இந்திய முதியோர் இல்லங்களின் சோகம் - 'என் பிள்ளைகளுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை'

பட மூலாதாரம், SAYAN HAZRA
முதியோர் இல்லங்களில் வாழும் முதியவர்களுக்கு, வாழ்வு அமைதியாகவும், அதே சமயம் நிலைகுலைந்து போனதாகவும் இருக்கிறது. புகைப்படக் கலைஞர் சாயன் ஹஜ்ரா தென்னிந்தியாவில் அதுபோன்ற ஓர் இல்லத்தில் ஓராண்டுக்கும் மேல் நேரத்தை செலவிட்டு முதியவர்களின் வாழ்வை ஆவணப்படுத்தியுள்ளார்.
2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 10 கோடிக்கும் அதிகமாக இருக்கிறார்கள். கடந்த சில தசாப்தங்களில் இந்தியாவில் குடும்ப அமைப்புகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு மாறிவிட்டதால், அவர்களுடைய எதிர்காலம் நிச்சயமற்றதாக இருக்கிறது.
பெரிய கூட்டுக் குடும்பங்கள், சிறிய தனிக் குடும்பங்களாக மாறிவிட்டன. பெருமளவிலான இந்தியக் குடும்பங்கள், தங்கள் பெற்றோர் வாழும் நகரில் வசிக்கவில்லை.
முதியோர் இல்லத்தில் இருக்கும் 76 வயதான சுமதி ``என்னால் சரியாகக் கேட்கவோ நடக்கவோ முடியவில்லை'' என்று சொல்கிறார். அங்குள்ள மற்றவர்களைப் போல, தனது அடையாளத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சுமதி, தன் பெயரின் முதல் பாதியை மட்டுமே சொல்ல விரும்புவதாகக் கூறுகிறார்.
அவரால் பாதியளவுக்குதான் பேச முடிகிறது. நீரிழிவு, ரத்த அழுத்தம் ஆகியவையும் உள்ளது.

பட மூலாதாரம், SAYAN HAZRA
குடும்பத்தினரை கவனிப்பதிலேயே தன்னுடைய பெரும்பாலான வாழ்நாளை அவர் கழித்துவிட்டார். ஆனால் இப்போது இந்த இல்லத்தில் வாழ்வதே நல்லதாக இருக்கிறது என்று சொல்கிறார். காலங்காலமாக, வயதான பெற்றோர்களை அவர்களுடைய பிள்ளைகள் கவனித்து வந்தார்கள்.
ஆனால், கடந்த பத்தாண்டுகளில், விரும்பியோ அல்லது விருப்பம் இல்லாமலோ முதியோர் இல்லங்களில் கடைசிக் காலத்தைக் கழிக்கும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.
``நான் வீட்டுக்குத் திரும்பிச் சென்றால் என்ன செய்வேன்? என் பிள்ளைகளுக்குப் பாரமாக இருக்க விரும்பவில்லை'' என்கிறார் சுமதி.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு முதியோர் இல்லத்துக்கு வந்த 80 வயதான பரமேஸ்வர், பல இரவுகளில் தன்னால் நன்றாக தூங்க முடியவில்லை என்று சொல்கிறார்.
``வயதான காலத்தில் உங்களுக்குத் துணையாக உங்கள் குடும்பம் இல்லாமல் போனால், மீதி காலத்துக்கு உங்களுக்கு உணவும், தங்குவதற்கு இடமும் தருவதாக இந்த இல்லங்கள் இருக்கின்றன'' என்று அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், SAYAN HAZRA
அவரை திருமணம் செய்து 50 ஆண்டுகள் வாழ்ந்த அவருடைய மனைவி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார். மனைவியை இழந்து எந்த அளவுக்கு வாடுகிறார் என்பது பற்றி அவர் அடிக்கடி பேசுகிறார்.
பரமேஸ்வருக்கு இடது கண்ணில் பார்வை போய்விட்டது. ஆனாலும் தினமும் பத்திரிகைகள் படிக்கிறார். அரசியல் அல்லது விளையாட்டு பற்றி பேசினால் அவருடைய முகம் பிரகாசம் அடைகிறது.
பெரும்பாலான நாட்களில் காலையில் யோகா செய்கிறார்.
93 வயதான சாரதா, கணவர் இறந்த பிறகு முதியோர் இல்லத்துக்கு வந்துவிட்டார்.

பட மூலாதாரம், SAYAN HAZRA
முதலில் தன்னுடைய இரு மகன்களின் வீடுகளிலும் மாறி மாறி தங்கியிருக்கிறார். ஒவ்வொருவர் வீட்டிலும் ஆறு மாதங்கள் என தங்கியிருக்கிறார். விடுமுறைக்காக வெளியில் செல்லும் போது, அவரை முதியோர் இல்லத்தில் விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
தாம் ``விரும்பத்தகாதவராக'' இருப்பதைப் போல உணர்ந்ததாக சாரதா கூறுகிறார். எனவே நிரந்தரமாகவே முதியோர் இல்லத்தில் தங்கிவிட முடிவு செய்ததாகவும் குறிப்பிடுகிறார்.
``முதியோர் இல்லத்தில் தங்குவோம் என்று ஒருபோதும் நான் நினைத்தது கிடையாது'' என்கிறார் அவர். ``வாழ்க்கையில் எனக்கு இனி எதுவுமே வேண்டாம். சாவு எப்போது வரும் என்று நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன்'' என்கிறார்.
இல்லத்தில் தங்கியிருப்பவர்கள் ஒன்றுகூடி நேரத்தை கழிக்கிறார்கள். தங்களுடைய குடும்பங்களில் இருந்ததை போல, இங்கு அவர்கள் அடிக்கடி ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள்.
``எனக்கு இங்கே இருக்கப் பிடிக்கவில்லை என்றாலும், நாம் வாழ்வதற்கு ஓர் இடமும், சாப்பிடுவதற்கு சாப்பாடும் தேவைப்படுகிறது. குறிப்பாக இவ்வளவு வயதான காலத்தில் இந்தத் தேவை இருக்கிறது'' என்று சாரதா கூறுகிறார்.
நாவல்கள் மற்றும் ஆன்மீக புத்தகங்களைப் படிப்பது அவருக்குப் பிடிக்கும். நாள் முழுக்க அதில் நேரத்தை செலவிடுகிறார்.

பட மூலாதாரம், SAYAN HAZRA
``மாற்றம் என்பது பிரபஞ்சத்தின் விதி'' என்று சொல்கிறார் 80 வயதான சத்யநாராயணன். இவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு முதியோர் இல்லத்துக்கு வந்தார். வீட்டில் மற்றவர்களுடன்ஓத்துப் போவது அவருக்கு சிரமமாக இருந்தது. புதியவர்களுடன் வாழ்வது சிரமமாக இருந்தது.
குடும்பத்தினர் தன்னை இனிமேல் கவனிக்க முடியாது என்ற நிலையில், இந்த இல்லத்துக்கு அவர் வந்திருக்கிறார். குடும்பத்தினரை இப்போது சந்திப்பது கிடையாது என்றும் தெரிவிக்கிறார்.
``ஒரு நொடியில் நீங்கள் மில்லியனராகவோ அல்லது பிச்சைக்காரனாகவோ மாறிவிடலாம். ஆனால், வாழ்க்கை ஓடிக் கொண்டேதான் இருக்கும்'' என்கிறார் அவர்.
நாகராஜ் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்த இல்லத்துக்கு வந்துள்ளார். கால்களில் வீக்கம், கடுமையான வலியைத் தரும் யானைக்கால் நோய் வந்ததாக டாக்டர் கூறிய பிறகு அவர் இங்கு வந்துள்ளார். அவரை இனி கவனித்துக் கொள்ள முடியாது என்று குடும்பத்தினர் கூறிவிட்டதாக அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், SAYAN HAZRA
இசையை நேசித்த அவர், தன்னுடைய அறையில் ரேடியோ கேட்பதில் நேரத்தை செலவிட்டிருக்கிறார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் தம்மை சந்தித்த திரு. ஹஜ்ராவிடம் ``வாழ்வும் சாவும் கடவுள் கைகளில் இருக்கிறது'' என்று அவர் சொல்கிறார். ``கடவுளின் உத்தரவுகளின்படி ஆடும் வெறும் பொம்மைகள் நாம்'' என்கிறார் அவர்.
62 வயதான அவர் கடந்த மார்ச் மாதம் மருந்துகளையும், உணவையும் சாப்பிடுவதை நிறுத்திய நான்கு நாட்களில் காலமாகிவிட்டார்.

பட மூலாதாரம், SAYAN HAZRA
102 வயதான சுசீலா பிரார்த்தனை மாலையைப் பிடித்துக் கொண்டு நாள் முழுக்க மந்திரங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் பாடவும் செய்கிறார். தன்னுடைய இளமைக் கால வாழ்வு நினைவிருப்பதாக அவர் சொல்கிறார். ஆனால் தன்னுடைய குடும்பத்தைப் பற்றிப் பேச விரும்பவில்லை என்றும் கூறுகிறார்.
இந்த இல்லத்தில் இரண்டு ஆண்டுகளாகத் தங்கியிருந்த 67 வயதான லட்சுமி, 2018 ஜூன் மாதம் காலமானபோது, அவருடைய உடலைக் கேட்டு யாரும் வரவில்லை. எனவே இல்லத்தின் அலுவலர்களே, அவருக்கு இறுதிச் சடங்குகளை செய்திருக்கிறார்கள்.

பட மூலாதாரம், SAYAN HAZRA
இல்லத்தில் தங்கி இருப்பவர்கள் மரணிக்கும் போது, இந்த உலகில் வாழ்ந்ததன் அடையாளங்களாக விட்டுச் செல்வது - ஒரு தொலைபேசி, ஒரு கடிகாரம், ஒரு ரேடியோ மட்டுமே.
சாயன் ஹஜ்ரா இந்தியாவில் உள்ள புகைப்பட நிருபர். நலவாழ்வு இல்லத்தின் பெயரும், அங்கே வாழ்பவர்களின் முழுப் பெயர்களையும் அவர்களுடைய வேண்டுகோளின்படி வெளியில் தெரிவிக்கப்படவில்லை.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












