சபரிமலை கனகதுர்கா: "மன்னிப்பு கேட்கமாட்டேன், சட்ட உரிமையோடு வீட்டுக்கு செல்வேன்"

கனகதுர்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கனகதுர்கா
    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி-க்காக

சபரிமலை கோயிலுக்குள் சென்று ஐயப்பனை தரிசித்ததால் தனது குடும்பத்தினரால் கைவிடப்பட்ட கனகதுர்கா, நீதிமன்ற உத்தரவுடன் தனது வீட்டிற்கு மீண்டும் செல்வதற்கு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

"சபரிமலை கோயிலுக்குள் சென்றதற்காக இந்து அமைப்புகளிடமோ அல்லது எனது குடும்பத்தினருடமோ நான் ஒருபோதும் மன்னிப்புக் கேட்கமாட்டேன். நான் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படியே நடந்ததுடன், யாருக்கும் அநீதி இழைக்கவில்லை. எனது வீட்டிற்கு திரும்ப செல்வதற்கு சட்டரீதியான முயற்சிகளை மேற்கொள்வேன்" என்று பிபிசியிடம் பேசிய கனகதுர்கா தெரிவித்துள்ளார்.

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள தனது வீட்டிற்குள் நுழைவதற்கு கணவர் உள்ளிட்ட குடும்பத்தார் அனைவரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், கனகதுர்கா தற்போது ஒரு தற்காலிக அரசாங்க தங்குமிடத்தில் தங்கியுள்ளார்.

38 வயதான கனகதுர்கா சபரிமலை கோயிலுக்குள் நுழைந்ததன் மூலம் குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்திவிட்டதாக கூறி, அவரது மாமியார் அடித்ததால் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை மருத்துவமனையிலிருந்து திரும்பியது முதல் அரசு தங்குமிடத்தில் கனகதுர்கா தங்கி வருகிறார்.

சுவாமி ஐயப்பனை அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில், பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி 38 வயது கனகதுர்காவும், 40 வயது பிந்து அம்மிணியும் கடந்த ஜனவரி 2-ம் தேதி சபரிமலை கோயிலுக்கு மலையில் ஏறிச் சென்று தரிசனம் செய்தனர்.

"வீட்டிற்கு நுழைவதற்கு எனது கணவர் அனுமதி மறுத்ததால் நான் அரசு தங்குமிடத்தில் தங்கி வருகிறேன். எனது கணவரை அரசியல் பின்புலம் கொண்டவர்கள் இயக்குவதாக நான் நினைக்கிறேன்" என்று கனகதுர்கா கூறியுள்ளார்.

"நான் யாரிடமும் மன்னிப்புக் கேட்கமாட்டேன்" - சபரிமலைக்கு சென்ற கனகதுர்கா பேட்டி

பட மூலாதாரம், Twitter

சபரிமலைக்கு செல்லவேண்டுமென்ற தனது எண்ணத்தை குடும்பத்தினரிடம் முன்னதாகவே வெளிப்படுத்தியதாகவும், ஆனால் தனது விருப்பத்திற்கு அவர்கள் மறுப்புத் தெரிவித்ததாகவும் கனகதுர்கா கூறுகிறார். "நான் எப்போது சபரிமலை கோயிலுக்குள் செல்வேனென்று குடும்பத்தாரிடம் தெரிவிக்கவில்லை. இருப்பினும், நான் கோயிலுக்குள் நுழைந்த அன்றே என்னை வீடு திரும்புமாறு கூறினர். நான் வீட்டிற்கு நுழைவதற்கு அனுமதிக்கப்படமாட்டேன் என்று அவர்கள் என்னிடம் தெரிவிக்கவில்லை" என்று அவர் மேலும் கூறுகிறார்.

"நான் சபரிமலைக்கு செல்லப்போவது குறித்து எனது தம்பியிடம் தெரிவிக்கவில்லை. இருப்பினும், மற்ற குடும்பத்தாரை போன்று அவர் மனிதாபிமானம் இல்லாமல் நடந்துகொள்ளவில்லை. அதுமட்டுமின்றி, நான் அரசு தங்குமிடத்திற்கு செல்லவேண்டிய அவசியம் ஏற்படும்போது கூட அவர் அனைத்து சட்டரீதியிலான உதவிகளை வழங்கியதுடன், தினமும் கைபேசியில் அழைத்து பேசுகிறார்" என்று கனகதுர்கா கூறுகிறார்.

கனகதுர்காவின் சகோதரர் தனது சகோதரியின் செயலுக்காக பாஜகவிடம் மன்னிப்பு கோரியுள்ளதாக வலம்வந்துகொண்டிருக்கும் செய்திகள் குறித்து அவரிடம் கேட்டபோது, "செய்தது தவறென்று எண்ணினால் நான்தான் அதற்கு மன்னிப்புக்கோர வேண்டும். என் சார்பாக எனது சகோதரர் மன்னிப்புக்கோர வேண்டிய அவசியமில்லை." என்று கனகதுர்கா கூறினார்.

"நான் யாரிடமும் மன்னிப்புக் கேட்கமாட்டேன்" - சபரிமலைக்கு சென்ற கனகதுர்கா பேட்டி

பட மூலாதாரம், Getty Images

"சபரிமலைக்கு செல்வதற்கு முயற்சித்த நாளிலிருந்து (டிசம்பர் 22) நான் எனது குழந்தைகளைப் பார்க்காதது மிகவும் வருத்தமாக உள்ளது. எனது குழந்தைகளை சந்திப்பதற்கான சூழலை குடும்பத்தினர் ஏற்படுத்தி கொடுக்கவில்லை. இருப்பினும், கடந்த 15ஆம் தேதி எனது குழந்தைகளுடன் சுமார் 10 நிமிடங்கள் பேசினேன். ஆனால், நான் கோயிலுக்குள் சென்றதற்கான காரணத்தை அவர்களிடம் என்னால் புரிய வைக்க முடியவில்லை" என்று அவர் மேலும் கூறினார்.

தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனைகளிலிருந்து விடுபடக்கோரி சுவாமி ஐயப்பனிடம் பிரார்த்தனை செய்கிறீர்களா என்று கேட்டபோது, "தனிப்பட்ட நலனுக்காக கோயிலுக்கு சென்று கடவுளின் தலையீட்டை கோரும் வகையிலான பெண்மணி நானல்ல. அதுமட்டுமின்றி, நான் இன்று சந்திக்கும் சூழ்நிலையை சரியாக்கும்படி சுவாமி ஐயப்பனிடம் நான் வேண்டிக்கொள்ளவுமில்லை" என்று கூறினார்.

சபரிமலைக்கு சென்று வழிபட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு பிபிசியிடம் பேசிய கனகதுர்கா, தான் ஒரு மதநம்பிக்கை உடைய ஒருவர் என்றும், சமய வழிபாட்டில் ஒருபோதும் பாலினரீதியிலான பாகுபாடு இருக்கக்கூடாது என்று எண்ணியதாகவும் கூறினார்.

கனகதுர்கா மீது தொடுக்கப்பட்டதாக கூறப்படும் வன்முறை, வீட்டிற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்த வழக்கு விசாரணை அடுத்த வாரம் நடக்கவுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :