பொன்.மாணிக்கவேல் மீது அதிகாரிகள் புகார்: "சட்டத்திற்கு முரணாக வழக்குப் பதியச் சொல்லி மிரட்டுகிரார்"

'சட்டத்திற்கு முரணாக வழக்கு பதிவுசெய்ய சொல்லி பொன். மாணிக்கவேல் மிரட்டுகிறார்'

பட மூலாதாரம், ARUN SANKAR

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் சிறப்பு அதிகாரியாக இருக்கும் பொன் மாணிக்கவேல், சிலை கடத்தல் வழக்குகளில் உரிய ஆவணங்கள், சாட்சிகள் இல்லாமல் சட்டத்திற்கு முரணாக வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்ய வற்புறுத்தியதாக அவரது பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் தமிழக காவல்துறை தலைவரை சந்தித்து புகார் அளித்துள்ளனர்.

தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரியாக ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான பொன். மாணிக்கவேல் பணியாற்றிவருகிறார். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கென பெரிய எண்ணிக்கையில் காவல்துறையினர் இல்லை என்பதால், வேறு பிரிவுகளில் இருந்து அயல் பணியாக காவலர்கள் இந்தப் பிரிவில் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமையன்று மதியம் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவைச் சேர்ந்த உயர் காவல் அதிகாரிகளில் 12 பேர் ) தமிழக காவல் துறை தலைமையகத்தில் டிஜிபி டி.கே.ராஜேந்திரனை சந்தித்தனர். அதற்குப் பிறகு திடீரென செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், தங்களை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவிலிருந்து மாற்ற வேண்டுமென காவல்துறை தலைவரைச் சந்தித்து மனு அளித்ததாக மட்டும் தெரிவித்தனர்.

பொன். மாணிக்கவேல் மீது புகார் அளித்த அதிகாரிகள்
படக்குறிப்பு, பொன். மாணிக்கவேல் மீது புகார் அளித்த அதிகாரிகள்

காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோ, காவல்துறை துணை கண்காணிப்பாளர் பழனிச்செல்வன், ஆய்வாளர் பன்னீர் செல்வம், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 12 பேர் டிஜிபி ராஜேந்திரனை சந்தித்தனர்.

இதற்குப் பிறகு காவல் துறை தலைமையகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "சிலை கடத்தல் வழக்குகளில் உரிய சாட்சிகள், ஆவணங்கள் இல்லாமல் சட்டத்திற்கு முரணாக வழக்குப் பதிவுசெய்து புலன் விசாரணை செய்ய வற்புறுத்தியதாகவும் அவரது வற்புறுத்தலைக் கடைப்பிடிக்காத காவல்துறை அதிகாரிகளை திட்டியும் மிரட்டியும் வருவதால் தங்களுக்குப் பணி மாறுதல் வேண்டும் என கோரிக்கை வைத்து மனு அளித்துள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் உதவி ஆய்வாளர்களுக்குக் கீழ் நிலையில் உள்ள காவலர்கள் சிலருக்கு திங்கட்கிழமையன்று பணி மாறுதல் கொடுக்கப்பட்ட நிலையில், அதே பிரிவில் உள்ள உயர்நிலை அதிகாரிகள் இந்தப் புகாரைக் கொடுத்திருப்பதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ரயில்வே ஐஜியாக பணியாற்றிவந்த பொன். மாணிக்கவேலை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் ஐஜியாகவும் நியமித்த சென்னை உயர் நீதிமன்றம் அவரை மாற்றக்கூடாது என்றும் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் எடுத்த பல நடவடிக்கைகள் பெரும் சர்ச்சைக்கும் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை அதிகாரிகளின் எதிர்ப்புக்கும் உள்ளாயின.

சிலை கடத்தல் வழக்குகள் அனைத்தையும் மத்தியப் புலனாய்வுத் துறைக்கு மாற்றப்போவதாக தமிழக அரசு தெரிவித்தது. அதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்தது. இந்த நிலையில் பொன். மாணிக்கவேல் ஓய்வுபெறவே, அவரை இந்தப் பிரிவுக்கு சிறப்பு அதிகாரியாக நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கடுத்து, இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையர் திருமகளை கைதுசெய்தது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு.

இந்நிலையில்தான் அந்தப் பிரிவிலிருந்து தாங்கள் வெளியேற விரும்புவதாக காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: