You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உடுமலை கௌசல்யா: "என் மறுமணம் பற்றி விமர்சிப்பவர்களுக்கு என் சமூகப் பணி பதிலளிக்கும்"
- எழுதியவர், அபர்ணா ராமமூர்த்தி
- பதவி, பிபிசி தமிழ்
"நான் சங்கரை திருமணம் செய்த போதும், எங்களை எதிர்த்தார்கள். தற்போது சக்தியை திருமணம் செய்த போதும், சிலர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. பெண்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை தனியாக முடிவெடுப்பதை பொதுச் சமூகம் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை" என்கிறார் கோவையில் திருமணம் செய்து கொண்ட கௌசல்யா.
சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதற்காக, ஆணவப்படுகொலை செய்யப்பட்ட தலித் இளைஞர் சங்கரின் மனைவி கெளசல்யா, கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று மறுமணம் செய்து கொண்டார்.
கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த சக்தி என்பவருடன் மறுமணம் நடைபெற்றுள்ளது. சக்தி தமிழக பாரம்பரிய கலையான பறை இசை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
"பெரும்பாலான மக்கள் எனக்கு ஆதரவு அளித்தார்கள். சங்கரின் கிராமமும் எனக்கு முழு ஆதரவு அளித்துள்ளது" என்று பிபிசி தமிழுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் கூறுகிறார் தற்போது உடுமலைப்பேட்டையில் உள்ள சங்கர் வீட்டில் இருக்கும் கௌசல்யா.
கேள்வி: எப்போது சக்தியை முதல் முதலில் பார்த்தீர்கள்?
பதில்: 2016ஆம் ஆண்டு பறையிசை நிகழ்வு ஒன்றில், முதல் முறையாக சக்தியை சந்தித்தேன். பறை கற்றுக் கொள்வதற்காக சென்றிருந்தேன். அவரும் சமூகப்பணியில் ஈடுபட்டிருந்தார்.
கேள்வி: சக்தியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவு எப்போது எடுக்கப்பட்டது?
ப: இரண்டு வாரங்களுக்கு முன்புதான் நாங்கள் இந்த முடிவினை எடுத்தோம். உடனையே சங்கரின் சகோதரர்களை பார்த்து இதுகுறித்து பேசினோம். அவர்கள் எங்களுக்கு முழு ஆதரவு அளித்தார்கள்.
கேள்வி: மறுமணத்திற்கு பிறகு உங்கள் நம்பிக்கை எப்படி இருக்கிறது?
ப: நான் எப்போதும் நம்பிக்கையுடன்தான் இருந்தேன். இரண்டு ஆண்டுகளாக இப்படிதான் இருந்து வருகிறேன்.
கேள்வி: இன்னும் பயம் இருக்கிறதா?
ப: எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எங்கள் பாதுகாப்பு குறித்து சக்தி வீட்டாரும், சங்கர் வீட்டாரும் கவலையில் உள்ளனர். எங்களுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று அச்சப்படுகிறார்கள்.
கேள்வி: மறுமணத்திற்கு பிறகு எவ்வாறு உணர்கிறீர்கள்?
ப: அதே மாதிரிதான் உணர்கிறேன். மறுமணம் என் வாழ்க்கையில் நடந்த இன்னொரு நிகழ்வு. தொடர்ந்து சமூகப்பணி செய்வேன்.
கேள்வி: ஃபேஸ்புக்கில் உங்கள் மறுமணம் குறித்த விமர்சனங்களுக்கு உங்கள் பதில் என்ன?
ப: ஒரு குறிப்பிட்ட சாராருக்கு சமூகப் புரிதல் இல்லை. அவர்களுக்கு நான் தொடரப் போகும் பணி பதிலளிக்கும்.
கேள்வி: நீங்கள் திருமணம் செய்து கொண்டது உங்கள் பெற்றோருக்கு தெரியுமா?
ப: நான் அவர்களிடம் சொல்லவில்லை.
கேள்வி: நீங்கள் சங்கர் வீட்டில் இருப்பீர்களா அல்லது சக்தி வீட்டிலா?
ப: சமூகப்பணி எங்கிருக்கிறதோ அங்கு இருப்பேன்.
பிற செய்திகள்:
- ‘தலைவணங்காத கத்தார்’-தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு
- ஆஸ்திரேலியாவில் 10 ஆண்டுகளுக்குப் பின் இந்திய கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் வெற்றி
- கங்கை நதியை காப்பாற்ற 40 நாளாக உண்ணாவிரதம் இருக்கும் சாது
- ஜப்பான் அரசியாகும் மாசகோ பாதுகாப்பு அற்று உணர்வதேன்?
- ஆதித்யநாத் வெற்றிக்குப் பாடுபட்ட மகன் என்கவுண்டரில் கொலை - தந்தை வேதனை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: