'ராகுல் காந்திதான் என்னை பாகிஸ்தான் போகச் சொன்னார்' - பஞ்சாப் அமைச்சர்

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

இன்று முக்கிய இந்திய நாளேடுகள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - 'ராகுல்தான் பாகிஸ்தான் போகச் சொன்னார்'

"ராகுல் காந்திதான் என்னை பாகிஸ்தான் போகச்சொன்னார். அவர்தான் என் தலைவர்," என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் அமைச்சரவையில் அங்கம் வகிப்பவருமான நவ்ஜோத் சிங் சித்து கூறியுள்ளார் என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானில், இந்திய எல்லை அருகே கர்தார்பூரில் அமைந்துள்ள குருத்வாராவுக்கு இந்தியர்கள் செல்ல சிறப்பு சாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சித்து பாகிஸ்தான் சென்றிருந்தார்.

அமிர்தசரஸில் சமீபத்தில் ஒரு கிரேனேடு தாக்குதல் நடத்தப்பட்டதில் மூவர் கொல்லப்பட்டத்தைத் தொடர்ந்து சித்துவிடம் பாகிஸ்தான் செல்லவேண்டாம் என்று கூறியதாக பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கூறியிருந்தார்.

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இலங்கை

தி இந்து - கேரள பாஜகவில் உட்கட்சி மோதல்

சபரிமலை

பட மூலாதாரம், Getty Images

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழையலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து கேரளா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி நடத்திவரும் போராட்டங்களை சபரிமலையில் இருந்து கேரள அரசின் தலைமைச் செயலகத்துக்கு மாற்றும் முடிவால், அந்த மாநிலத்தில் பாஜகவில் உட்கட்சிப்பூசல் உண்டாக வாய்ப்புள்ளதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கோழிக்கோட்டில் மாநில பாஜக தலைவர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை வெள்ளியன்று நடத்திய கூட்டத்தில் பல மூத்த கட்சி நிர்வாகிகள் பங்கேற்கவில்லை எனத் தெரிகிறது என்று அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சபரிமலை விவகாரத்தை வைத்து கேரளாவில் பாஜகவை பலப்படுத்தும் முயற்சி, உட்கட்சி மோதலால் பின்னடைவை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது.

இலங்கை

தினமணி : மேகதாது விவகாரம் - தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு

காவிரி

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக ஆய்வு அறிக்கை தயார் செய்ய கர்நாடக அரசுக்கு மத்திய நீர் ஆணையம் அளித்துள்ள அனுமதிக்குத் தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளதாக தினமணி நாளிதழ் முதல்பக்க செய்தி வெளியிட்டுள்ளது.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் ரூ.5,912 கோடி மதிப்பீட்டில் 67.16 டிஎம்சி நீரைத் தேக்கி வைக்கும் வகையில் அணை கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இது தொடர்பான முன்சாத்தியக் கூறு அறிக்கையை கர்நாடக அரசு அண்மையில் அனுப்பியிருந்தது. இதன் அடிப்படையில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு சில கட்டுப்பாடுகளுடன் மத்திய நீர் ஆணையம் அண்மையில் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், தமிழக அரசின் பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், "மேகதாது அணை, குடிநீர் திட்டம் ஆகியவை தொடர்பாக விரிவான ஆய்வு அறிக்கை தயார் செய்வதற்கு கர்நாடக அரசின் காவிரி நீர்வாரி நிகம் நிறுவனத்துக்கு மத்திய நீர் ஆணையம் கடந்த 22-ஆம் தேதி அளித்துள்ள அனுமதிக்குத் தடை விதிக்க வேண்டும். மேற்கண்ட அனுமதி தொடர்பாக 22-ஆம் தேதியிட்ட கடிதத்தை மத்திய நீர் ஆணையம் திரும்பப் பெறவும் உத்தரவிட வேண்டும். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விரிவான ஆய்வு அறிக்கை தயார் செய்யாமல் இருக்க கர்நாடக அரசின் துணை நிறுவனமான காவிரி நீர்வாரி நிகமுக்கு உத்தரவிட வேண்டும். இந்த மனு மீதான விசாரணை முடியும் வரையிலும், தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும்" என கோரப்பட்டுள்ளதாக இந்நாளிதழ் செய்தி மேலும் விவரிக்கிறது.

இலங்கை

தினமலர் : ஃபோர்ப்ஸ் பட்டியலில் நான்கு இந்திய பெண்கள்

ஃபோர்ப்ஸ்

பட மூலாதாரம், HOANG DINH NAM / getty images

நியூயார்க்கின் பிரபல பத்திரிகையான, 'ஃபோர்ப்ஸ்' வெளியிட்டுள்ள, தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்கும் பெண்களுக்கான, 'டாப் - 50' பட்டியலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பெண்கள் இடம் பிடித்துள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, 'சிஸ்கோ' நிறுவனத்தின் முன்னாள் தலைமை தொழில்நுட்ப அதிகாரி, பத்மஸ்ரீ வாரியர், 'உபேர்' நிறுவனத்தின் மூத்த இயக்குனர், கோமல் மங்டானி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.'கான்புளுவென்ட்' நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரி, நேஹா நார்க்ஹேடே, 'டிராபிஜ்' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, காமாட்சி சிவராமகிருஷ்ணன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் நான்கு பேரும், நிறுவனத்தின் தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்கியதற்காக, 'ஃபோர்ப்ஸ்' பட்டியலில் இடம் பெற்று உள்ளனர் என்கிறது இந்நாளிதழ் செய்தி.

இலங்கை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: