You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கிரிக்கெட்: சித்துவின் ஆட்டோகிராஃபை பெற ஏழு வயது ரசிகரின் ஒரு நாள் போராட்டம்
- எழுதியவர், அரவிந்த் சாப்ரா
- பதவி, சண்டிகார்
சண்டிகர் நகரிலுள்ள பஞ்சாப் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் நவ்ஜோத் சித்துவின் இல்லம் எப்போதும் பார்வையாளர்களால் நிறைந்து காணப்படும்.
அவர்களில் பெரும்பானவர்கள் அமைச்சர் சித்து கையாண்டு வருகின்ற உள்ளூர் அரசு, கலாசாரம் மற்றும் சுற்றுலா என ஏதாவது ஓர் அரசு துறையோடு தொடர்புடைய வேலைகளை செய்ய வந்தவர்கள்.
பஞ்சாப் முதலமைச்சரின் இல்லத்திற்கு அருகிலுள்ள முக்கியமான இடத்தில் அமைந்துள்ள அமைச்சர் சித்துவின் அரசு பங்களாவில் அந்தந்த நாள் வரக்கூடிய செய்திகளை உடனுக்குடன் அறிவிக்க பல உள்ளூர் ஊடக செய்தியாளர்களும் அங்கு எப்போதும் இருந்தனர்.
ஆனால், 7 வயது சிறுவன் ஒருவன் தனது விருந்தினராக வருவான் என்று அமைச்சர் சித்து ஒருபோதும் எதிர்பார்த்திருக்கமாட்டார்.
வாரிஸ் தில்லோன் என்ற அந்த சிறுவன் பொன் வண்ண நிறத்திலான மேலாடையை நேர்த்தியாக அணிந்துகொண்டு, 280 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பாதின்டாவில் இருந்து சித்துவை பார்க்க வந்திருந்தார்.
"எனக்கு மிகவும் விரும்பமான கிரிக்கெட் ஆட்டக்காரர் நவ்ஜோத் சித்துவிடம் இருந்து கையெழுத்து பெற விரும்புகிறேன். இது பற்றி எனது தந்தையிடம் கேட்டு கொண்டே இருந்தேன்" என்று 2வது வகுப்பு படிக்கின்ற அந்த மாணவர் தெவித்தார்.
பலமான பாதுகாப்பு போடப்பட்டுள்ள சித்துவின் இல்லத்திற்குள் நுழைவதற்கான வழிகளை தனது தந்தையோடு வெளியே நின்று கொண்டிருந்த இந்த சிறுவன் தேடி கொண்டிருந்தார்.
பாதுகாப்பு பணியாளர்கள் அவர்களை உள்ளே செல்ல முன்னதாக அனுமதிக்கவில்லை.
எனவே, அந்த பாதுகாப்பு பணியாளர்களுக்கு தெரியாமல் நின்று கொண்டு அடிக்கடி பெரியதொரு இரும்பு நுழைவாயிலின் துவாரம் வழியாக இருவரும் உள்ளே எட்டி பார்த்த வண்ணம் நின்று கொண்டிருந்தனர்.
செய்தியாளர் ஒருவர் சித்துவின் இல்லத்தில் இருந்து வெளியே வருவதை பார்த்த அந்த சிறுவன், "அமைச்சர் சித்துவின் கையெழுத்து எனக்கு கிடைக்குமா?" என்று அப்பாவித்தனமாக கேட்டான்.
தனது மகனின் கனவு நனவாகுமா என்ற உறுதியின்றி அவனுக்கு பின்னால் தந்தை நின்று கொண்டிருந்தார்.
"பல மாதங்களாக அவன் கேட்டு கொண்டிருந்தான். எனவே, இதற்காகதான் வந்தோம்" என்று தந்தை கூறினார். தனது பெயரை சொல்ல விரும்பாத அவர், இந்திய விமானப்படையில் வேலை செய்வதாக மட்டும் தகவல் தெரிவித்தார்.
6 மணிநேரம் வாகனம் ஓட்டி சித்துவின் வீட்டை வந்து சேர்ந்ததாக அவர்கள் கூறினர்.
சித்துவின் சொந்த மாநிலமான பஞ்சாபில் கிரிக்கெட் விளையாடி வருவதாக அந்த சிறுவன் வாரிஸ் தெரிவித்தார். சித்துவை மிகவும் பிடிக்கும் என்றும் அவர் கூறினார்.
1983 முதல் 1999ம் ஆண்டு வரை இந்தியாவின் கிரிக்கெட் அணியில் விளையாடிய நவ்ஜோத் சித்து, தனிச்சிறப்புமிக்க அடித்து ஆடும் தனது திறமையால் பல ரசிகர்களை கொண்டிருந்தார்.
கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், வர்ணனையாளரராக பணியாற்றிய அவர், பிரபலமானவராக வலம் வந்தார்.
அரசியலில் இறங்கிய பின்னர், பஞ்சாப் தேர்தலில் சித்து வெற்றிபெற்றார். இப்போது உயரிய 3 அமைச்சர்களில் ஒருவராக அவர் இருக்கிறார். மேலும், அவர் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பரப்புரையாளராகவும் அவர் விளங்குகிறார்.
கார்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் குழுவோடு விருந்தினர்கள் சித்துவின் வீட்டிற்குள் நுழைவதற்கு மத்தியில், இந்த சிறுவனால் சித்துவை நெருங்க முடியவில்லை.
மாலையில், யரோ ஒருவர் ரசிகரான சிறுவன் ஒருவர் கையெழுத்துக்காக காத்திருப்பதாக சித்துவிடம் தெவித்தனர்.
அந்த சிறுவனை அழைத்த சித்து, அவனை கட்டி அரவணைத்து அவனது 2 பேட்களில் கையொப்பமிட்டு கொடுத்தார்.
சித்துவிடம் அதிகமாக பேசாத அந்த சிறுவனின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது. நீண்ட நேர காத்திருப்பு இறுதியில் கைகூடியது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்