திருப்பூர்: அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய 'இயற்கை திருமணம்'

இன்றைய நவீன காலத்தில் சூழ்நிலைக்கு ஏற்பவும், பொருளாதாரத்தை வளர்க்கவும் ஒன்றாய் இருந்த உறவினர்கள் அனைவரும் பல இடங்களில் பிரிந்து வாழும் சூழ்நிலை நிலவி வருகிறது.
இவர்கள் அனைவரையும் ஒன்றினைப்பது சில முக்கிய விசேஷங்கள் மட்டுமே. அதில் முதலிடம் பிடிப்பது திருமணம். அத்தகைய திருமணத்தை எவ்வாறு முன்மாதிரியாக நடத்தலாம் என திட்டமிட்ட திருப்பூரை சேர்ந்த குடும்பத்தினர் இயற்கை முறையில் திருமணத்தை நடத்தி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளனர்.
திருப்பூர் பின்னலாடை நிறுவன பின்புலம் கொண்ட லோகேஸ்வரன், கீதாஞ்சலி ரித்திகா நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு இரு வீட்டாரும் பேசி தங்களுக்கு சொந்தமான நிலத்தில் திருமணத்திற்கு தேவையான காய்கறிகளை பயிரிட்டு செயற்கை உரங்களை தவிர்த்து இயற்கையான முறையில் விவசாயம் செய்தனர்.
அதில் விளைந்த காய்கறிகளை மட்டுமே வைத்து அவர்கள் திருமணத்திற்கு உணவு தயாரித்துள்ளனர். அதே போல குடிநீரிலும் மாற்றத்தை கொண்டு வர எண்ணிய இவர்கள், மழை நீரை சேமித்து அதனையே சமையலுக்கும், திருமணத்திற்கு வந்தவர்களுக்கும் அருந்த கொடுத்தனர்.
மேலும், திருமணத்திற்கு வந்த சிறுவர்களுக்கு பனை நுங்கு வண்டி, பனை ஓலையால் செய்யப்பட்ட கைவினை பொருட்களையே விளையாட கொடுத்தனர்.

பட மூலாதாரம், கோவை சதாசிவம்
நவீன விளையாட்டுகளில் திளைத்திருக்கும் இன்றைய குழந்தைகளுக்கு இந்த விளையாட்டு பொருட்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதுடன் விளையாட்டு ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. பிளாஸ்டிக் முழுமையாக தவிர்க்கப்பட்ட இந்த திருமணத்தில் வெள்ளி செம்பு பாத்திரங்கள், மக்காசோள தட்டுக்களும் மட்டுமே தண்ணீர் மற்றும் உணவுகள் பரிமாற பயன்படுத்தப்பட்டது.
அதேபோல இயற்கை பொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, இயற்கை அங்காடிகள் மூலமாக மண்பாண்டங்கள், மூலிகை பொருட்கள், கைவினை பொருட்கள் என பலவிதமான பொருட்களின் விற்பனை அரங்குகளையும் ஏற்படுத்தியிருந்தனர்.
'இயற்கையை நேசிக்கிறோம்'
இயற்கை திருமணம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மணமகனின் தந்தை சதாசிவம், "வழக்கமாக எங்கள் குடும்பமும், சம்மந்தி வீட்டார் குடும்பமும் இயற்கை வாழ்க்கை முறையில் ஆர்வம் அதிகம் உள்ளவர்கள்" என்றார்.

தியானம், பொது வெளியில் மரம் நடுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியற்றை தொடர்ந்து செய்து வருகிறோம். இயற்கையுடன் ஒன்றிய வாழ்க்கை நிறைவாக இருக்கும் என்பது எங்களுடைய எண்ணமாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
"அதன் அடிப்படையிலேயே நிறைவான வாழ்க்கையின் ஒரு அடித்தளமாக பார்க்கப்படும் திருமணத்தில் இயற்கையை நேசிக்கும் விதமாக அனைத்து விஷயங்களையும் செய்து, மணமக்கள் மட்டுமல்லாது திருமணத்தில் கலந்து கொள்ளும் ஆயிரக்கணக்கானோரும் இயற்கையின் மகத்துவத்தை அறியும் விதமான ஏற்பாடுகளை செய்தோம்."

"திருமணத்தில் உணவு என்பது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுவதால், அதில் அதிக கவனம் செலுத்தினோம். நிச்சயதார்த்தம் முடிந்த உடனேயே செயற்கை உரங்கள் இல்லாத காய்கறிகளை விளைவித்து அதில் உணவு சமைத்தோம். வெள்ளை சர்க்கரை பயன்படுத்தாத இனிப்புகள், சேமித்து வைத்த மழை நீரில் சமைத்தது என மன நிறைவுடன் அனைத்தையும் செய்து முடித்தோம்" என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பார்த்ததில் வித்தியாசமான திருமணம்...
இயற்கை திருமணத்தில் விருந்தினராக கலந்து கொண்ட நந்தகுமார் பிபிசி தமிழிடம் தெரிவித்தபோது, தான் சென்ற திருமண நிகழ்வுகளில், இந்த இயற்கை திருமணம் மிகவும் வித்தியாசமாகயிருந்ததாக தெரிவித்தார். குதிரைவாலி அரிசியில் செய்யப்பட சாம்பார் சாதம், கருப்பட்டி இனிப்பு, முக்குளிகை டீ, சுவையான காய்கறிகள் என உணவுகள் அனைத்தும் நன்றாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், கோவை சதாசிவம்
மண்டபத்தின் முகப்பு முதலே பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்க்கப்பட்டு துணியில் எழுதப்பட்ட பேனர், வெள்ளி, பித்தளை டம்ளர்கள், மற்றும் மண்டபம் முழுவதும் மழைநீர் சேமிப்பு, பிளாஸ்டிக் தவிர்ப்பு போன்ற விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது.
ஒரு வித்தியாசமான திருமணத்தை மட்டுமல்லாது இயற்கையை நேசிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும் அளவிற்கு அவர்கள் திருமணத்தை நடத்தியது இன்றைய காலகட்டத்தில் பாராட்டுதலுக்குரியது என்று பலரும் தெரிவிக்கின்றனர்.

பெண் வீட்டார் சார்பில் மண மக்ளுக்கு காங்கேயம் இன பசு மற்றும் கன்று சீதனமாக வழங்கியது பாரம்பரியத்தை நினைவூட்டுவதாக அமைந்ததாகவும், இது போன்ற திருமணங்கள் பாரம்பரியம் மற்றும் இயற்கை பொருட்களின் மகத்துவத்தை உணர்த்துவதாகவும் விருந்தினர் நந்தகுமார் தெரிவித்தார். மேலும், ஏராளமானோர் பங்கேற்கும் திருமணத்தில் இது போன்ற முயற்சிகள் வரும் காலங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












