You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உர்ஜித் படேல் ராஜிநாமா: என்ன சொல்கிறார் ரகுராம் ராஜன்?
உர்ஜித் படேலின் ராஜிநாமா முடிவு மிகவும் கவலையாக உள்ளது என எகானாமிக் டைம்ஸுக்கு அளித்த பேட்டியொன்றில் பேசியிருக்கிறார் ரகுராம் ராஜன்.
இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் ஆளுநரான உர்ஜித் படேல் திடீரென ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக இம்முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வருடங்களாக ரிசர்வ் வங்கியில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி தான் பெருமை கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கி மற்றும் பிரதமர் மோதி அரசிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிய நிலையில் உர்ஜித் ராஜிநாமா செய்துள்ளார்.
உர்ஜித் படேல், பதவிக்காலத்தின் இடையிலேயே ராஜிநாமா செய்த முதல் ரிசர்வ் வங்கி ஆளுநராவார்.
''டாக்டர் உர்ஜித் படேல் ராஜிநாமா செய்யும் முடிவை எடுத்ததற்கு காரணமான சூழ்நிலை என்ன என நாம் கேட்கவேண்டும். ஆர்பிஐயுடனான உறவு குறித்து அரசு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த ராஜினாமாக்கு வழிவகுத்த சூழ்நிலைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்''
''ஒரு அரசு ஊழியர் அல்லது ஒழுங்குமுறைப்படுத்தும் பணியைச் செய்பவர் ராஜிநாமா செய்வதென்பது உண்மையில் எதிர்ப்பு தெரிவித்தலின் ஒரு குறிப்பு'' என்கிறார் ரகுராம் ராஜன்.
''உர்ஜித் படேலின் ராஜிநாமா நமது பொருளாதாரத்துக்கு கேடு விளைவிக்கும். குறைந்தபட்சம் வரும் ஜூலை மாதம் வரையிலாவது அல்லது அடுத்த அரசு ஆட்சிக்கு வரும்வரையிலாவது அவர் பதவியில் இருக்க வேண்டும். பிரதமர் மோதி அவரை கூப்பிட்டு பேசி அவர் விலகியதற்கான காரணங்களை கண்டறியவேண்டும்'' என ஏஎன்ஐயிடம் பேசியிருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி.
''ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராகவும், ஆளுநராகவும் உர்ஜித் படேல் நாட்டுக்கு செய்த சேவைகளை பாராட்டத்தக்க ஆழமான உணர்வுடன் அரசு ஒப்புக்கொள்கிறது. அவரது நிபுணத்துவத்தின் பலன்களை பெறவும் அவருடன் பொருளாதார விவகாரங்களை கையாள்வது எனக்கு மகிழ்ச்சியை தந்திருந்தது'' என இந்தியாவின் நிதியமைச்சர் அருண் ஜேட்லி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
''உர்ஜித் படேல் அப்பழுக்கற்றவர். ரிசர்வ் வங்கியில் துணை ஆளுநர், ஆளுநர் பதவி உள்ளிட்டவற்றில் ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். பெரிய அளவிலான பொருளாதாரம் சார்ந்த விவகாரங்களில் ஆழமான புரிதலை கொண்டிருக்கக்கூடிய, உயர்திறன் கொண்ட ஓர் பொருளாதார நிபுணர் உர்ஜித் படேல். அவரது தலைமையின் கீழ் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியது ரிசர்வ் வங்கி. '' என ட்வீட் செய்திருக்கிறார் பிரதமர் மோதி.
"உர்ஜித் படேலின் ராஜிநாமா, சூழ்நிலை இன்னும் சரியாகவில்லை என்பதை தெளிவாக காட்டுகிறது….முன்பு போல் மோசமான சூழ்நிலைதான் இப்போதும் நிகழ்கிறது. இந்த ராஜிநாமா இந்திய அரசு ரிசர்வ் வங்கியின் செயல்பாட்டில் தலையிடுகிறது என்பதை தெளிவாக காட்டுகிறது" என முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சிங்ஹா தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: