You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'ஜெயலலிதாவை சிகிச்சைக்கு வெளிநாடு அழைத்துச் செல்லாதது ஏன்?'
இன்றைய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகின்றோம்.
தினத்தந்தி - ஜெயலலிதா சிகிச்சை பற்றி சுகாதார துறை செயலாளரிடம் விசாரணை
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை ஆஜராகி வாக்குமூலம் அளித்தார் என தினத்தந்தி செய்தி வெளியிட்டது.
"அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன? உயர் சிகிச்சைக்காக ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்து செல்லாதது ஏன்? என்பது போன்று பல்வேறு கேள்விகளை நீதிபதி ஆறுமுகசாமி அவரிடம் கேட்டார," என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் அவரிடம் குறுக்கு விசாரணை நடத்தினார். நான்கு மணி நேரம் அவரிடம் விசாரணை நடந்தது என்று அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - தொடரும் ரஃபேல் சர்ச்சை
ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தம் குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், அந்த விமானங்களின் விலை குறித்த தகவல்களை உள்ளடக்கிய மத்திய தணிக்கைத் துறையின் அறிக்கை நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவிடம் வழங்கப்பட்டதாகத் தன் தீர்ப்பில் கூறியிருந்தது.
எனினும் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அத்தகைய அறிக்கை எதுவும் தங்களிடம் சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்துக்கு தவறான தகவல் அளிக்கப்பட்டதாக பொதுநல வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவரான ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
தினகரன் - புயலாக மாறும் காற்றழுத்தம்
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்வதால் நாளை புயலாக மாறும் .
இதன் காரணமாக நாளை முதல் தமிழக கடலோர பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கும் என்று சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் மாதம் தொடங்கிய வட கிழக்கு பருவமழை காலம் 75 சதவீதம் முடிந்த நிலையில், தற்போது வங்கக்கடலில் இரண்டாவது புயல் உருவாகியுள்ளது.
கடந்த ஒரு வாரமாக தென் கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தம் படிப்டியாக வலுவடைந்து நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (புயல் சின்னம்) மாறியது.
இந்த புயல் சின்னம் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர தொடங்கியுள்ளதாக தினகரன் செய்தி வெளியிடடுள்ளது.
தினமணி - புதிய ஆளுநர் தலைமையில் முதல் ஆர்பிஐ கூட்டம்
இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) நிர்வாக கட்டமைப்பை மறுஆய்வு செய்வது குறித்து பரிசீலிக்க ஆர்பிஐ மத்திய குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு்ளளது.
ஆர்பிஐ-யின் புதிய ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட சக்தி காந்த தாஸ் தலைமையில் நடைபெற்ற முதல் ஆர்பிஐ கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 4 மணிநேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்குப் பிறகு ஆர்பிஐ சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டதாக தினமணி செய்தி வெளியிட்டள்ளது,
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்