ஜம்மு காஷ்மீர் சட்டசபை கலைப்பு: பின்னணியில் நடப்பது என்ன?

    • எழுதியவர், மசூத் ஹூசைன்
    • பதவி, பிபிசிக்காக

காஷ்மீரின் காலநிலை, சூழல் மற்றும் அரசியல் ஆகிய மூன்றும் கணிக்க முடியாத ஒன்று என்ற வரலாற்றைப் பெற்றுள்ளன.

மக்கள் ஜனநாயகக் கட்சி- பாஜக கூட்டணி ஆட்சியில் இருந்து பாஜக விலகிய பிறகு, அந்த மாநில சட்டசபை முடக்கப்பட்டு ஜூன்மாதம் அங்கு ஆளுநர் ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவற்றின் ஆதரவோடு மக்கள் ஜனநாயக கட்சியின் மெகபூபா முஃப்தி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சியமைக்க முயன்ற நிலையில், புதன்கிழமை இரவு ஆளுநர் சத்யபால் மாலிக் மாநில சட்டசபையைக் கலைத்துள்ளார்

பலவீனமான ஜனநாயகத்தை கொண்டுள்ள ஜம்மு காஷ்மீரின் நிலை, ஆளுநரின் உத்தரவு ஆகியவை ஊடகம், அரசியல் விமர்சகர்களால் தற்போது பெரிதும் விவாதிக்கப்படும். கடந்த நான்கு ஐந்து மாதங்களாக சட்டசபையை கலைக்க வேண்டும் என்று காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது அது ஏன் நடந்தது என்பதை நாம் முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

இந்திய அரசியலின் விளிம்புகளில் இருந்த காலம் முதல், சங்க் பரிவாரின் முக்கிய நிரலாக காஷ்மீர் இருந்து வருகிறது. அவர்கள் நிறைய பேசினாலும், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து மற்றும் சர்ச்சைக்குரிய பகுதியில் இருந்து அதனை மாற்றுவது போன்றவற்றுக்கு தேவையான பெரும்பான்மை அவர்களிடம் இல்லை. இந்த பிராந்தியத்தில் பிரதமர் நரேந்திர மோதியின் வளர்ச்சி பெருமளவில் இருந்தது. 2014ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அம்மாநிலத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக பா.ஜ.க உயர்ந்தது.

தொங்கு சட்டசபையில், அம்மாநிலத்தின் பெரும்கட்சியாக மக்கள் ஜனநாயக கட்சி உருவானது. ஆனால், பா.ஜ.கவின் வெற்றியை அவர்களால் புறக்கணிக்க முடியவில்லை. தன் குதிரை பேரத்தை பாதுகாத்துக் கொள்ளவும், சங்கிகளை வலிமையற்றவர்களாக ஆக்கும் நோக்கத்துடன் முஃப்தி சயீத் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார்.

வாஜ்பேயின் கொள்கையை பின்பற்றிய பா.ஜ.க, அம்மாநிலத்தின் சிறப்பு அரசியலமைப்பை நிலைநாட்டுவதற்கு, அனைத்து பங்குதாரர்களிடம் பேச்சுவார்த்தையை ஊக்குவித்தல், அம்மாநிலத்தின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான சில மின் திட்டங்களை திரும்பத் தருவது மற்றும் பாகிஸ்தானுடன் தொடர்பு வைத்திருப்பது ஆகிய அம்சங்களுக்கு பாஜக ஒப்புக்கொண்டது.

இந்த உடன்படிக்கை மற்றும் கூட்டணியால் மாநிலத்தில் நீண்ட காலமாக தீவிர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு காஷ்மீர் என்ற பெயரில் வெகுஜன மக்களை திரட்டி வந்த பாஜகவுக்கு பெரிதாக பலன் இல்லை.

முஃப்தியின் மரணத்துக்கு பிறகு செயலற்று போன கூட்டணி, தலைமை பொறுப்பை மெகபூபா முஃப்தி ஏற்றுக்கொண்ட பின்னர் மீண்டும் உயிர் பெற்றது. ஆனால், இவர்கள் உருவாக்கிய குறைந்தபட்ச பொது திட்டத்தை செயலாக்குவதில் இந்த கூட்டணிக்கு ஏற்பட்ட தோல்வியும், 2016இல் மாநிலத்தில் நிலவிய அமைதியின்மையும் பிரச்சனையை உண்டாக்கியது.

இதனால் பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையிலான பாஜகவுக்கு பாதிப்பு உண்டாகியது. விளைவு கூட்டணி முறிந்தது. மேலும் இந்த கூட்டணி மற்றும் பின்னர் நடந்த நிகழ்வுகள், தங்களுக்கு வாக்களித்த மக்களின் நம்பிக்கையை சிதைத்து விட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதனால் பாஜகவுக்கு கிடைத்த ஒரே லாபம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் அக்கட்சி நன்கு காலூன்றியது தான். அரசியலில் ஓரங்கட்டப்பட்ட பல நபர்களை அதன் பின்னர் முன்னணியில் நிறுத்தியது. மோதல்களால் கடுமையாக பாதிப்படைந்த மாநிலத்தில் எவ்வாறு அரசியல் நடத்த வேண்டும் என்பதை புரிந்து கொண்டதால், அங்கு நிலவிவரும் வாரிசு அரசியலை தடுத்து வெற்றி பெறுவது குறித்து பாஜக எண்ண தொடங்கியது.

கொல்லப்பட்ட பிரிவினைவாத தலைவரான அப்துல் கனி லோனின் மகனும், மக்கள் மாநாட்டு அமைப்பின் தலைவருமான சஜாத் லோனின் கட்சிக்கு 87 உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றத்தில் 2 உறுப்பினர்கள் உள்ளனர். பாஜகவின் கூட்டணி கட்சியை சேர்ந்த அவர் தற்போது மாநில அரசியலில் விஸ்வரூபம் எடுத்து மாநில முதல்வராக ஆக விரும்புகிறார்.

காஷ்மீரின் அதிகாரத்தை பிரிக்க நீண்ட காலமாக பா.ஜ.க முயற்சித்து வருகிறது. வாஜ்பேயி காலத்தில், தேசிய மாநாட்டுக் கட்சிக்கு (தேமாக) மாற்றாக மக்கள் ஜனநாயக கட்சித் (மஜக) தொடங்க பெற்றது மிகப்பெரிய கடைசி அடியாகும். தேசிய மாநாட்டுக் கட்சியோ, அல்லது மக்கள் ஜனநாயக கட்சியோ கூட்டணி இல்லாமல் அரசாங்கத்தை நடந்த முடிந்திடவில்லை.

கடைசியாக 1996ஆம் ஆண்டு தேர்தலில் ஃபரூக் அப்துல்லா கூட்டணி இல்லாமல் தனியே ஆட்சி அமைத்தார். 2002ஆம் ஆண்டு மக்கள் ஜனநாயக கட்சி காங்கிரஸின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தது. 2008ல் காங்கிரசின் ஆத்ரவுடன் ஓமர் ஆட்சி அமைத்தார். 2014ல் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்து மஃப்டி ஆட்சியில் அமர்ந்தார்.

மக்கள் மாநாட்டுக் கட்சி என்ற மற்றொரு கட்சியை சஜத் லோன் தொடங்கியது மேலும் பிரிவினைக்கு வழிவகுக்கும். சிறுபான்மையினரின் வாக்குகளை ஒருங்கிணைத்து மற்றும் பெரும்பான்மையை பிரிப்பதே இதன் முக்கிய நோக்கம். ஏனெனில், ஒரு நாள், காஷ்மீர் அரசியலின் எழுதப்படாத உளவியல் தடையோடு ஜம்முவின் முதலமைச்சர் பதவியேற்பார்.

இத்திட்டம் தேமாக மற்றும் மஜக-வுக்கு தெரியும். ஆனாலும், எதிர்பாராத விதமாக இரு கட்சிகளும் காங்கிரசுடன் இணைந்ததற்கு இரு முக்கிய காரணங்கள் உண்டு.

முதலாவதாக, பா.ஜ.க-மஜக அரசு வீழ்ந்த சில நாட்களிலேயே, மஜகவில் இருந்து விலகிய சில சட்டமன்ற உறுப்பினர்கள் சஜத் லோனுக்கு ஆதரவு தெரிவித்தனர். பின்னர் படிப்படியாக அரசாங்கம் அமைப்பதற்கான உரிமை கோரலுக்கு தேவையான எண்ணிக்கைக்காக வேலை பார்க்க தொடங்கினர்.

இரண்டாவது, நகர்புற உள்ளூர் தேர்தலில், புதிய பிரதிநிதிகளை முன்னிறுத்தி பா.ஜ.க தனது முழு சக்தியை காண்பித்தது. 35 A தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் மஜக மற்றும் தேமாக, இதில் இருந்து தள்ளியே இருந்தன. எனினும் அவர்களின் தாக்கம் இருந்தது. ஸ்ரீநகரின் மேயரை தேர்ந்தெடுப்பது அவர்கள்தான் என அவர்களுக்கு நன்கு தெரிந்திருந்தது. ஆனால், பா.ஜ.க களத்தில் குதித்தவுடன் அவர்களது தாக்கமும் காணாமல் போனது.

அரசாங்கம் அமைப்பதற்காக மெகபூபா முறையாக அறிவிப்பு வெளியிட்ட மாலையன்று, மஜக-வின் நிறுவனர்களில் ஒருவர் மற்றும் முன்னாள் துணை முதலமைச்சரான முசஃபர் ஹூசைன் பெய்க், வெளிப்படையாக லோனுக்கு ஆதரவு தெரிவித்தார்.

இரு கட்சிகளுக்கும் இது ஒரு எச்சரிக்கை மணியாகவே ஒலித்தது. காஷ்மீர் அரசியலில் மாற்றத்தை கொண்டுவர பா.ஜ.க நினைப்பதாக அவர்கள் நினைத்தார்கள். ஆனால், பரந்த காஷ்மீரின் அதிகாரத்தை கைப்பற்றுவதே பா.ஜ.கவின் நோக்கமாக இருந்தது. காஷ்மீரில் சட்டம் என்ன சொல்கிறது என்பதை மீறி, ஒருவரின் சக்தி மற்றும் அதிகாரத்தை வைத்தே அரசியல் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஐந்து மாதங்களாக, கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் சட்டசபையை கலைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க, பா.ஜ.க மட்டும் அதனை எதிர்த்து வந்தது.

(இந்தக்கட்டுரை Kashmir Life-ன் ஆசிரியரால் எழுதப்பட்டது)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: