'அதிமுக கூட்டணி குறித்து இன்னும் ஓரிரு நாளில் அறிவிப்பு' : ஓ.பன்னீர்செல்வம்

O Panneerselvam

பட மூலாதாரம், Tndipr

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினகரன் - ஓரிரு நாளில் கூட்டணி அறிவிப்பு

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் கூட்டணி குறித்து இன்னும் ஓரிரு நாளில் தெரிவிக்கப்படும் என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கூட்டணி குறித்து தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவைக் கேட்பீர்களா என்ற கேள்விக்கு, பன்னீர்செல்வம் பதில் அளிக்கவில்லை என்று தினகரன் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை

இந்து தமிழ் - "மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள்"

ஆதிச்சநல்லூர்

தமிழகத்தின் பாரம்பரியங்களை வெளிப்படுத்துவதில் மத்திய அரசு ஆர்வம் இல்லை போல் தெரிகிறது என, உயர் நீதிமன்ற கிளை கண்டனம் தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்த தொல்லியல்துறைக்கு உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், ஆதிச்சநல்லூரில் அகழாய்வு முடிந்து 16 ஆண்டுகள் முடிந்தும் இதுவரை அகழாய்வு அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இது தொடர்பாக நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும் அறிக்கை தாக்கல் செய்வதில் மத்திய அரசு ஆர்வமாக இல்லை. தமிழகத்தின் பாரம்பரியத்தை வெளிடுப்படுத்தும் ஒவ்வொரு அகழாய்வுக்கும் நீதிமன்றத்தை அணுக வேண்டியுள்ளது.

ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை சமர்ப்பிக்க பணியிலிருந்து ஓய்வு பெற்ற தொல்லியல் அலுவலர் சத்தியமூர்த்திக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் சத்தியமூர்த்திக்கு மத்திய அரசு எந்த ஒத்துழைப்பும் வழங்கவில்லை. ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால பொருட்கள் வயதை கண்டறியும் சோதனைக்காக புளோரிடாவுக்கு அனுப்பவில்லை. இவற்றை பார்க்கும் போது தமிழகத்தின் பாரம்பரியங்களை வெளிப்படுத்துவதில் மத்திய அரசு ஆர்வம் இல்லாம் இருப்பது போல் தெரிகிறது" என்று நீதிபதிகள் தெரிவித்ததாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை

தினத்தந்தி - "முதலமைச்சருக்கு கடிதம் எழுதி விட்டு தபால் ஊழியர் தற்கொலை"

"முதலமைச்சருக்கு கடிதம் எழுதி விட்டு தபால் ஊழியர் தற்கொலை"

பட மூலாதாரம், Getty Images

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தபால் ஊழியர் ஒருவர் முதலமைச்சருக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"குமரி மாவட்டம் தெங்கம்புதூர் பணிக்கன்குடியிருப்பை சேர்ந்தவர் சுந்தரமாணிக்கம் (வயது 60). தபால் ஊழியர். கடந்த 9-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் சுந்தரமாணிக்கம் உடையப்பன் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு முந்திரி தோட்டத்தில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். விஷம் குடித்து அவர் தற்கொலை செய்துள்ளார். மேலும் சுந்தரமாணிக்கம் சட்டைப்பையில் இருந்த உருக்கமான கடிதத்தை சுசீந்திரம் போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயருக்கு எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், கந்து வட்டி கொடுமையால் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக எழுதி வைத்துள்ளார். கந்து வட்டி கொடுமைக்கு, என்னுடைய தற்கொலை தான் கடைசியாக இருக்க வேண்டும். ஜெயலலிதா ஆட்சியை நடத்தி வரும் நீங்கள் கந்து வட்டியை ஒழித்து கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சருக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், அவரிடம் கந்து வட்டி வசூலித்த நபர்களின் பெயர்களையும் விலாவாரியாக தெரிவித்துள்ளார்" என்று அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

தினமணி: "மீண்டும் நிதியமைச்சர் பொறுப்பை ஏற்றார் அருண் ஜேட்லி"

அருண் ஜேட்லி

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, அருண் ஜேட்லி

மத்திய நிதித்துறை மற்றும் நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சராக அருண் ஜேட்லி வெள்ளிக்கிழமை மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

"மருத்துவ சிகிச்சைக்காக கடந்த ஜனவரி 13-ஆம் தேதி அவர் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார். இந்நிலையில், சிகிச்சை முடிந்து நாடு திரும்பியதை அடுத்து அருண் ஜேட்லி மீண்டும் நிதித்துறை பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையின் பேரில் அருண் ஜேட்லி மீண்டும் நிதியமைச்சர் பொறுப்பை வகிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார் என்று குடியரசுத் தலைவர் மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். முன்னதாக, அவர் துறை ஏதும் இல்லாத மத்திய அமைச்சராக இருந்தார்.

நிதியமைச்சர் பொறுப்பை ஏற்றவுடன், தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாதுகாப்புத் துறைக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஜேட்லி பங்கேற்றார்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :