சபரிமலை பெண்கள் நுழைவு குறித்த சில உண்மைகள் மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
சபரிமலை பெண்கள் நுழைவு குறித்த சில உண்மைகள்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் நுழையலாம் என இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகே சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் மாதவிடாய் ஏற்பட வாய்ப்புள்ள 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் நுழைந்துள்ளதாக, கோயிலுக்குள் பெண்கள் நுழைய எதிர்ப்புத் தெரிவிப்பவர்களால் தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
சமீபத்திய போராட்டங்கள் அனைத்திலும் இதுவரை சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் நுழைவது முதல் முறை என்பது தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. சில ஊடகங்களும் மாதவிடாய் வயதில் உள்ள பெண்கள் நுழைவது இது வரலாற்றிலேயே முதல் முறை என்று செய்தி வெளியிட்டுள்ளன. இது உண்மைதானா என்று ஆராய்ந்தது பிபிசி.
1990ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 19ஆம் தேதி வெளியான ஜன்மபூமி மலையாள நாளிதழில், தேவசம் போர்டின் ஆணையராக இருந்த சந்திரிகா என்பவரின் பேரக்குழந்தைக்கு முதல்முறை உணவூட்டும் நிகழ்வில், அக்குழந்தையின் தாயான சந்திரிகாவின் மகள் இருக்கும் படம் வெளியானது.
இதையடுத்து பெண்கள் நுழைய தாங்கள் ஆதரவளிக்கவில்லை என 2016இல் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்ட திருவாங்கூர் தேவசம் போர்டுக்கு எதிராக எஸ் .மகேந்திரன் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்
மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை மற்றும் மலையாளப் புத்தாண்டு நாளான விஷூ ஆகிய சமயங்களில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலை செல்ல அனுமதிக்கப்படாவிட்டாலும், மாதாந்திர பூஜைகளுக்காக கோயில் திறக்கப்பட்ட சமயங்களில், கோயில் நிர்வாகத்தால், எந்த வயது வேறுபாடும் இல்லாமல் பெண்கள் அனுமதிக்கப்பட்டது அந்த வழக்கு விசாரணையில் தெரியவந்தது.
விரிவாகப் படிக்க: சபரிமலையில் பெண்கள் நுழைவது இதுதான் முதல்முறையா? உண்மை என்ன?


பட மூலாதாரம், Getty Images
கெளரவப் போரில் யாருக்கு வெற்றி வாய்ப்பு?
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததையொட்டி, காலியாக உள்ள திருவாரூர் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதன்படி ஜனவரி 28-ஆம் தேதி வாக்குப்பதிவும், வாக்கு எண்ணிக்கை 31-ஆம் தேதியும் நடக்கவுள்ளது.
தமிழக அரசியலில் கடந்த 30 ஆண்டுகளாக கோலோச்சி வந்த முன்னாள் தமிழக முதல்வர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரும் மறைந்த நிலையில் தமிழகம் சந்திக்கும் முதல் சட்டமன்ற தொகுதி தேர்தல் இது என்பதால், இந்த இடைத்தேர்தல் மிகவும் கவனத்தை பெறுகிறது.
திருவாரூரில் நடந்த கடந்த 10 சட்டமன்ற தேர்தல்களில் , திமுக 6 முறை வென்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 முறை வென்றுள்ள நிலையில், அதில் மூன்று முறை திமுக கூட்டணியில் அக்கட்சி வென்றுள்ளது.


பட மூலாதாரம், Getty Images
பாஸ்போர்ட் குறித்த 13 சுவாரஸ்யமான தகவல்கள்
நீங்கள் உலகத்தின் பல்வேறு பகுதிகளைச் சுற்றிப்பார்க்க கதவுகளை திறந்துவிட உங்களுக்குத் தேவையான முக்கியமான ஆவணம் பாஸ்போர்ட்.
பாஸ்போர்ட்டுக்கு நிறைய சுவாரஸ்யமான வரலாறு உண்டு. சில சுவாரஸ்யமான தகவல்களை உங்களுக்குத் தொகுத்துத் தருகிறோம்.
விரிவாகப் படிக்க: பாஸ்போர்ட் குறித்த 13 சுவாரஸ்யமான தகவல்கள்


தமிழ்ப் புத்தகங்களுக்கு விரியும் உலக சந்தை
சென்னை மாநகரின் அடையாளங்களில் ஒன்றான புத்தக கண்காட்சி இன்று வெள்ளிக் கிழமை, ஜனவரி 4ம் தேதி தொடங்கி விட்டது. இது '42 வது சென்னை புத்தக கண்காட்சியாகும். சென்னை நந்தனம் பகுதியில் ஒய்எம்சி திறந்தவெளி விளையாட்டரங்கில் புத்தக கண்காட்சி நடக்கிறது. ஜனவரி 4-ம் தேதி முதல் 20 ம் தேதி வரையில் இந்த கண்காட்சி நடக்கிறது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம், Booksellers and Publishers Association of South India (BAPASI) புத்தக கண்காட்சியை நடத்துகிறது. வழக்கமாக 13 அல்லது 14 நாட்கள் நடக்கும் புத்தக கண்காட்சி முதன் முறையாக இந்த ஆண்டு 17 நாட்கள் நடக்கவிருக்கிறது.
விரிவாகப் படிக்க: சென்னை புத்தக கண்காட்சி: தமிழ்ப் புத்தகங்களுக்கு விரியும் உலக சந்தை


பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவில் தொடரும் அரசு செயல்பாடு முடக்கம்
கவர்ன்மென்ட் ஷட் டவுன் என்று அழைக்கப்படும் அமெரிக்க அரசு செயல்பாடுகள் முடக்கம் மூன்றாவது வாரமாக தொடர்ந்து வரும் சூழ்நிலையில், இதனை பல ஆண்டுகள் தொடரக் கூட தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி உள்ளார்.
அமெரிக்காவில் தொடர்ந்துவரும் அரசு செயல்பாடு முடக்கம், அந்நாட்டில் மோசமான விளைவுகளைஏற்படுத்தி வருகிறது. மெக்ஸிகோ எல்லையில் சுவர்கட்டும் அதிபர் டிரம்பின் திட்டத்துக்கு நிதி ஒதுக்க காங்கிரஸ் மறுத்து வரும் நிலையில் ஏற்பட்ட சிக்கலால், பல்வேறு அரசுத் துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான நிதி மசோதா நிறைவேற்றப்படாமல் அரசுப் பணிகள் முடக்கம் நடந்துவருகிறது.
கவர்ன்மென்ட் ஷட் டவுன் என்று கூறப்படும், அரசுப் பணிகள் முடக்கம், அமெரிக்காவுக்கு புதிதில்லை என்றபோதும், தற்போது அது மூன்று வாரமாக தொடர்ந்து வருவது நாட்டில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ஏறத்தாழ 8 லட்சம் ஊழியர்களுக்கு சம்பளம் தரப்படாததால், அதன் மோசமான விளைவுகளை அம்மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












