அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்: '60 வயதில் ரூ. 3000 பெறுவது என்ன பயன் தரும்?'

ராணி
படக்குறிப்பு, ராணி
    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

சென்னையை சேர்ந்த 52 வயதான வீட்டுவேலைத் தொழிலாளி ராணி, மத்திய அரசின் இடைக்கால நிதி அமைச்சர் பியூஷ் கோயல் வாசித்த நிதிநிலை அறிக்கை பற்றி அறிந்திருக்கவில்லை. எப்போதும் போலவே நான்கு வீடுகளில் வேலை செய்துவிட்டு, மாத இறுதியில் செலுத்தவேண்டிய வட்டியைப் பற்றி யோசித்தபடி இருந்தார்.

ராணியின் நண்பர்கள் வட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மத்திய அரசு ஓய்வூதியம் வழங்கவுள்ளது என்ற செய்தியை கேள்விப்பட்டதும், மேலும் தகவல்களை கேட்டு தெரிந்துகொண்டார்.

''எங்களை போன்ற அமைப்பு சாராத வேலையில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு பென்ஷன் கொடுக்கிறார்கள் என்றபோது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் இந்த 18 வயது அல்லது 29 வயதில் உள்ளவர்கள்தான் இந்த திட்டத்தில் சேரமுடியுமாம். 60வயதை எட்டும்போது தொழிலாளிக்கு பென்ஷனாக ரூ.3,000 கொடுப்பார்கள், அதற்கு ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர்கள் ரூ .1,200 செலுத்தவேண்டுமாம். அதிலும், மாத வருமானம் அந்த தொழிலாளிக்கு ரூ.15,000 வரை கிடைப்பவராக இருக்கவேண்டும் என்ற விதிமுறைகளை தெரிந்துகொண்ட போனது, ஏமாற்றமாக இருந்தது,''என்கிறார்.

மகிழ்ச்சியில் இருந்து ஏமாற்றம்

இந்தியாவின் மொத்த உற்பத்தியில் பாதியை தருபவர்கள் ராணியைப் போல வீட்டுவேலை, பாய்பின்னுதல், குப்பை பொறுக்குவது, பழம் விற்பது, கைத்தறி நெசவாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் என பலதரப்புபட்ட உடல்உழைப்பை மேற்கொள்ளும் தொழிலாளர்கள் என அமைச்சர் தனது உரையில் கூறியுள்ளார். சுமார் 42 கோடி மக்கள் இதுபோல அமைப்பு சாராத வேலைகளை செய்கிறார்கள் என்றும் அவர்களில் சுமார் பத்து கோடி தொழிலாளர்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த பென்ஷன் திட்டம் பயனளிக்கும் என்றும் கூறியுள்ளார்.

உடனடியாக அரசு ரூ.500 கோடி வரை இந்த திட்டத்திற்கு ஒதுக்கியுள்ளது என்றும் அறிவித்தார் அமைச்சர் கோயல். ஆனால் இந்த திட்டத்தால் தன்னை போன்ற முறைசாரா தொழிலாளர்களுக்கு பயன் குறைவு என்கிறார் ராணி.

ராணி

வீட்டு வாடகையை குறைத்தால் போதும்

''எங்களைப் போன்றவர்கள் தினசரி கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு வாழ்பவர்கள். அதிலும் ரூ.15,000 வரை பெறுபவர்கள் 100ல் ஒருவராகதான் இருப்பார்கள். மாதவருமானம் ரூ.15,000 கிடைத்தால், எந்த நிதி உதவியும் கேட்காமல் நானே என் வயதான காலத்திற்காக பணத்தைசேர்த்துக் கொள்ளமுடியும். அரசாங்கம் எங்களைப் போன்ற தொழிலாளர்களிடம் கருத்து கேட்டு இதுபோன்ற திட்டங்களை கொண்டுவரலாம். நான்கு வீடுகளில் வேலைசெய்கிறேன். ரூ.8,000 முதல் ரூ.10,000 வரைதான் சம்பளம் கொடுக்கிறார்கள். வீட்டு வாடகையாக ரூ.5,000 செலவாகிவிடுகிறது. என் கணவர் வெல்டிங் வேலை செய்வதால், இருவரின் வருமானத்தைக் கொண்டு அவ்வப்போது கடன் வாங்கி வாழ்கிறோம்,''என தனது வருமான நிலவரம்பற்றி பேசுகிறார் ராணி.

ராணியின் ஒரு நாள் வேலை என்பது காலை எட்டு மணிக்கு தொடங்கி மாலை 5மணிவரை நீடிக்கிறது. விடுப்பு என்பது எப்போதும் கிடையாது. விடுப்பு எடுத்தால் சம்பளம் குறைக்கப்படும் என பல கட்டுப்பாடுகள் உள்ளதாக கூறுகிறார். ''பென்ஷன் திட்டத்தில் சேருபவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ரூ.1,200 செலுத்தவேண்டும், அரசாங்கம் ரூ.1,200 செலுத்தும் என்கிறார்கள். ஆனால் 60வயதில் பென்ஷனாக ரூ3,000 அளிப்பதால் எந்த பயனும் இல்லை. 60 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் எங்களைப் போன்றவர்களின் நிலையை பற்றி அரசு எதுவும் பேசவில்லை. வேலைசெய்ய முடியாமல், உடல்தளர்ந்த நேரத்தில் , குறைந்தபட்சம் எங்களுக்கு வீட்டுவாடகையை குறைக்க வழிசெய்தால், எங்களுக்கு உதவியாக இருக்கும்,'' என்கிறார் ராணி.

அமைப்புசாரா தொழிலாளர்களின் உரிமைகளுக்காக இயங்கிவரும் சமூக ஆர்வலர் கீதாவிடம் ராணியின் நிலையை விவரித்தபோது மேலும் பல தகவல்களை அளித்தார்.

ராணி

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக மத்திய அரசு அறிவித்துள்ள பென்ஷன் திட்டம், ஏற்கனவே செயலில் இருந்துவரும் அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தின் புதுவடிவம் என்கிறார்.

''2015ல் மத்திய அரசு கொண்டுவந்த அடல் பென்ஷன் யோஜனாவின் அதே வடிவம்தான் இந்த திட்டத்திலும் உள்ளது. பழைய திட்டத்தில் பென்ஷன் பெற ஒருவர் ஆண்டுக்கு ரூ.1,000 செலுத்தவேண்டும், புதிய திட்டத்தில் ரூ,1,200 செலுத்தவேண்டும். பல தொழிலாளர் சங்கங்கள் அடல் பென்ஷன் திட்டத்தை நீக்கவேண்டும் என கோரிக்கை வைத்து வந்தோம். தற்போது புது பெயரில் இந்த திட்டத்தை அறிமுகம் செய்கிறார்கள்,''என்கிறார் கீதா.

ரூ.3,000 மதிப்பு என்னவாக இருக்கும்?

அமைப்பு சாரா வேலையில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு நிரந்தர வருமானம் கிடையாது என்று கூறும் கீதா, தேர்தல் வரும் நேரத்தில் வாக்குகளை பெறுவதற்காக புதுபெயரில் அரசு திட்டங்களை கொண்டுவருகிறது என்கிறார்.

''தொழிலாளர்களின் மீது அக்கறை கொண்ட அரசாக இருந்தால், கடந்த ஐந்து ஆண்டுகளில் அமைப்புசாரா தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு பல உதவிகளை செய்திருக்கலாம். அமைப்பு சாரா தொழில் என்பதில் பல வகை உண்டு, அனைத்து தொழிலாளர்களையும் ஒரே அமைப்பின் கீழ்கொண்டுவந்து, அவர்களிடம் இருந்து ஒரு தொகையைப் பெற்று அதில் இருந்து பென்ஷன் தரப்போகிறோம் என்று கூறுவதை ஏற்கமுடியாது'' என்று அவர் குறிப்பிட்டார்.

''சுமார் 30 ஆண்டுகள் வரை ஒரு தொழிலாளி தொடர்ந்து பணம் செலுத்தவேண்டும், அதை மாதம் ரூ.3,000 ஆக அரசு தரும் என்பதில் என்ன பயன்? இன்னும் சில ஆண்டுகளில் ரூ.3,000 என்பதன் மதிப்பு என்னவாக இருக்கும், அன்றைய காலத்தில் விலைவாசி என்னவாக இருக்கும்? அந்த காலத்தில் அரசின் பணம் எந்த அளவில் உதவியாக இருக்கும் என்பது கேள்விக்குறிதான்,'' என்கிறார் கீதா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :