You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலக முதலீட்டாளர் மாநாடு: முதலீடு எதிர்பார்ப்பு எவ்வளவு?
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
ஜிம் (GIM) எனப்படும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று துவக்கிவைத்துள்ளார். பல நாடுகளின் தூதர்கள், தொழிலதிபர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டின் மூலம் பெருமளவு முதலீட்டை ஈர்க்கத் திட்டமிடுவதாக கூறுகிறது தமிழ்நாடு அரசு.
சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-10ஆம் தேதிகளில் உலக முதலீட்டார்கள் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் 2.42 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று சென்னையில் துவங்கியது. சென்னை நந்தம்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை வர்த்தக மையத்தில் மாநாட்டை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி துவக்கிவைத்தார். இதில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முதல் மாநாட்டின் சின்னமாக பயன்படுத்தப்பட்ட பறக்கும் குதிரையே, இந்த மாநாட்டிற்கும் சின்னமாக உள்ளது. 2015ஆம் ஆண்டில் நடந்த விழாவில் 'ஆக்மென்டட் ரியாலிட்டி' தொழில்நுட்பத்தின் மூலம் இந்த பறக்கும் குதிரை ஜெயலலிதாவை வணங்குவது போன்ற காட்சி உருவாக்கப்பட்டது. இந்த முறை பறக்கும் குதிரையானது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது மலர் தூவுவது போன்ற காட்சி உருவாக்கப்பட்டது.
இந்த விழாவில் பேசிய தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் வேணு ஸ்ரீநிவாசன், 37,000 தொழிற்சாலைகளுடன் தொழிற்சாலை எண்ணிக்கையில் இந்தியாவிலேயே முதலிடத்தில் தமிழகம் இருப்பதாகத் தெரிவித்தார். ஆட்டோ மொபைல்ஸ், ஐடி, உற்பத்தித் துறை, காற்றாலை மின்சாரம் என பல்வேறு துறைகளைச் சார்ந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய வேணு ஸ்ரீநிவாஸன், கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழகம் இந்த வளர்ச்சியைப் பெற்றிருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
இதற்குப் பிறகு பேசிய ஜப்பானியத் தூதர் ஹிரமட்சு, ஜப்பானின் விமான நிறுவனமான ஏஎன்ஏ சென்னை - டோக்கியோ இடையில் நேரடி விமான சேவையை வரும் அக்டோபர் மாதம் முதல் துவக்குவதாக அறிவித்தார்.
ஃபோர்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் வணிக மைய கட்டடத்தை துவக்கிவைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த மாநாட்டின் மூலம் பெருமளவில் முதலீடுகளை ஈர்க்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் தமிழகத்தின் வானூர்தி மற்றும் பாதுகாப்புத் தொழில் கொள்கையை முதலமைச்சர் வெளியிட, பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெற்றுக்கொண்டார்.
இந்த மாநாட்டின் மூலம் தமிழகத்தில் செய்யப்படும் முதலீடுகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நாளை கையெழுத்திடப்படவுள்ளன. பிபிசியிடம் பேசிய ஜப்பானியத் தூதர், தங்கள் நாடு மட்டும் சுமார் 50க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்யவிருப்பதாகக் கூறினார். ஆனால், எவ்வளவு தொகை அதன் மூலம் முதலீடு செய்யப்படுமென்பதை அவர் தெரிவிக்கவில்லை.
இரண்டாவது நாளான வியாழக்கிழமை கருத்தரங்குகளுடன் மாநாடு துவங்குகிறது. பிற்பகலில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கலந்துகொள்கிறார். இதற்குப் பிறகு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன. இந்த மாநாட்டின் மூலம் 2.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளை ஈர்க்க தமிழகம் திட்டமிட்டுள்ளது.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்