You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
செந்தில் பாலாஜி தாம் திமுகவில் இணைந்தது ஏன் என விளக்கம்
அதிமுக முன்னாள் அமைச்சரும், டிடிவி தினகரனின் அமமுகவின் முக்கிய நிர்வாகியாக இருந்தவருமான வி.செந்தில் பாலாஜி, தமது ஆதரவாளர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.
ஸ்டாலினை சிறந்த தலைவராகப் பார்ப்பதாகவும் அவர் மீதுள்ள ஈர்ப்பால் தாம் திமுகவில் இணைந்ததாகவும் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
'அதிமுக ஒரு மூழ்கும் கப்பல்' என்றும் தகுதிநீக்கம் செல்லும் என்று உயர் நீதிமன்றத் தீர்ப்பு வந்தபோது, மேல்முறையீடு செய்யாமல் இடைத் தேர்தலை சந்திக்கலாம் என்று தினகரனிடம் கூறியதாகவும் இணைவுக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி கூறினார்.
செந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க என்று டிடிவி தினகரனும், 'அவர் விலகியது சரி, சென்ற இடம்தான் தவறு' என அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரும் கருத்து கூறியுள்ளனர்.
சமீப நாட்களாகவே ஆ.ராசா மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் ஒன்றாக இருக்கும் படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு அவர் திமுகவில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகின.
ஆனால், அது பழைய படம் என்றும், செந்தில் பாலாஜி திமுகவில் இணைவது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்றும் ராசா ஊடகங்களிடம் கூறியிருந்தார்.
2006 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் கரூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, 2016இல் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் இருந்து வெற்றிபெற்றார்.
2011இல் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்தபோது போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்ட செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியில் இருந்தும் கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்தும் 2015இல் ஜெயலலிதாவால் நீக்கம் செய்யப்பட்டார்.
2016 தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க அதிகமாக முறைகேடு நடந்ததாக தேர்தல் ஆணையத்தால் தேர்தல் ரத்து செய்யப்பட்டு, தாமதமாக தேர்தல் நடத்தப்பட்ட இரு தொகுதிகளில் அரவக்குறிச்சியும் ஒன்று.
அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜியை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமியும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.
அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த நிகழ்வின்போது திமுக பொருளாளர் துரை முருகன், கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
எடப்பாடி கே.பழனிசாமி அரசுக்கு அளித்து வந்த தங்கள் ஆதரவை விலக்கிக்கொண்டதால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட டிடிவி தினகரன் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரில் இவரும் ஒருவர்.
முலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் இங்கு யார் வருந்தபோகிறார்கள் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்த தினகரன், ஒரு சிறு குழுவோ, சில நபர்களோ தங்கள் சுயநலத்துக்காக கட்சியைவிட்டு விலகிச் செல்வதால் கட்சியே முடங்கிவிடும் என நினைப்பது "பூனை கண்ணை மூடினால் உலகமே இருண்டுவிடும்" என்று நினைப்பதைப் போன்றது என்று கூறியுள்ளார்.
எனினும் தினகரன் இந்த அறிக்கையில் செந்தில் பாலாஜியின் பெயரைக் குறிப்பிடவில்லை.
'கடலில் கரைத்த பெருங்காயம்' - ஜெயக்குமார்
"செந்தில் பாலாஜி அமமுகவில் இருந்து விலகியது சரி. ஆனால், சேர்ந்த இடம்தான் தவறு. அவர் ஏற்கனவே திமுகவில் இருந்துதான் அதிமுக வந்தார். பழைய பாசத்தால் அவர் மீண்டும் திமுக சென்றுள்ளார். அதிமுக ரத்தம் உள்ள யாரும் இவ்வாறு சென்று சேர மாட்டார்கள். அதிமுகவில் இருந்து திமுக செல்பவர்கள் கடலில் கரைத்த பெருங்காயம்போல காணாமல் போய்விடுவார்கள்."
"அவர்கள் ஒரு நாள் மட்டுமே ஹீரோவாக இருக்க முடியும்," என்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
'செந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க' - தினகரன்
"செந்தில் பாலாஜி நல்ல தம்பிதான். அவர் போனதில் எங்களுக்கு வருத்தமில்லை. அவர் எங்கிருந்தாலும் வாழ்க. எந்தக் கட்சிக்கு செல்வது என முடிவெடுக்க அவரவர்க்கு உரிமை உண்டு. அவர்கள் தங்கள் விலகலுக்கு காரணம் சொன்னால், அதற்கும் பதில் சொல்லப்படும்."
"தம்பி செந்தில் பாலாஜியை 2006இல் இருந்து எனக்கு நன்றாகத் தெரியும். நான்கு மாதங்களுக்கு முன்பு வந்து சில சொந்த பிரச்சனைகள் இருப்பதால் அரசியலில் தீவிரமாக செயல்பட முடியாது," என்றும் தம்மிடம் கூறினார் என்று அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் கூறியுள்ளார்.
டிசம்பர் 5 அன்று ஜெயலலிதா நினைவு நாளுக்கும் வராததால் விசாரித்தபோது ஏதோ வழக்கு விவகாரமாக வழக்கறிஞருடன் இருப்பதாகவும் ,18 சட்டமன்ற உறுப்பினர்களையும் தாம்தான் அழைத்து வந்தது போலவும் பேசுவதாகவும் தமக்கு தெரிவிக்கப்பட்டதாக தினகரன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
"அமமுக நிர்வாகிகள் வீடுவீடாகச் சென்று உறுப்பினர் சேர்க்கை நடத்திய நான்காயிரம் படிவங்கள் அவரிடம் உள்ளன. அது நிர்வாகிகளின் உழைப்பு. அதைமட்டும் யாரிமாவது அவர் கொடுத்து அனுப்ப வேண்டும்," என்றும் தினகரன் கூறினார்.
"எங்கள் கட்சியில் இருந்து ஒரு நிர்வாகியை அழைத்து அதை விழாவாக நடத்தும் அளவுக்கு அவர்களின் நிலை உள்ளது. ஆர்.கே.நகரில் டெபாசிட் கூட கிடைக்காததால் அப்போதிருந்தே என்னை எதாவது செய்ய நினைக்கிறார்கள்," என்றும் தினகரன் தெரிவித்தார்.
"அவர் அதிமுகவில்கூட சேர்ந்திருக்கலாம். அதுவும் அம்மாவின் கட்சிதான். ஆனால் திமுக சென்றால் அம்மாவின் பெயரைப் பயன்படுத்த முடியாது," என்று தினகரன் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்