You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கஜ புயலில் 63 பேர் உயிரிழப்பு: 15,000 கோடி ரூபாய் கோரும் தமிழ்நாடு
கஜ புயலினால் ஏற்பட்ட சேதத்தைச் சரிசெய்ய மத்திய அரசு பதினைந்தாயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி பிரதமர் நரேந்திர மோதியிடம் கோரியிருக்கிறார்.
இன்று காலையில் பிரதமர் மோதியைச் சந்தித்த பழனிச்சாமி, இந்த புயலினால் எம்மாதிரியான சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்ற விவரங்கள் அடங்கிய மனுவை அளித்தார்.
இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், உடனடி நிவாரணத்திற்காக ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாயும் முழு சேதத்தையும் எதிர்கொள்ள ஏதுவாக பதினைந்தாயிரம் கோடி ரூபாயும் மத்திய அரசிடம் கேட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
கஜ புயலினால் ஏற்பட்ட சேதத்தை நேரடியாக அறிந்துகொள்ள உடனடியாக மத்திய குழுவை அனுப்ப வேண்டுமென்றும் அவர் கோரினார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு 82,000 பேரை முகாம்களில் தங்க வைத்ததால் பாதிப்புகள் குறைக்கப்பட்டன என்றும் சேதத்தைப் பார்வையிட பிரதமர் தமிழ்நாடு வருவாரா என உறுதியளிக்கவில்லையென்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
இப்போதைய அதிமுக ஆட்சியில் இழப்பீடு தொகை பெருமளவில் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது என்றும் வான்வழியாக பறந்து பார்த்தால்தான் சேதத்தைத் தெளிவாகப் பார்க்க முடியும் என்பதற்காகவே ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
பிரதமரிடம் தமிழக அரசு அளித்த கோரிக்கை மனுவில் மத்திய அரசிடமிருந்து, மின்சாரம், சாலை, வீடுகள் என பல்வேறு சேதங்களைச் சரிசெய்ய மிகச்சரியாக 14, 910 கோடி ரூபாய் கோரப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை கடந்த நவம்பர் 16ஆம் தேதியன்று தாக்கிய கஜ புயல் காரணமாக இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டே முக்கால் லட்சம் குடிசை வீடுகள் உட்பட சுமார் மூன்று லட்சத்து நாற்பதாயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன.
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளும் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்களும் இந்தப் புயலில் வீழ்ந்துள்ளன. 3 லட்சத்து 78 ஆயிரம் பேர் மீட்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் புயலின் காரணமாக, 12 மாவட்டங்களில் மின் கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் கீழே விழுந்துள்ளன. 53 லட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
கடற்கரையோரப் பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சுமார் 2,500 படகுகள் சேதமடைந்துள்ளன. 30 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த தென்னை மரங்களும் 32 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த நெற் பயிரும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
தமிழக அரசு துறைகளிலேயே மிகப் பெரிய சேதத்தை தமிழ்நாடு மின்வாரியம்தான் சந்தித்திருக்கிறது. இந்தப் புயலால் சுமார் 7,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்குமென மின்வாரியம் கணக்கிட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :