள், முழு நேரப் பாதுகாப்பு, ஏராளமான உதவியாளர்கள் என, வசதியான வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் ஒருவர், தற்போது தான் முன்பு ஆற்றி வந்த அரச பணியில் இணைந்து, அலுவலகத்துக்கு தினமும் பேருந்தில் பயணித்துக்கொண்டிருக்கிறார் என்று சொன்னால், அதனை நம்புவதற்கு சற்று கடினமாகவே இருக்கும்.
இலங்கையின் வடக்கு மாகாண அமைச்சராக பதவி வகித்த அனந்தி சசிதரன், இப்போது இப்படித்தான் தனது அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான 'எழிலன்' எனப்படும் வேலாயுதம் சசிதரனின் மனைவிதான் அனந்தி சசிதரன்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் முகாமைத்துவ உதவியாளராக, பணிபுரிந்து வந்த அனந்தி, வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, 2013ம் ஆண்டு, தனது பணியிலிருந்து ஐந்து ஆண்டுகள் ஊதியமற்ற விடுமுறை பெற்றிருந்தார்.
விரிவாக படிக்க: பேருந்தில் பணிக்கு செல்லும் முன்னாள் அமைச்சர்

'மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல்தான் இலக்கு'

பட மூலாதாரம், Getty Images
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்றும் தமிழக சட்டமன்றத் தேர்தலே தமது இலக்கு என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இந்தத் தேர்தலில் தமது ஆதரவு எந்தக் கட்சிக்கும் இல்லை என்றும் ரஜினி மக்கள் மன்றம், ரஜினி ரசிகர் மன்றம் ஆகியவற்றின் பெயரையோ கொடியையோ எந்தக் கட்சிக்கும் ஆதரவாகப் பிரசாரம் செய்ய யாரும் பயன்படுத்தக்கூடாது என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
இது குறித்து பிபிசியிடம் பேசிய தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, நதிகளை இணைத்தால் ஒரு கோடி ரூபாய் தருவதாக ரஜினிகாந்த் கூறி பல ஆண்டுகள் ஆகின்றன. அந்தப் பணத்தை வங்கியில் போட்டிருந்தால் அது இந்நேரம் பல கோடிகளாகியிருக்கும், என்று கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












