2018 தெலங்கானா தேர்தல் களம்: முக்கிய கட்சிகளும் சவால்களும்

பட மூலாதாரம், KCR/FB
தெலங்கானா சட்டமன்ற தேர்தல் அம்மாநிலத்தில் மட்டும் அல்லாது நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது. எதிரெதிரே நின்று கொண்டிருந்த தெலுங்கு தேசம் கட்சியும், காங்கிரசும் முதல் முறையாக தெலங்கானா ராஷ்டிர சமிதிக்கு (டிஆர்எஸ்) எதிராக கைக்கோர்த்து, இந்திய அளவில் பாஜகவிற்கு எதிரான மூன்றாவது அணியாக முயற்சித்து வருகிறது.
தெலங்கானா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறுகிறது. டிஆர்எஸ்-க்கு சுலபமாக ஆரம்பித்த தேர்தல் நடப்புகள், தற்போது கடினமாக மாறியுள்ளது.
எ ஐ எம் ஐ எம் எனப்படும் அனைத்து இந்திய மஜ்லிஸ்-இ-இதிஹத்-உல் முஸ்லிம் கட்சி டிஆர்எஸ் பக்கம் இருக்க, மறுபக்கம் காங்கிரஸ், தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தெலங்கானா ஜனசமிதி ஆகிய கட்சிகள் பெரும் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.
மறுபக்கத்தில் பா.ஜ.க தனித்து போட்டியிடுகிறது. மற்ற சிறு கட்சிகளின் ஆதரவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் களத்தில் உள்ளது.
இக்களத்தில் முக்கிய போட்டி டிஆர்எஸ் மற்றும் மெகா கூட்டணிக்கும் தான்.
தனது நலத்திட்டங்கள் குறித்து டிஆர்எஸ் பேச, டிஆர்எஸ் அரசின் நிறைவேறாத வாக்குறுதிகளில் இந்த மெகா கூட்டணி கவனம் செலுத்தி வருகிறது.
தெலங்கானா ராஷ்டிர சமிதியின் 5 நலத்திட்ட ஆயுதங்கள்
2014ஆம் ஆண்டு, 119 சட்டமன்ற தொகுதிகளில் 63 தொகுதிகளை கைப்பற்றிய டிஆர்எஸ், புதியதாக உருவான தெலங்கானா மாநிலத்தின் முதல் ஆளும்கட்சியானது. டிஆர்எஸ் ஆட்சிக்கு வந்தவுடன், மற்ற கட்சிகளில் இருந்து 28 கூடுதல் எம்எல்ஏ-க்கள், இவரது கட்சிக்கு வந்தனர். எதிர்கட்சியினை பலவீனமாக்க, டிஆர்எஸ் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அவர் விமர்சிக்கப்பட்டார்.
2014ஆம் ஆண்டு தேர்தலின் போது பிரச்சாரம் செய்த டிஆர்எஸ், தங்கள் கட்சி மாநில சுயாட்சியை கொண்டு வருவதோடு, அதன் முன்னேற்றத்தை தோலில் தூக்கி சுமக்கும் என்று கூறியது. உணர்ச்சிகளை தொடும் வகையில் அந்த பிராச்சாரம் அமைந்திருந்தது.
வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு, ஒரு லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க வழிவகை செய்வதாக தேர்தல் அறிக்கையில் அல்லாத வாக்குறுதிகளை டிஆர்எஸ் அளித்தது.

பட மூலாதாரம், NOAH SEELAM
அந்த தேர்தல் அறிக்கையையும் வாக்குறுதிகளும் தற்போது 2018 தேர்தலில் அவர்கள் ஆட்சியில் அமர்வதற்கு எதிராக திரும்பியுள்ளன. ஏனெனில், டிஆர்எஸ் அளித்த வாக்குறுதிகளை அது நிறைவேற்றவில்லை என எதிர்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், தங்கள் ஆட்சிக்காலத்தில் மிகப் பெரிய சாதனை செய்ததாக ஐந்து விஷயங்களை டிஆர்எஸ் கூறுகிறது. இந்த சாதனைகளால், தெலுங்கு தேசம்-காங்கிரஸ் ஆட்சிகளில் பெரும் இழப்புக்கு ஆளான மக்களை பாதுகாத்ததாகவும் அக்கட்சி கூறுகிறது.
1.தடையில்லா 24 மணி நேரம் மின்சாரம்
2.கல்யாண லட்சுமி திட்டம் மற்றும் ஷாதி முபாரக் திட்டம் - இதன்கீழ் திருமணத்தின்போது மனப்பெண்ணிற்கு ஒரு லட்சத்து நூற்றி பதினாரு ரூபாய் அரசு வழங்கும்.
3.ரயத்து பந்து திட்டம் - இதன் கீழ் தெலங்கானாவில் ஒவ்வொரு விவசாயி வைத்திருக்கும் ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஒரு போகத்திற்கு 4000 ரூபாய் என ஆண்டுக்கு 8000 ரூபாய் வழங்கப்படும்.
4.கேசிஆர் கிட் - அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு மகப்பேறு உதவிகள் (மருந்துகள், மற்றும் பிற தேவையான பொருட்கள்) வழங்கப்படும்.
5. குடிநீர் மற்றும் பாசன வசதிகள் வழங்க மிஷன் பாகிரதா மற்றும் மிஷன் காகடியா போன்ற பெரும் பாசன திட்டங்களை மாநில அரசு மேற்கொண்டது.
இத்துடன், நெசவாளர்கள், ஆடு மேய்ப்பவர்கள், துணையை இழந்தவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தியுள்ளது.
ஆனால், டிஆர்எஸ்-ன் பெரிய சாதனைகளின் தவறுகளை எதிர்கட்சிகள் வெளிப்படுத்துகின்றன.

பட மூலாதாரம், Hindustan Times
தடையில்லா மின்சாரத்தை பொறுத்தவரை முழு பெருமையும் மாநில அரசை சாராது என்றும் நாட்டில் மிகை மின்சக்தி இருந்தது அதற்கு காரணம் என்றும் எதிர்கட்சி கூறுகிறது.
பாசன வசதிகளை பொறுத்த வரை, ஏற்கனவே இருக்கும் திட்டங்களை மாற்றி வடிவமைத்ததாகவும் மற்றும் பாதி முடிக்கப்பட்ட திட்டங்களில் பெரும் பணத்தை வீணடித்ததாகவும், அதிலும் ஊழல் நடைபெற்றதாகவும் டிஆர்எஸ் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது.
பலராலும் பாராட்டப்பட்ட ரயத்து பந்து திட்டமும், எதிர்கட்சியினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. நில உரிமையாளர் பைகளுக்குதான் அரசு பணம் செல்கிறது என்றும், குத்தகை விவசாயிகளுக்கு இதனால் எந்த பலனும் இல்லை என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
ஒட்டுமொத்த வளர்ச்சி, முக்கியமாக இளைஞர்களின் எதிர்காலத்தை முழுமையாக புறக்கணித்து விட்டு, அரசு தனது நலத்திட்டங்களை வைத்து தம்பட்டம் அடித்துக் கொள்வதாக எதிர்கட்சியினர் கூறுகிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
ஐந்து நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்
தனது சொந்த வாக்குறுதிகளையே செயல்படுத்த தவறிவிட்டதாக டிஆர்எஸ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ், தெலுங்கு தேசம் மற்றும் சிபிஐ கட்சிகளை உள்ளடக்கிய மெகா கூட்டணி மற்றும் தனித்து போட்டியிடும் பாஜக, டிஆர்எஸ் அரசு செய்ய தவறிவிட்டதாக ஐந்து விஷயங்களை சுட்டிக்காட்டுகின்றன.
1.வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் குடும்பங்களுக்கு இரண்டு பெட் ரூம் கொண்ட வீடுகள் கட்டித்தரப்படும் என்ற வாக்குறுதியை அது செய்யத்தவறிவிட்டது.
2.தலித்துகளுக்கு 3 ஏக்கர் நிலம் வழங்கத் தவறியது.
3.கேஜி வகுப்புகளில் இருந்து பிஜி, அதாவது முதுகலை படிப்பு வரை இலவச கட்டாய கல்வி வழங்கப்படும் என்று கூறியது.
4.ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள்.
5.ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான குடிநீர்.
இதெல்லாம் தவிர, புதிய மாவட்ட தலைமையகத்தில் பல்நோக்கு மருத்துவமனைகள் கட்டித் தரப்படும், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, முஸ்லிம்களுக்கு 12 சதவீத இடஒதுக்கீடு, ஹுசைன் சாகரை சுத்தப்படுத்துவது, உள்ளிட்ட பல வாக்குறுதிகள் 2014 தேர்தல் அறிக்கையில் இருந்தது. தற்போது அதுவே எதிர்கட்சியினர் விமர்சிக்கும் விஷயமாக மாறியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளின் மாதிரி
பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளதன் மூலம் டிஆர்எஸ் கட்சி மக்களிடையே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அக்கட்சி ஏற்கனவே அளித்த வாக்குறுதி செயல்படுத்தப்பட்ட விதம் தேர்தலில் எதிரொலிக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இது எந்தளவுக்கு தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுகிறது.
டிஆர்எஸின் எதிர்கட்சிகளான டிடிபி, காங்கிரஸ் ஆகியவை ஓரணியில் செயல்படுவதாக அறிவித்துள்ளன. ஆனால், இந்த இரண்டு கட்சிகள் ஏற்கனவே கொண்டுள்ள வாக்காளர்களின் ஆதரவும் ஒரே திசையில் இருக்குமா என்பது தெரியவில்லை.
பாஜக தனது கட்சியின் முக்கிய தலைவர்களான பிரதமர் நரேந்திர மோதி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத், ராமன் சிங் ஆகியோரை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தினாலும் அவை குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இந்த தேர்தலை பொறுத்தவரை சிபிஐ, தலித்திய இயக்கங்களுடன் இணைந்து பகுஜன் இடது முன்னணி (பிஎல்எப்) என்ற கூட்டணியின் மூலம் களத்தில் இறங்கினாலும், அக்கட்சியின் பரவல் மாநிலம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்த கூடிய நிலையில் இல்லை.
கேசிஆர் தனது கடந்த ஆட்சிக்காலத்தின் மூலம் சாதித்தாரா அல்லது தனது தவறுகளின் மூலம் காங்கிரஸ், டிடிபி ஆகியவற்றின் கனவுக்கு வழிவகுத்துள்ளாரா என்பதும், இந்த கூட்டணி அமைப்புமுறை வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னுதாரணமாக அமையுமா என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் டிசம்பர் 11ஆம் தேதி பதிலளிக்கும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












