கொடநாடு: முதல்வர் பழனிசாமி கைது செய்யப்பட்டால் அந்த செய்தியையாவது வெளியிடுவீர்களா? - மு.க. ஸ்டாலின் கேள்வி

பட மூலாதாரம், Twitter
ஒரு வேளை எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டால் அந்த செய்தியையாவது ஊடகங்கள் வெளியிடுமா என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) பத்திரிகையாளர்களை சந்தித்த மு.க. ஸ்டாலின் கொடநாட்டில் நடந்த கொலை, கொள்ளை மற்றும் விபத்துகள் குறித்து பல கேள்விகளை எழுப்பி உள்ளார்.
வெள்ளியன்று டெல்லியில் செய்தியாளர்களை மேத்யூ சாமுவேல் சந்தித்தார். அதிமுகவினர் செய்த முறைகேடுகள் குறித்த ஒப்புதல் வாக்குமூலங்களை, காணொளியாகப் பதிவு செய்து கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா வைத்திருந்ததாகவும், அவற்றைக் கைப்பற்றினால் அமைச்சர்கள் உள்ளிட்டோரைத் தாம் கைப்பற்ற முடியும் என்று எடப்பாடி நினைத்ததாகவும் மேத்யூ கூறியிருந்தார்.
கொடநாட்டில் கொள்ளை நடந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் மனோஜ் ஆகிய இருவரும் செய்தியாளர்கள் சந்திப்பில் உடனிருந்தனர்.

பட மூலாதாரம், Facebook
அப்போது பேசிய சயான், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜ் தமது நண்பர் என்றும், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது சில முக்கிய ஆவணங்களை எடுக்க கனகராஜ் தங்களை அழைத்ததாகவும், தங்கள் பின்னணியில் எடப்பாடி பழனிசாமி இருந்ததாக கனகராஜ் கூறியதாகவும் தெரிவித்த்து இருந்தார்.
இது தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
விசாரணை ஆணையம்
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின். "முதல்வர் பழனிசாமி சுமத்துப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். அந்த விசாரணை ஆணையமானது சென்னை உயர் நீதிமன்றம் கண்காணிப்பின் கீழ் செயல்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

பட மூலாதாரம், Getty Images
பழனிசாமி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக, தமிழக ஆளுநரும், குடியரசுத் தலைவரும் பழனிசாமியை அழைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரினார்.
இது தொடர்பாக தமிழக ஆளுநரை சந்திக்க இருப்பதாகவும், அதற்காக நேரம் கேட்டுள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
2000 ஆயிரம் கோடி எங்கே?
கொடநாடு பங்களாவில் இருந்ததாக கூறப்படும் அந்த 2000 கோடி ரூபாய் எங்கே என்று கேள்வி எழுப்பிய அவர், மேத்யூ, சயான் மற்றும் மனோஜ்-க்கு மத்திய அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.
ஊடகங்கள்
ஊடகங்களை நோக்கி சரமாரியாக கேள்வி எழுப்பிய ஸ்டாலின், "இந்த கொடநாடு விவகாரம் தொடர்பான எந்த செய்தியையும் ஊடகங்கள் வெளியிடாமல் இருக்க என்ன காரணம்? எதிர்க்கட்சி தலைவரின் அறிக்கையையே வெளியிட கூடாத அளவிற்கு பழனிசாமி அரசு அழுத்தம் தருகிறதா? அந்த அழுத்தத்திற்கு ஊடகங்கள் அடிபணிந்துவிட்டனவா? என்று கேள்வி எழுப்பினார்.
ஒரு வேளை இந்த விவகாரத்தில் பழனிசாமி கைது செய்யப்பட்டால் அந்த செய்தியையாவது ஊடகங்கள் வெளியிடுமா?" என கேள்வி எழுப்பினார்.

பட மூலாதாரம், Facebook
மகிழ்ச்சி
இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடந்து ஒருவேளை பழனிசாமி மீது எந்த தவறும் இல்லை முடிவானால், உண்மையில் எனக்கு அது மகிழ்ச்சிதான். தமிழக முதல்வர் என்ற பொறுப்பில் இருப்பவர் களங்கமற்றவர் என உறுதியானால் மகிழ்ச்சிதான் என்றார்.
திட்டமிட்ட பொய்
முன்னதாக உள்ளாட்சி தேர்தல்கள் குறித்து பேசிய அவர், "ஏதோ திமுக உள்ளாட்சி தேர்தலை நிறுத்திவிட்டது போல முதல்வரும், அமைச்சரும் பேசுகிறார்கள். இது திட்டமிட்ட பொய். நாங்கள் முறையாக தேர்தல் நடத்த கோரிதான் வழக்கு தொடுத்தோம்" என்றார்.
உள்ளாட்சி தேர்தலை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், இன்னும் தேர்தல் நடத்தாமல் இருப்பது ஏன்? என்றும் அவர் மேலும் கேள்வி எழுப்பினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












