முதியோர் இல்லத்தில் சேர்க்க முயற்சி: 72 வயது மகனை சுட்டுக்கொன்ற 92 வயது தாய்

பட மூலாதாரம், MARICOPA COUNTY SHERIFF'S OFFICE
தன்னை முதியோர் இல்லத்தில் சேர்ப்பதை தவிர்க்கும் வகையில் 92 வயதாகும் அமெரிக்க மூதாட்டி ஒருவர், 72 வயதான தனது மகனை சுட்டுக்கொன்ற சம்பவம் அமெரிக்காவில் நடந்தேறியுள்ளது.
அன்னா மே பிளஸ்ஸிங் என்ற அந்த மூதாட்டி, தனது மகன் தன்னை முதியோர் இல்லத்தில் சேர்ப்பதற்கு திட்டமிட்டிருந்ததை அடுத்து அவரை கொலை செய்துவிட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
தனது மகன் மற்றும் அவரது பெண் தோழியுடன் அரிசோனாவில் வசித்து வந்த வீட்டிலிருந்து வெளியே அழைத்துவரப்பட்ட அந்த மூதாட்டி,"எனது வாழ்க்கையை நீ எடுத்துக்கொண்டாய், அதனால் உன்னுடையதை நான் எடுக்கிறேன்" என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது மகனை கொன்ற பிறகு தானும் தற்கொலை செய்துகொள்வதற்கு திட்டமிட்டிருந்ததாக போலீசாரிடம் அந்த மூதாட்டி கூறியுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த ஜூலை 2ஆம் தேதி அரிசோனா மாகாணத்திலுள்ள மரிக்கோப்பா என்ற பகுதியில் நடந்ததாக கூறப்பட்டுள்ளது.
இதுவரை பெயர் வெளியிடப்படாத அந்த மூதாட்டியின் மகன், "தனது தாயுடன் வாழ்வது கடினமான விடயமாக மாறிவிட்டதால்" அவரை முதியோர் இல்லத்தில் சேர்ப்பதற்கு எண்ணியதாக தெரிகிறது.

பட மூலாதாரம், Getty Images
துணியின் உள்ளே இரண்டு கை துப்பாக்கிகளை மறைத்துக்கொண்டு மகனின் படுக்கையறைக்குள் அந்த மூதாட்டி சென்றதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
அதைத்தொடர்ந்து நடந்த வாக்குவாதத்திற்கு பிறகு, 1970களில் வாங்கிய சுழல் துப்பாக்கிகளில் ஒன்றை எடுத்து தனது மகனை அவர் சுட்டார்.
இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட மூதாட்டியின் மகனின் கழுத்து மற்றும் தாடையில் தோட்டாக்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தனது மகனை சுட்டுக்கொன்ற அந்த மூதாட்டி, பிறகு மகனின் 57 வயதாகும் பெண் தோழியை குறிவைத்துள்ளார். ஆனால் அந்த துப்பாக்கியை அறையின் மூலைக்கு தள்ளிவிட்ட அவர், மூதாட்டியின் இறந்த கணவர் 1970களில் வாங்கிக்கொடுத்ததாக கூறப்படும் மற்றொரு துப்பாக்கியையும் அவரிடமிருந்து தள்ளிவிட்டு போலீசை அழைத்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிறகு சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், அங்கு சாய்ந்த நாற்காலியில் அமர்ந்திருந்த மூதாட்டியை கைது செய்தனர்.
இந்நிலையில், அந்த மூதாட்டியின் மீது ஆயுள் தண்டனை அல்லது தூக்குத் தண்டனை விதிக்கக்கூடிய பிரிவு, மோசமான தாக்குதல் மற்றும் கடத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர் பிணையில் விடுவிக்கப்படுவதற்கான தொகையாக 5,00,000 டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












