டெல்லியில் தூக்கில் தொங்கிய 11 பேர்: சிசிடிவி பதிவில் இருப்பது என்ன?

டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் அவர்களின் வீட்டில் கண்டெடுக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் அவர்கள் கூட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் வாதத்துக்கு வலு சேர்க்கும் வகையில் அங்கு கண்டெடுக்கப்பட்ட சிசிடிவி பதிவு ஒன்று இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சிசிடிவி பதிவு
படக்குறிப்பு, சிசிடிவி பதிவு

அந்த சிசிடிவி காணொளியில் குடும்ப உறுப்பினர்கள் ஸ்டூல்களையும் வயர்களையும் எடுக்கும் காட்சி இருக்கிறது. இந்த உபகரணங்களை அவர்கள் தூக்கில் தொங்க பயன்படுத்தப்பட்டிருந்தது.

11 பேரும் தூக்கில் தொங்கியதன் காரணமாகவே இறந்ததை உடல்கூறாய்வு அறிக்கை உறுதிசெய்கிறது.

சிசிடிவி பதிவு அவர்கள் கொலை செய்யப்படவில்லை என்பதற்கு வலு சேர்க்கும் வகையில் இருந்தபோதிலும் தொடர்ந்து விசாரணை நடத்திவருவதாக காவல்துறை பிபிசியிடம் தெரிவித்தது.

இந்த விவகாரத்தில் இன்னும் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை என்பதால் நாடே இதனை கவனித்துவருகிறது.

டெல்லியில் தூக்கில் தொங்கிய 11 பேர்

பட மூலாதாரம், Reuters

இறந்தவர்கள் அனைவரின் கண்கள் மற்றும் வாய் துணியால் கட்டப்பட்டிருந்தன, மேலும் அவர்களின் கைகள் பின்புறத்தில் வைத்து கட்டப்பட்டிருந்தது. எப்படி தற்கொலை செய்வதற்கு முன்னால் இதனை அவர்களால் செய்ய முடிந்தது எனக் கேள்வி எழுகிறது.

''கடந்த மூன்று மாத சிசிடிவி பதிவுகளை கவனமாக ஆராய வேண்டும்.அப்போதுதான் எதாவது யோசனை கிடைக்கும்'' என ஒரு காவல்துறை அதிகாரி பிபிசி இந்தியின் சல்மான் ரவியிடம் தெரிவித்தார்.

உடல்கள் அனைத்தும் கண்டெடுக்கப்பட்டதற்கு பின்னர், கூட்டு தற்கொலை என்பது ஆன்மீக மற்றும் தாந்த்ரீக செயல்பாடுகளுடன் தொடர்புடையது என்பது அவர்களது வீட்டினுள் எடுக்கப்பட்ட குறிப்புகளில் இருந்து தெரியவந்தது.

இறந்த 11 பேரும் பாட்டியாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதில் 75 வயதான நாராயண் தேவி, அவரது இரண்டு மகன்கள், மருமகள்கள் மற்றும் 15- 33 வயதிலுள்ள ஐந்து பேர குழந்தைகள் ஆகியோர் அடங்குவர்.

காவல்துறை 11 டைரிகளை கண்டுபிடித்துள்ளது. இவை நாராயண் தேவியின் இளைய மகனான லலித் பாட்டியாவுக்குச் சொந்தமானது என காவல்துறை நம்புகிறது. லலித் கடந்த 2008-ல் இறந்த தனது அப்பாவின் ஆவியால் ஆட்கொள்ளப்பட்டதாக நம்பியதாக காவல்துறை சந்தேகிக்கின்றனர்

டெல்லியில் தூக்கில் தொங்கிய 11 பேர்

பட மூலாதாரம், Getty Images

'' டைரியொன்றில் உள்ள குறிப்புகள் தரும் துப்பு என்னவெனில் அக்குடும்பம் இயற்கையை கடந்த சக்திகள் மீது வலுவான நம்பிக்கை கொண்டிருந்தனர் மேலும் அதுவே அவர்களை தற்கொலை செய்துகொள்ளத் தூண்டியிருக்கக்கூடும்'' என விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

இக்குடும்பம் வடக்கு டெல்லியில் நடுத்தர வகுப்பினர் அதிகளவு வாழும் புராரி எனும் பகுதியில் மூன்று மாடி வீட்டில் வாழ்ந்தனர்.

அக்குடும்பத்தினர் ஆன்மீகத்தில் அதிகம் நம்பிக்கை கொண்டிருந்ததாகவும் மகிழ்ச்சியாகவும் பொருளாதார வசதியுடன் வாழ்ந்து வந்ததாக அண்டை வீட்டினர் தெரிவித்தனர்.

மூத்த பேத்தியான 33 வயதாகும் பிரியங்காவும் இறந்தவர்களில் ஒருவர். இரண்டு வாரங்களுக்கு முன்னதாக அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பலரை அழைத்து அக்குடும்பம் கொண்டாட்டமான ஒரு நிகழ்ச்சியை நடத்தியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :