அமைச்சர்கள்- அதிகாரிகள் மோதல் சாதியக் கோணத்தில் திரும்புகிறதா?

- எழுதியவர், ஆர்.மணி
- பதவி, மூத்த பத்திரிகையாளர்
(இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் கட்டுரையாளரின் கருத்துகளே. பிபிசியின் கருத்து அல்ல -ஆசிரியர் )
கடந்த சில நாட்களாக தமிழக அரசியலின் பொது வெளியில் பேசு பொருளாக மாறியிருப்பது தமிழ்நாட்டில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது, குறிப்பாக மாநிலத்தின் சுகாதாரத் துறை செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன் மீது ஆளும் அஇஅதிமுக அமைச்சர்கள் வைத்துக் கொண்டிருக்கும் கடுமையான குற்றச் சாட்டுகளும், அதற்கு மாநிலத்தில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் நிறைவேற்றியிருக்கும் கண்டனத் தீர்மானமும்தான்.
விஷயம் இதுதான். ஜனவரி 5 ம் தேதி திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், ''மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை உயர்தர சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல மாநில அரசு விரும்பியது, ஆனால் அவ்வாறு செய்வது இந்திய மருத்துவர்களின் திறமையையும், நம்பகத் தன்மையையும் சீர்குலைத்துவிடும் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். அம்மாவின் (ஜெயலலிதா) உடல் நலனை விட இந்திய மருத்துவர்களின் பெருமைதான் ராதாகிருஷ்ணனுக்கு முக்கியமானதாக இருந்திருக்கிறது'' என்று கூறினார்.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் முன்பு ஆஜரான ராதாகிருஷ்ணன் ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காக ஏன் கொண்டு செல்லவில்லை என்று அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில், வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காக ஜெயலலிதாவை கொண்டு செல்லுவது இந்திய மருத்துவர்களின் பெருமையை சீர்குலைத்து விடும் என்று ஆணையத்தில் சொல்லியதாக ஊடகங்களில் தகவல் வெளியானது.
தினசரி நடக்கும் ஆணையத்தின் விசாரணையில் பலரும் வந்து சாட்சியம் அளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆணையத்திற்குள் செய்தி சேகரிக்க எந்த பத்திரிகையாளரும் அனுமதிக்கப்படவில்லை. அப்படியிருக்கையில் இந்த குறிப்பிட்ட தகவலை ஊடகங்களுக்கு யார் கசிய விட்டது என்ற கேள்வியும் எழுகிறது.
அமைச்சர் சி.வி. சண்முகம் சொன்ன இதே கருத்தை அன்றைய நாள் மாலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய போது வலியுறுத்தினார் மாநில மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார். அதோடு மட்டும் நிற்காமல், ஒரு படி மேலே போனார் ஜெயகுமார். ''விசாரணை கமிஷனில் இத்தகைய கருத்துக்களை சொல்லியவர்களை, உரிய போலீஸ் டெக்னிக்குகளை (காவல்துறை பாணி விசாரணை) பயன்படுத்தி விசாரிக்க வேண்டும் என்றும் கூறினார்.

அடுத்த இரண்டு நாட்களில் கூடிய தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்தின் கூட்டம், இந்த இரண்டு அமைச்சர்களின் கருத்துக்களுக்கும் கடுமையான கண்டனத்தை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது. போலீஸ் டெக்னிக்குகளை பயன்படுத்தி ராதாகிருஷ்ணனை விசாரிக்க வேண்டும் என்ற அமைச்சர் ஜெயகுமாரின் கருத்துக்கும் கண்டனத்தை தெரிவித்த தீர்மானம், உடனடியாக இந்த விஷயத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலையிட்டு அமைச்சர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது.
ஆனால் ஜனவரி 8ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி. சண்முகம், மீண்டும் அதே கருத்தையே வலியுறுத்தினார்.
ஒரு பத்திரிகையாளனாக நானறிந்த கடந்த 30 ஆண்டுகால தமிழக அரசியிலில் இது ஓர் அசாதரணமான நிகழ்வுதான். இதற்கு முன்பு தமிழகத்தை ஆண்ட ஆட்சியாளர்கள் காலத்திலும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் மோதல்கள் ஏற்பட்டதுண்டு. ஆனால் அந்த நிகழ்வுகளுக்கும் இதற்கும் சில பெரிய வித்தியாசங்கள் உண்டு. முந்தைய நிகழ்வுகளில் இதுபோன்ற பெரிய குற்றச்சாட்டுகள், அதாவது ஒரு முதலமைச்சரின் மரணத்தில் சந்தேகத்தின் நிழல் ரேகைகள் ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் மீது படர்ந்தது கிடையாது.
இந்த விவகாரம் தொடர்பாக என்னுடைய நண்பரும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான ஜி.பாலச்சந்திரனுடன் பேசிக் கொண்டிருந்தேன். இவர் மேற்கு வங்கத்தில் கூடுதல் தலைமை செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் சொன்ன கருத்துக்கள் முக்கியமானவையாக இருந்தன.
''மறைந்த முதலமைச்சரின் மரணத்தில் அமைச்சர் சந்தேகம் கிளப்புகிறார். சுகாதாரத் துறை செயலாளர் மீது குற்றஞ்சாட்டுகிறார். அமைச்சருக்கு அந்தளவுக்கு வலுவான கருத்துக்கள் இருந்தால் அவர் என்ன செய்திருக்க வேண்டும்? முதலில் அவர் விவகாரத்தை முதலமைச்சரிடம் கொண்டு போயிருக்க வேண்டும். அவர் கொண்டு போனாரா என்று தெரியவில்லை. ஒருவேளை அவர் விவகாரத்தை முதலமைச்சரிடம் கொண்டு போய், முதலமைச்சர் குறிப்பிட்ட அதிகாரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென்றால் அது அமைச்சரின் ''செல்வாக்கு எந்தளவுக்கு'' இருக்கிறது என்பதை காட்டுகிறது. இரண்டாவது, இந்த விவகாரத்தை முதலமைச்சரின் பார்வைக்கு கொண்டு போகாமல் குறிப்பிட்ட அமைச்சர், ஒரு அதிகாரி மீது இப்படி ஒரு குற்றச்சாட்டை வைக்கிறார் என்றால், அந்த அமைச்சர், முதலமைச்சருக்கு தெரியாமல் செயற்படுகிறார் என்பதை காட்டுகிறது. இது முதலமைச்சரின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்குகிறது'' என்று கூறினார்.

பட மூலாதாரம், DIPR
பாலச்சந்திரன் மற்றோர் முக்கியமான விஷயத்தையும் சொன்னார்; ''எந்த விவகாரத்திலும் அமைச்சரவை முடிவு என்பது கூட்டு முடிவு (collective responsibility). அமைச்சரவை கூடித்தான் ஜெயலலிதாவின் மரணம் பற்றி விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்க முடிவு எடுக்கப்பட்டது. அந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றவர்தான் இந்த குறிப்பிட்ட அமைச்சரும். அமைச்சருக்கு சந்தேகம் இருந்தால் அவர் விசாரணை கமிஷனில் இந்த குற்றச்சாட்டை முன் வைத்திருக்கலாம். ஆனால் அவர் அதனையும் செய்யவில்லை. மாறாக தெருவில் நின்று குற்றஞ்சாட்டுகிறார். அமைச்சரவை ஒரு குரலில்தான் பேசவேண்டும், பேச முடியும். இதுதான் ஆண்டாண்டு காலமாக இந்தியாவில் இருந்து வரும் நடைமுறை. பல குரல்களில், ஆளாளுக்கு ஒவ்வோர் அமைச்சரும் பேச முடியாது'' என்றார்.
''எல்லோருக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு. நாங்கள் மக்கள் பிரதிநிதிகள். எங்களை பேச விடக் கூடாது என்று சொல்ல யாருக்கும் அதிகாரமில்லை'' என்ற அமைச்சர் சி.வி. சண்முகத்தின் கருத்துப் பற்றி சொல்லும் போது பாலச்சந்திரன் கூறியது இதுதான்; ''நான் இதனை மறுக்கவில்லை. ஆனால் ஒன்றை கவனிக்க வேண்டும். அமைச்சரின் கருத்து ஊடகங்களில், அமைச்சர் சி.வி. சண்முகத்தின் கருத்து என்றுதான் வந்தது. ஆளும் அஇஅதிமுக வின் மூத்த தலைவர் கூறினார் என்று வரவில்லை. அரசியல்வாதியாக எந்த கருத்தையும் சொல்ல சண்முகத்துக்கு உரிமை உண்டு. ஆனால் அமைச்சராக பேசும் போது அமைச்சரவையின் கருத்தைத் தான் சொல்ல முடியும். சொந்த கருத்தை சொல்ல முடியாது. அதுதான் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு''.
கூடுதலாக பாலச்சந்திரன் சொன்னது ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான நடத்தை விதிமுறைகள்; ''ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு என்று தெளிவான நடத்தை விதிமுறைகள் இருக்கின்றன. அவர்கள் மீது அமைச்சர்கள் குற்றச் சாட்டுகளை வைத்தால் ஐஏஎஸ் அதிகாரிகள் நேரடியாக அதற்கு பொதுவெளியில் பதில் சொல்ல முடியாது. அவர்கள் விவகாரத்தை ஆட்சிக் கட்டிலில் இருக்கும் அரசியல் தலைமையிடம் தான் கொண்டு போக முடியும். அதனால்தான் ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் விஷயத்தை முதலமைச்சரிடம் கொண்டு போயிருக்கிறது. ஆனால் அமைச்சர்களின் தாக்குதல்கள் தொடருமானால், அது குறிப்பிட்ட அதிகாரியை மட்டுமல்ல, ஒட்டு மொத்தமாகவே தமிழகத்தில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளின் மன உறுதியை (morale) பாதிக்கும். இது இயற்கை நீதிக்கே புறம்பானது. ஆகவே தாங்கள் ஒரு நிராயுதபாணியுடன் மோதிக் கொண்டிருக்கிறோம் என்பதை சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் உணர வேண்டும்'' என்றார்.
இதற்கு முன்பும் தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார்கள். ஆனால் அப்போது எழுந்த சர்ச்சைகள், குறிப்பிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் அன்றைய ஆட்சியாளர்களின் சில நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்பட்டார்கள் என்பதற்காக எழுந்தது. உதாரணத்திற்கு 2010 ம் ஆண்டில், முதலமைச்சர் கருணாதியின் திமுக அரசுக்கு எதிராக செயற்பட்டார் என்பதற்காக சி.உமாசங்கர் என்ற ஐஏஎஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப் பட்டார். இத்தனைக்கும் கருணாநிதிக்கு நெருக்கமாக இருந்த ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவராக இருந்தவர்தான் உமாசங்கர். 45 நாட்களில் சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ் பெறப்பட்டது, உமாசங்கர் மீண்டும் பணிக்கு வந்தார். ஆனால் அன்றிலிருந்து இன்று வரையிலும் முக்கியத்துவம் இல்லாத ஒரு துறையில் தான் உமாசங்கர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
மற்றுமோர் முக்கியமான நிகழ்வு, பெண் ஐஏஎஸ் அதிகாரி வி.எஸ். சந்திரலேகா மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம். மே 19, 1992 ம் ஆண்டு சென்னையில், அரசு ஆவணக் காப்பகத்தின் தலைமை அதிகாரியாக இருந்த சந்திரலேகா மீது ஆசிட் வீசப்பட்டது. இதில் அவர் முகம் அகோரமானது. அப்போது தமிழகத்தை முதலமைச்சர் ஜெயலலிதாவின் அஇஅதிமுக அரசு ஆண்டு கொண்டிருந்தது. இதில் அன்றைய ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகங்கள் எழுந்தது. முதலில் இந்த வழக்கை தமிழக காவல் துறை விசாரித்தது. பின்னர் நீதிமன்ற உத்திரவின் பேரில் வழக்கு சிபிஐ க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் மும்பையை சேர்ந்த கூலிப்படையினர் சிலர் கைது செய்யப்பட்டனர். ஆனால் குற்றஞ்சாட்டப் பட்டவர்கள் அனைவரும் கீழமை நீதிமன்றத்தில் விடுதலை செய்யப் பட்டனர். இன்று வரையில் இந்த தாக்குதல் ஏன் நடத்தப் பட்டது என்பதற்கான எந்த உறுதியான தகவலும் இல்லை, பல தகவல்கள் இதற்கான காரணங்களாக சொல்லப் பட்டாலும், உறுதியான காரணமாக எதுவும் இதுவரையில் அதிகாரபூர்வமாக எந்த தரப்பிலிருந்தும் வரவில்லை.
கடந்த 30 ஆண்டுகால தமிழக அரசியல் வரலாற்றில் இது போன்று சில ஐஏஎஸ் அதிகாரிகள் சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார்கள். 1989 - 1991 ம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக் காலத்தில் நாகராஜன் என்ற ஐஏஎஸ் அதிகாரி உள்துறை செயலாளராக இருந்தார். கருணாநிதி மற்றும் சில மூத்த அமைச்சர்கள் தவிர, ஜூனியர் அமைச்சர்களே நாகராஜனிடம் நேரடியாக பேச தயங்குவார்கள். ஒரு ஈழப் போராளிக் குழுவின் தலைவர் பத்மாநாபா 1990ம் ஆண்டு சென்னையில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், 1991 ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சரானவுடன், நாகராஜன் பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு, 1997 ல் குற்றமற்றவர் என்று வழக்கு விசாரணை முடிவில் விடுதலை செய்யப்பட்டார்.

கடந்த 1989 - 1991 திமுக ஆட்சி ஜனவரி 30, 1991ல் டிஸ்மிஸ் செய்யப்பட்டது. இதற்கு ஐஏஎஸ் அதிகாரி நாகராஜனின் நடவடிக்கைகளும் ஒரு காரணம் என்று அந்த காலத்தில் திமுகவினர் மத்தியிலேயே பேசப்பட்டதை நான் நன்கறிவேன்.
கடந்த சில ஆண்டுகளில் இதுபோன்று மக்கள் மன்றத்தின் கவனத்தை ஈர்த்தவர் தமிழக ஐஏஎஸ் அதிகாரி யூ.சகாயம். கனிம வள ஊழல் வழக்குகளை விசாரிக்க சென்னை உயர்நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட சகாயம் இதில் இரவு, பகல் பாராமல் செயற்பட்டார். ஒரு முறை, மதுரையில் அவருடைய விசாரணைக்கு மாவட்ட நிர்வாகம் போதிய ஒத்துழைப்பு தராத நிலையில் ஒரு இரவு முழுவதும் சுடுகாட்டில் கட்டில் போட்டு அங்கேயே படுத்து உறங்கினார். இது நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது.
ஐஏஎஸ் அதிகாரிகளுடன் மட்டுமல்ல, ஐபிஎஸ் அதிகாரிகளுடனும் தமிழக அரசின் மோதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஐபிஎஸ் அதிகாரி, ஐஜி பொன் மாணிக்கவேல் விவகாரத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். கோயில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியான பொன் மாணிக்கவேல், ஓய்வு பெற்று விட்டார். ஆனால் அவர்தான் நிலுவையில் உள்ள சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
பொன் மாணிக்கவேலுக்கு கீழே பணியாற்றும் அதிகாரிகள், தாங்கள் பொன் மாணிக்கவேலால் மிரட்டப்படுவதாகவும், அப்பாவிகள் பலரையும் கைது செய்யுமாறு தங்களை ஐஜி மிரட்டுவதாகவும், தமிழக டிஜபி யிடம் புகார் கொடுத்தனர்.
இந்த வழக்கு மீண்டும் சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, இரண்டு நீதிபதிகள் அமர்வு, பொன் மாணிக்கவேலுக்கு எதிராக புகார் கொடுத்த அதிகாரிகளை கடுமையாக சாடியது, தமிழக அரசையும் எச்சரித்தது. தனக்கு எந்த ஒத்துழைப்பையும் தமிழக அரசு கொடுக்கவில்லை என்ற ஐஜி யின் குற்றச் சாட்டை தாங்கள் சீரியஸான குற்றச்சாட்டாக எடுத்துக் கொண்டுள்ளதாகவும், நீதிமன்றம் எச்சரித்தது. பொன் மாணிக்கவேலுக்கு முழு ஒத்துழைப்பை கொடுக்குமாறும் மீண்டும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

பட மூலாதாரம், ARUN SANKAR
நாடு விடுதலை அடைந்ததற்கு பிந்தைய 71 ஆண்டு காலத்தில் இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பந்தாடப் பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். 1993 -94 ம் ஆண்டு காலத்தில் மும்பையில் கெய்ர்னார் என்ற ஒரு ஐஏஎஸ் அதிகாரி, மும்பை மாநகராட்சியின் ஆணையாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார். விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட பல பெரிய கட்டடங்களையும் அவர் இடித்து தள்ளினார். அப்போது மஹராஷ்டிராவை ஆண்டு கொண்டிருந்தது முதலமைச்சர் விலாஸ்ராவ் பாட்டில் தலைமையிலான காங்கிரஸ் அரசு. மத்தியில் பி.வி. நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆண்டு கொண்டிருந்தது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் மஹாராஷ்டிர போலீஸ் 24 மணிநேர பலத்த பாதுகாப்பை கெய்ர்னாருக்கு கொடுத்துக் கொண்டிருந்தது. ஒரு நாளைக்கு மூன்று முறை கெய்ர்னாருக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு பற்றிய அறிக்கை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மஹாராஷ்டிர அரசால் அனுப்ப்ப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் ஓராண்டு கழித்து, 1994 ல் கெய்ர்னார் மஹாராஷ்டிர அரசால் பணியிடை நீக்கம் (Suspend) செய்யப் பட்டார்.
மற்றோர் அதிகாரி அஷோக் கெம்கா. இவர் கொல்கத்தாவில் பிறந்தவர். 1991 ம் ஆண்டு ஹரியாணா பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி. 2012 ம் ஆண்டில் இவரது பெயர் வெளியுலகில் பிரபலமானது. காரணம், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு எதிரான நில ஆக்கிரமிப்பு உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களை இவர் தீவிரமாக விசாரிக்க துவங்கியது. அப்போது கெம்காவுக்கு பாஜக வலுவான ஆதரவை தந்து கொண்டிருந்தது.
ஆனால் 2014 ல் அக்டோபர் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸை வீழ்த்தி ஹரியாணாவில் பாஜக அரசு அமைந்த பின்னர், நிலைமை பழைய வழிக்குத் திரும்பியது. எதிர்கட்சியாக இருக்கும் போது கெம்காவை ஆதரித்த பாஜக ஆளுங்கட்சியானவுடன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. கெம்காவை பல பணிகளுக்கு தொடர்ந்து மாற்றி பந்தாயடியது பாஜக அரசு. காங்கிரஸ் மற்றும் பாஜக ஆட்சிக் காலங்களில், தன்னுடைய மொத்த பணிக்காலத்தில் இதுவரையில் அஷோக் கெம்கா பணியிட மாற்றம் (transfer) செய்யப்பட்டது 51 முறையாகும். இது ''கின்னஸ் சாதனை பட்டியலுக்கு'' போகுமா என்பது பாஜக வுக்கும், காங்கிரஸுக்குமே வெளிச்சம்.
இதனிடையே ஜெயலலிதாவின் மரணம் பற்றிய சர்ச்சையை ஆதிக்க சாதிகளை (dominant castes) சேர்ந்த அதிகாரிகளுக்கும், பிற்படுத்தப்பட்ட சாதிகளை சேர்ந்த (backward castes) மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள், முதலமைச்சருக்கு எதிரான போராட்டமாக சித்தரிக்கும் முயற்சிகளும் சில தரப்பினரிடமிருந்து தொடங்கியிருக்கிறது. இந்த சர்ச்சை சாதீய திசையில் திரும்பினால் அது துரதிர்ஷ்டவசமானது. அதனை ஒரு துன்பியல் நிகழ்வு (tragedy) என்பதை தவிர வேறெப்படி வர்ணிப்பது ?
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












