You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விண்வெளியின் எல்லை வரை சென்று திரும்பிய விமானம்
கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.
விண்வெளிக்கு செல்ல ஒரு விமானம்
அமெரிக்காவின் விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்துக்கு சொந்தமான விண்வெளிக்கு செல்ல வடிவமைக்கப்பட்ட சிறப்பு விமானம் விண்வெளிக்கு மிகவும் அருகில் சென்று திரும்பியுள்ளது.
ஸ்பேஸ்-ஷிப்-டூ என்று அழைக்கப்படும் அந்த விமானம் பூமியிலிருந்து 82.7 கிலோமீட்டர் உயரத்துக்கு சென்றது. இது அதன் நான்காவது சோதனை ஓட்டமாகும்.
மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்துச்செல்லும் போட்டியில் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ஜெஃப் பெஸோஸின் புளூ ஆரிஜின் நிறுவனங்களுடன் சர் ரிச்சர்டு பிரான்சனின் விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
அயர்லாந்து கருக்கலைப்பு மசோதா
கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கும் மசோதாவுக்கான அனைத்து சட்டப் படிநிலைகளையும் அயர்லாந்து நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதா சட்டமாக அந்நாட்டு அதிபரின் ஒப்புதல் தேவை.
சிசுவின் உடல்நலம் நன்றாக இல்லாத சமயத்திலும், தாயின் உடல் அல்லது மன நலம் பாதிப்புக்கு உள்ளாகும் சமயத்திலும், 12 வாரங்களுக்குள் கருவைக் கலைக்க இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது.
பிரான்ஸ் தாக்குதலாளி சுட்டுக்கொலை
பிரான்சின் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் உள்ள கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச்சூடு நடத்தி மூவரைக் கொன்ற செரிஃப் செகாட் எனும் நபர் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பிரான்ஸ் உள்விவகாரங்கள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் சிறைகளில் இருந்துள்ள அந்த நபர், சிறையில் இருந்தபோது தீவிர இஸ்லாமியவாதியாகியுள்ளார்.
சௌதிக்கு ஆயுத உதவியை நிறுத்த தீர்மானம்
பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை சம்பவத்தில் சௌதி அரேபியாவை குற்றஞ்சாட்டும் வகையில், யேமனில் நடந்து வரும் போரில் அந்நாட்டுக்கான ராணுவ உதவியை திரும்ப பெறும் தீர்மானத்திற்கு ஆதரவாக அமெரிக்க செனட் சபை வாக்களித்துள்ளது.
அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள '1973 போர் அதிகாரங்கள்' சட்டத்தை பயன்படுத்தி நிறைவேற்றப்பட்ட முதல் வாக்கெடுப்பு இதுவாகும்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகம், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் சௌதியுடனான உறவு பாதிக்கப்படும் என்று தெரிவித்தாலும், அவர்களது குடியரசு கட்சியை சேர்ந்தவர்களே தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க 56-41 என்ற கணக்கில் அந்நாட்டு வரலாற்றில் முதல் முறையாக அதன் வெளிநாட்டு ராணுவ செயல்பாடு முடக்கப்படுவதற்கான வாய்ப்பு உண்டாகியுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்