மித்தாலி ராஜ் - 'பயிற்சியாளர் ரமேஷ் பவார் மற்றும் டயானா எடுல்ஜி பாரபட்சம் காட்டுகின்றனர்'

பட மூலாதாரம், Julian Herbert-IDI
இன்று முக்கிய நாளேடுகளில் வெளியான செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - மித்தாலி ராஜ் குற்றச்சாட்டு
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரமேஷ் பவார் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினரும், மகளிர் அணியின் முன்னாள் உறுப்பினருமான டயானா எடுல்ஜி ஆகியோர் தமக்கு எதிராக பாரபட்சகமாக நடந்துகொள்வதாகவும், தமது கிரிக்கெட் வாழ்க்கையை அழிக்க முயல்வதாகவும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை மித்தாலி ராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் தாம் சேர்த்துக்கொள்ளப்படாதது குறித்து தாம் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானதாக பிசிசிஐ-க்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான அந்த ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி தோல்வியைத் தழுவியது.
பயிற்சியாளர் ரமேஷ் பவார் தாம் பயிற்சியில் ஈடுபடும்போது கண்டுகொள்ளாமல் இருப்பது, அவருடன் பேசச் செல்லும்போது செல்பேசி திரையை பார்த்துக்கொண்டு தம்முடன் பேசாமல் செல்வது போன்ற அவமானப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டதாக மித்தாலி அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.

தி இந்து - தொடர்ந்து நான்காம் ஆண்டாக தமிழகம் முதலிடம்

பட மூலாதாரம், Getty Images
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வழங்கும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ததில் சிறப்பாக செயல்பட்ட மாநிலத்துக்கான விருதை தொடர்ந்து நான்காவது ஆண்டாக தமிழகம் பெற்றுள்ளது.
புதுடெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் செவ்வாயன்று இந்த விருதைப் பெற்றுக்கொண்ட தமிழக சுகாதார அமைச்கர் விஜய பாஸ்கர், 2008 முதல் தற்போது வரை 1,198 உறுப்புக் கொடையாளார்களிடம் இருந்து 6,886 உறுப்புகள் பெறப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இது பிற இந்திய மாநிலங்களைவிட அதிகமாகும்.

தினத்தந்தி - ஸ்டெர்லைட் வழக்கில் இன்று தீர்ப்பு

பட மூலாதாரம், Getty Images
தூத்துக்குடியில் 13 பேர் கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பிறகு தமிழக அரசு ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூடியதை எதிர்த்து, ஸ்டெர்லைட் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த மூவர் குழு ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்திய ஆய்வை முத்திரையிடப்பட்ட 48 உறைகளில் வைத்து தாக்கல் செய்துள்ளது.

தினகரன் - கேஜ்ரிவாலை சந்திக்க குண்டுடன் வந்தவர்

பட மூலாதாரம், Getty Images
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலின் இல்லத்திற்கு, பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு துப்பாக்கி குண்டுகளுடன் வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மசூதி ஒன்றில் பாதுகாவலராக உள்ள முகமது இம்ரான் எனும் அந்த நபர், தாம் பணியாற்றும் மசூதியில் கண்டெடுத்த அந்த துப்பாக்கி தோட்டக்களை தனது பர்சில் வைத்திருந்ததாகக் கூறியுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பு டெல்லி தலைமைச் செயலகத்தில் அரவிந்த் கேஜ்ரிவாலைச் சந்திக்க வந்த நபர் ஒருவர், அவர் மீது மிளைக்காய்பொடியைத் தூவ முயன்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












