You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"நான் இயேசுவை திருமணம் செய்துகொண்டேன்"
- எழுதியவர், வெலேரியா பெரஸோ
- பதவி, பொது விவகாரங்களுக்கான செய்தியாளர், பிபிசி உலக சேவை
ஜெஸிக்கா ஹெய்ஸ், தமக்கு தாமே திருமண உடையையும் மோதிரத்தையும் வாங்கிக் கொண்டார். ஆனால், திருமணத்திற்காக தேவாலயத்தில் பாதிரியார் முன்பு நிற்கும்போது, அவர் அருகில் மணமகன் என்று யாரும் இல்லை.
அவர் இயேசுவுடன் திருமணம் செய்து கொள்கிறார்.
41 வயதான ஹெய்ஸ், கடவுளின் மனைவியாக இருக்க விருப்பப்பட்டு, கன்னிப் பெண்ணாக தேவனுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்.
இதனை தேர்வு செய்பவர்கள், இந்த அர்ப்பணிப்பு நடைமுறையில், மணப்பெண் போல உடை அணிந்து, தங்களது வாழ்க்கையில் பாலியல் ரீதியாக எந்த உறவிலும் ஈடுபட மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்வார்கள்.
அந்தப் பெண்கள் கைவிரலில் மோதிரமும் அணிந்து கொள்வார்கள் - இயேசு கிறிஸ்துவுடன் நிச்சயம் ஆனதை இது குறிக்கும். இந்த ஆண்டு பிபிசி 100 பெண்கள் தொடரில் இடம் பெற்றிருக்கும் ஹெய்ஸ் கூறுகையில், "என்னிடம் அடிக்கடி கேட்பார்கள். உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா? என்று. நான் ஒரு கன்னியாஸ்திரி போல என்று எளிமையாக பதில் அளித்து விடுவேன். ஆனால் நான் தேவாலயத்திற்கு வெளியேவும் வாழ்கிறேன்" என்கிறார்.
அமெரிக்காவின் கடவுளுக்கு தங்களை அர்ப்பணத்திக் கொண்டிருக்கும் கூட்டமைப்பான "ஏயேசுவின் மனப்பெண்கள்" (brides of Christ) அமைப்பில் இருக்கும் 254 பேரில் இவரும் ஒருவர். இவர்கள் எல்லாம் செவிலியர்கள், மனநல ஆலோசகர்கள், கணக்காளர்கள் என பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகிறார்கள்.
2015 கணெக்கடுப்புப்படி, இவ்வாறு இயேசுவிற்கு அர்ப்பணித்துக் கொண்ட கன்னிப்பெண்கள் உலகம் முழுவதும் குறைந்தது 4,000 பேர் உள்ளனர். பரந்துப்பட்ட நிலப்பகுதிகள் மற்றும் பல்வேறு கலாசாரங்ளில் இந்த எண்ணிக்கை உயர்ந்து வருவதாக வத்திக்கான் கூறுகிறது.
கன்னியாஸ்திரிகள் போல, இந்த கன்னிப்பெண்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்குள் வாழ்வதோ அல்லது அதற்கான சிறப்பு ஆடைகள் அணிவதோ இல்லை. அவர்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள். வேலை பார்க்கிறார்கள்.
கத்தோலிக்க திருச்சபையில், இதற்கு சமமான ஆண்கள் என்று யாரும் இல்லை.
"நான் 18 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிகிறேன். நான் படித்த அதே உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக உள்ளேன்" என்கிறார் அமெரிக்காவின் இன்டியானாவில் உள்ள ஃபோர்ட் வெய்னில் வாழும் ஹெய்ஸ்.
பணியை தவிர்த்து இருக்கும் நேரத்தில், அவர் தனிப்பட்ட பிரார்த்தனை மற்றும் தவத்தில் பெரும்பாலும் ஈடுபடுகிறார். பாதிரியாரை சென்று பார்த்து, தனது ஆன்மீக ஆலோசகரையும் அவர் அவ்வப்போது சந்திக்கிறார்.
"நான் இருக்கும் இடத்தில் இருந்து இரண்டு மைல் தூரத்தில்தான் என் தேவாலயம் உள்ளது. நான் என் குடும்பத்தினர், நண்பர்கள் அருகில்தான் இருக்கிறேன். நான் ஆசிரியராக இருப்பதால் பெரும்பாலும் பகல் நேரத்தில் என்னை சுற்றி மனிதர்கள் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். எனினும், கடவுளுக்கான சிறப்பு சேவை அல்லது அர்ப்பணிப்பு தனியே இருக்கும்" என்கிறார் ஹெய்ஸ்.
இதற்கு முன்பு காதலில் இருந்திருந்தாலும், அது என்றுமே தம்மை முழுமையாக உணரச் செய்தது இல்லை என்று அவர் கூறுகிறார்.
"அனைவரையும் போல, நானும் திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என்று நினைத்தேன். சில பேரை பார்க்கவும் செய்தேன். ஆனால், எதிலும் மும்மரமாக இல்லை."
'நிரந்தர அர்ப்பணிப்பு'
இவ்வாறான கன்னிப்பெண்கள், கிறித்துவம் தொடங்கிய காலத்தில் இருந்து இருக்கிறார்கள். முதல் மூன்று நூற்றாண்டுகளில் பலரும் தியாகியாக இறந்து போனார்கள்.
அதில் ஒருவர் ஆக்னஸ் ஆஃப் ரோம். இவர் அந்நகரின் ஆளுநரை திருமணம் செய்ய மறுத்ததாகவும், அவர் மத ஆசாரங்களில் மிகுந்த ஈடுபாடுட்டுடன் இருந்ததால் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
துறவி வாழ்க்கை வளர்ந்து வந்த நிலையில், இந்த வழக்கம் இடைப்பட்ட காலத்தில் வீழ்ந்து போனது. பின்னர் 1971ஆம் ஆண்டு ஒரு தனி ஆவணம் மூலமாக தேவாலயத்தில் தன்னார்வம் உள்ள பெண்கள் நிரந்தர கன்னித்தன்மையை எடுத்து வாழலாம் என்று வத்திக்கான் அங்கீகரித்தது.
ஆன்மீக ஆலோசகரை பார்க்கும் வரை, கடவுளுக்கு தன்னை அர்ப்பணிக்கும் யோசனை வரவில்லை என்கிறார் ஹெய்ஸ்.
இந்த முடிவினை அவர் 2013ஆம் எடுத்தார். முடிவெடுத்து 2 ஆண்டுகள் கழித்து தனது 36 வயதில் அவர் இதனை செய்துள்ளார்.
"முன் இருந்த கடமைகள் எனக்கு இப்போதும் இருக்கிறது என்றாலும் இது வித்தியாசமானது. கடவுளை கணவராக பார்ப்பது என்பது, அவரை நண்பராக பார்ப்பதை விட முற்றிலும் வித்தியாசமானது" என்று ஹெய்ஸ் கூறுகிறார்.
பாலுறவுக்கு முக்கியத்துவம் உள்ள இந்த சமூகத்தில், உடலுறவை மொத்தமாக தவிர்த்து, கன்னித்தன்மை இழக்காமல் இருப்பவர்கள் வாழ்வது கடினமாக இருக்கலாம்.
"நீ திருமணம் ஆகாமல் தனியாக இருக்கிறாயா என்று பலரும் அடிக்கடி கேட்பார்கள். என் முக்கிய உறவு கடவுளுடன்தான், அவருக்கு என் உடலை அர்ப்பணித்துள்ளேன் என்பதை நான் அவர்களுக்கு விவரிக்க வேண்டும்."
கன்னிகளாக இருந்திருக்க வேண்டுமா?
கடந்த ஜூலையில், வத்திகான் வெளியிட்ட புதிய விதிமுறைகள், புனிதக் கன்னிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
என்னவென்றால், இதனை எடுத்துக்கொள்ளும், அதாவது கடவுளை திருமணம் செய்து கொண்டு அர்ப்பணிப்புடன் வாழப் போகிறவர்கள், இதனை மேற்கொள்ளும் வரையில் கன்னிகளாக இருந்திருக்க வேண்டுமா என்ற விவகாரம் எழுந்தது.
இதுவே, கன்னியாஸ்திரிகளை எடுத்துக் கொண்டால், அவர்கள் துறவு வாழ்க்கைக்கான உறுதிமொழி ஏற்றுக் கொண்ட பிறகு, எந்த உறவிலும் ஈடுபடக்கூடாது. ஆனால், கடவுளை திருமணம் செய்து கொள்பவர்கள் தங்களின் வாழ்க்கை முழுவதும் கன்னியாக இருந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள்.
சர்ச்சைக்குரிய ஆவணத்தின் பிரிவு 88ல், "பெண் அவரது உடலை இச்சைகளை கட்டுப்படுத்தி வைத்திருந்திருக்க வேண்டும் அல்லது கற்பின் நல்லொழுக்கத்தினை கடைபிடித்து முன்மாதிரியாக இருந்திருக்க வேண்டும்" என்பது மிகவும் முக்கியமானது ஆனால், அது "அத்தியாவசிய" முன் நிபந்தனை அல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது, கன்னித்தன்மையுடம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
இந்த புதிய விதிமுறைகள் வருத்தம் அளிப்பதாக ஹெய்ஸ் இருக்கும் கூட்டமைப்பு கூறுகிறது.
அக்கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், "உடல் ரீதியாக கன்னித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பது அவசியமானதாக கருதப்படாதது அதிர்ச்சி அளிப்பதாக" தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பான ஆவணத்தில் இன்னும் தெளிவு இருந்திருக்கலாம் என்று ஹெய்ஸ் நினைக்கிறார்.
"கடவுளின் மனைவியாக இருக்க நினைப்பவர்கள், திருமணம் செய்திருக்கக் கூடாது அல்லது கற்பின் நல்லொழுக்கத்தை மீறியிருக்கக் கூடாது என்றும் அந்த ஆவணம் கூறுகிறது" என்கிறார் அவர்.
"இளமை காலத்தில் ஒருவர் ஏதேனும் கண்மூடித்தனமாக செய்திருக்கலாம் அல்லது, ஒரு பெண் கற்பழிக்கப்பட்டு, தன் விருப்பத்திற்கு மாறாக கன்னித்தன்மையை இழந்திருக்கலாம்" என்று அவர் கூறுகிறார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :