You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர்: யார் இந்த சக்திகாந்த தாஸ்?
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் ராஜிநாமா செய்த நிலையில் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டார்.
இந்திய அரசின் முன்னாள் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளராக இருந்த இவர், மூன்று வருடங்களுக்கு ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாகவும் இருந்தவர் சக்திகாந்த தாஸ்.
சக்திகாந்த தாஸ் 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை பொருளாதார விவகாரங்களின் செயலராக இருந்தவர். மேலும் ரிசர்வ் வங்கியுடன் நெருக்கமாக பணிபுரிந்துள்ளார்.
இந்திய நிதி ஆணையத்தின் உறுப்பினராக இருக்கும் சக்திகாந்த தாஸ், ஜி20 யின் இந்திய பிரதிநிதியாகவும் உள்ளார்.
முதலில் இந்திய நிதியமைச்சகத்தில் வருவாய் துறையின் செயலாளராக பிரதமரால் நியமிக்கப்பட்ட சக்திகாந்த தாஸ், பின்னர் பொருளாதார விவகாரங்கள் துறைக்கு மாற்றப்பட்டார்.
2016-ஆம் ஆண்டில், இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்திய பணமதிப்பிழப்பு விவகாரத்தை அமலாக்கும் முதன்மை முகங்களில் ஒன்றாக விளங்கினார்.
தமிழக அரசின் தொழிற்துறையின் செயலராகவும், தமிழக காகித நிறுவனத்தின் (டி.என்.பி.எல்) தலைவர் மற்றும் இயக்குநர், டைட்டன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குநர், தமிழ்நாடு பெட்ரோ பிராடக்ஸின் தலைவர், மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் தலைவர், எண்ணெய் மற்றும் எரிவாயு கழகத்தின் தலைவர், இந்தியன் வங்கியின் கெளரவ தலைவர், தென்னிந்திய பெட்ரோலிய தொழிற்துறை கழகம் மற்றும் வெடிப்பொருள் துறையின் இயக்குநர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர்.
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தின் கூடுதல் இயக்குநராகவும் பணியாற்றியவர்.
2017ஆம் ஆண்டு மே மாதம், ரிசர்வ் வங்கி, ஒரு ரூபாய் நோட்டை சக்திகாந்த தாஸின் கையெழுத்துடன் வெளியிட்டது.
ஒடிஷாவில் 1957-ஆம் ஆண்டு, பிப்ரவரி 26-ஆம் தேதி சக்திகாந்த தாஸ் பிறந்தார். வரலாற்றுத் துறையில் முதுகலை பட்டம் பெற்ற இவர், இந்திய ஆட்சிப் பணி சேவையில் 1980-ஆம் ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி சேர்ந்தார். அவருக்கு தமிழக பிரிவு ஒதுக்கப்பட்டது. பிரதமர் மோதியின் முதன்மை செயலராக உள்ள நிருபேந்திர மிஸ்ராவுக்கு மிக நெருக்கமானவராக சக்திகாந்த தாஸ் கருதப்படுகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்