அயோத்தி மாநாடு: சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படங்கள் உண்மையா?

SOCIAL MEDIA

பட மூலாதாரம், SOCIAL MEDIA

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் ஆலயம் கட்டப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் கர சேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டு 26 ஆண்டுகள் நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், விஷ்வ இந்து பரிஷத் ஏற்பாடு செய்துள்ள மாநாடு அயோத்தியில் நடைபெற்றது.

இந்த தர்ம சபையில் கலந்து கொள்வதற்காக இந்து துறவிகள் மற்றும் வலதுசாரி செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான இந்துக்கள் அயோத்தியில் ஞாயிறன்று ஒன்று கூடினார்கள்.

வலதுசாரி முனைப்பு கொண்ட பல சமூக ஊடக பக்கங்களில் இது பற்றி பிரசாரங்கள் பெருமளவில் நடைபெற்றன. இந்த தர்ம சபையில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கானோர் அயோத்திக்கு வருவார்கள் என்று அவை முன்கணிப்புகளும் வெளியிட்டிருந்தன.

இந்த நிகழ்ச்சி முடிந்த அடுத்த நாள், சமூக ஊடகங்களில் அயோத்தி தொடர்பான புகைப்படங்கள் பெருமளவில் வெளியானது. அயோத்தியே காவி வண்ணம் பூசியிருந்ததாக கூறிய பல சமூக ஊடகங்கள், தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டன.

இந்த புகைப்படங்கள் உண்மையானவையா அல்லது மக்களின் எண்ணிக்கையை அதிகரித்து காட்டி மக்களின் மனதில் வியப்பை ஏற்படுத்த போலியாக மிகைப்படுத்தி காட்டப்பட்டவையா என்பதை பிபிசி குழு ஆராய்ந்தது. ஆனால், பகிரப்பட்ட பல படங்கள் போலியானவை என்று ஆய்வு முடிவுகளில் கண்டறியப்பட்டது.

கூட்டம்

பட மூலாதாரம், SOCIAL MEDIA GRAB

மேலே உள்ள படத்தைப் பகிர்ந்து, தர்ம சபைக்கு கிடைத்த பொதுமக்கள் ஆதரவு மகத்தானது என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் உண்மை என்னவென்றால், இந்த படம் அயோத்தியில் எடுக்கப்பட்டதல்ல, 2017 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மராட்டா போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது.

இட ஒதுக்கீடு மற்றும் சமூக நீதி கோரி பல்லாயிரக்கணக்கான மராத்தியர்கள் மாநில தலைநகர் மும்பையில் உள்ள பைகுலா பகுதியில் தொடங்கி ஆசாத் மைதானம் வரை அமைதிப் பேரணி நடத்தினார்கள்.

கூட்டம்

பட மூலாதாரம், SOCIAL MEDIA GRAB

படக்குறிப்பு, அயோத்தி தர்ம சபையின்போது எடுக்கப்பட்ட புகைப்படமாக காட்டப்படும் கர்நாடகாவில் நடைபெற்ற பேரணியின் புகைப்படம்

கன்னட மொழி பதாகை-சுவரொட்டி

இரண்டாவது படம் கர்நாடகாவை சேர்ந்தது, இதுவும் அயோத்தி தர்ம சபையின்போது எடுக்கப்பட்ட புகைப்படமாக காட்டப்படுகிறது. தர்மசபையில் கலந்து கொள்வதற்காக அயோத்தியை நோக்கி மக்கள் கூட்டம் செல்வதாக இந்த புகைப்படம் பற்றி பதிவிடப்பட்டிருந்தது.

இந்த புகைப்படத்தில் கன்னட மொழியில் எழுதப்பட்ட பதாகைகளும் சுவரொட்டிகளும் தெளிவாக தெரிகின்றன.

இந்த புகைப்படம், பஜ்ரங் தள அமைப்பின் ஒரு நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்டது.

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடம், இந்து கடவுள் ராமரின் பிறப்பிடமாக கருதப்படுகிறது. இதே இடத்தில் பல தலைமுறைகளாக தாங்கள் தொழுகை நடத்தி வருவதாக முஸ்லிம்கள் கூறுகின்றனர்.

1992 டிசம்பர் 6ஆம் தேதி கர சேவகர்கள் பெரும்திரளாக கூடி பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, இந்து மற்றும் இஸ்லாமிய மதத்தினரிடையே பதற்றங்கள் அதிகரித்தன.

இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் நடைபெற்ற வகுப்புவாத கலவரங்களில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

அதன்பிறகு, அயோத்தியில் ராமர் ஆலயம் கட்ட வேண்டும் என அவ்வப்போது பல அமைப்புகளும், வலதுசாரி அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்த விவகாரம் தற்போது உச்ச நீதிமன்றத்தில் உள்ள நிலையில், வரவிருக்கும் தேர்தல்களை கருத்தில் கொண்டு ராமர் ஆலயம் கட்டுவதற்கான சிறப்பு சட்டங்களை அரசு கொண்டு வரவேண்டும் என பல தலைவர்கள் கோருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :