காஷ்மீர் தாக்குதல்: ’ஓர் உயிரை இழக்கும் வலி உங்களுக்கு தெரியாது’ - ராணுவ மேஜரின் உருக்கமான பதிவு

பட மூலாதாரம், MAJ DP SINGH
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து அதற்கு பழிவாங்க வேண்டும் என்றும், போர்தான் ஒரே தீர்வு என்றும் சமூக ஊடகங்களில் பலர் பதிவிட நாம் பார்த்து வருகிறோம்.
ஆனால், போர் என்பது அவ்வளவு எளிதான ஒன்றல்ல என்றும், ஒரு ராணுவ வீரரின் வலியையும் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் மேஜர் டி.பி.சிங்.
மேஜர் டி.பி.சிங்-கின் ஃபேஸ்புக் பதிவிலிருந்து...
நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். நாங்கள் ராணுவ வீரர்களுடனும் அவர்களின் குடும்பத்தினருடனும் துணை நிற்கிறோம். இந்த கொடூரமான தாக்குதலுக்கு பழிவாங்கியே தீர வேண்டும்.
சில நாட்களுக்கு பிறகு அனைவரும் தங்கள் வேலைகளை பார்க்க சென்றுவிடுவர். இது எல்லாமே ஒரு வர்த்தகம் என்றும் கூட சொல்லலாம்.
அரசியல் கட்சியோ, ஊடகங்களோ, அல்லது பொது மக்களோ யாராக இருந்தாலும் ஓர் உயிரை இழக்கும் வலியையோ அல்லது கை கால்களை இழக்கும் வலியையோ உணரப்போவதில்லை.
ஒரு சிப்பாய் சிரித்துக் கொண்டே தனது வாழ்க்கையை இந்த நாட்டிற்காகவும், நமது தேசியக் கொடிக்காகவும் அர்பணிக்க பயிற்றுவிக்கப்படுகிறான்.
ஆனால், இது எத்தனை காலத்துக்கு என்பதுதான் கேள்வி?

பட மூலாதாரம், MAJ DP SINGH
ஒட்டுமொத்த அமைப்பையும் மேம்படுத்த நாம் என்ன மாதிரியான முயற்சிகளை மேற்கொள்கிறோம் என்பதே கேள்வி.
இன்று காலை ஒரு விவாத நிகழ்ச்சிக்காக நான் ஒரு செய்தி தொலைக்காட்சிக்கு சென்றிருந்தேன்.
அந்த தொலைக்காட்சி தொகுப்பாளர், “நீங்கள் புல்வாமாவின் புகைப்படங்களை பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். அதனால்தான் பழிவாங்கலே இதற்கான தீர்வு என்று நான் கூறுவதை நீங்க ஒப்புக் கொள்ள மறுக்கிறீர்கள்” என்று சொன்னார்.
ஆனால், நான் சமீபத்தில் நடந்த போர் ஒன்றில் காயமடைந்த ராணுவ மேஜர் என்று அவருக்கு தெரிந்திருக்கவில்லை.
ஒரு ராணுவ வீரர் தனது வாழ்க்கையை தியாகம் செய்ய தயாராகவே இருப்பார்.
ஆனால், அதே சமயம், காஷ்மீர் இளைஞர்கள், தீவிரவாதிகளாக மாறாமால் நசிர் வானியை போன்று மாறவும், பதக்கங்களை பெறவும் ஆசைப்பட வேண்டும்.

பட மூலாதாரம், Image copywrite@NARENDRAMOD
இந்த நிலையை மாற்ற முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். எனது பைத்தியக்கார பக்கத்து வீட்டுக்காரர் எனது வீட்டில் நுழைந்து எமது இளைஞர்களை மூளைச் சலவை செய்யும்போது என்னால் அதை தடுக்க முடியவில்லை என்றால் என்னிடம் ஏதோ தவறுள்ளது.
40 குடும்பங்கள் அழிக்கப்பட்டுவிட்டன, நாம் தீர்வு காணவில்லை என்றால் இன்னும் பல குடும்பங்கள் அழிந்துபோகும்.
பழிவாங்க வேண்டும் என்று கூறுவதற்கு முன்னால், ராணுவத்தினரின் குடும்பங்களிடம் கேளுங்கள். அவர்களின் பெற்றோரிடமும், மனைவியிடம், பிள்ளைகளிடம் கேளுங்கள் அவர்களின் ஹீரோ அவர்களுடன் இல்லை என்றால்? அதற்கு அவர்கள் தயாரா என்று?
அடுத்த தலைமுறைக்கு நேர்மறையான சிந்தனைகளை தரவில்லை என்றால், தாக்குதல், பதில் தாக்குதல் பழிவாங்குதல் என்று மீண்டும் மீண்டும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.


உயிரையும், கை கால்களையும் இழக்கின்ற வலியையும் அதன்பின் உங்களுக்கு கிடைக்க வேண்டிய நீதிக்காகவும், நியாயமான சலுகைக்காவும் நீதிமன்றத்தில் கதவுகளை தட்டும் வலியையும் யாராலும் உணர முடியாது.
ராணுவ வீரர் உயிரிழக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம் ஆனால் அவரின் விதவை மனைவி அவருக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதிய தொகைக்காகவும், நியாயமான சலுகைக்காகவும் அலைந்து திரிய வேண்டும்.
சில இடங்களில் ராணுவ வீரரின் உடல் கிடைக்கவில்லை என்றால் அவரின் மனைவி அதை நிரூபிக்க வேண்டும். ஓய்வூதியம் கிடைக்க வேண்டும் என்றால் அவரின் உடலை கொண்டுவர வேண்டும்.
நமது சிப்பாய்கள் உயிரிழக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம் ஆனால், போரில் காயம்பட்டவர்கள் நியாயமான ஓய்வூதியத்தை பெற வேண்டும் என்றாலும் நீதிமன்றம் செல்ல வேண்டும்.

பட மூலாதாரம், MAJ DP SINGH
நீதிமன்றத்தில் நான் போரில் காயமடைந்தவன் என்பதை நிரூபித்து எனக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதியத்தை பெற ஏழு வருடங்கள் ஆனது.
இம்மாதிரியான 1000 வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. மாற்றுத்திறனாளிகளான சிப்பாய்கள் மீதுள்ள தேவையற்ற வழக்குகளை திரும்பப் பெறுவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்தும், வழக்குகள் இன்றளவும் திரும்பப்பெறப்படவில்லை.
சிப்பாய்கள் இறக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம் ஆனால் அவர்கள் குழந்தைகளின் கல்விக்கான உதவித்தொகை அரசுக்கு சுமையாக தேோன்றுகிறது.


ஓர் உயிரை விளையாட்டாக நினைத்து ராணுவத்தினரை கொன்றுவிடாதீர்கள்.
ராணுவத்தினரும், சிஆர்பிஎஃபும் என்ன செய்ய வேண்டும்? எப்போது செய்ய வேண்டும்? என்று அவர்களுக்கு தெரியும்.
தயவுசெய்து அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் கூற வேண்டாம். சூழ்நிலைக்கு தகுந்த நடவடிக்கைகளை அவர்கள் எடுப்பார்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












