You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் கலைப்பு - மெகபூபா ஆட்சியமைக்க முயன்ற நிலையில் ஆளுநர் உத்தரவு
காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவற்றின் ஆதரவோடு மக்கள் ஜனநாயக கட்சியின் மெகபூபா முஃப்தி இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சியமைக்க முயன்ற நிலையில், புதன்கிழமை இரவு அந்த மாநில சட்டசபையைக் கலைத்துள்ளார் ஆளுநர் சத்யபால் மாலிக்.
மெகபூபா முஃப்தி ஆட்சியமைக்க அழைக்குமாறு மெகபூபா கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, மக்கள் மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த சஜத் லோன் பாஜக ஆதரவோடு ஆட்சியமைக்க வாட்சாப் மூலம் கவர்னரிடம் அனுமதி கோரினார்.
மக்கள் ஜனநாயகக் கட்சி- பாஜக கூட்டணி ஆட்சியில் இருந்து பாஜக விலகிய பிறகு, அந்த மாநில சட்டசபை முடக்கப்பட்டு ஜூன்மாதம் அங்கு ஆளுநர் ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டது.
காங்கிரஸ் (12 எம்.எல்.ஏ.), தேசிய மாநாட்டுக் கட்சி (15 எம்.எல்.ஏ.) ஆகியவற்றின் ஆதரவுடன் ஆட்சியமைக்க அனுமதி கோரியிருந்த மெகபூபா ஆதரவு தெரிவித்து, சொந்தக் கட்சியான மஜக, தேமாக மற்றும் காங்கிரஸ் அளித்த கடிதங்களை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். கவர்னரைத் தொடர்புகொள்ள முடியாதது விநோதமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாஜகவுக்கு 25 எம்.எல்.ஏ.க்களும், அதன் ஆதரவோடு ஆட்சியமைக்க முயன்ற சஜத் லோனின் மக்கள் மாநாட்டுக் கட்சிக்கு 2 எம்.எல்.ஏ.க்களும் இருந்தபோதும் ஆட்சியமைக்க 44 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை.
வேலை செய்யாத ஃபேக்ஸ் மிஷின்
மெகபூபா முஃப்தி ஆட்சியமைக்க அனுமதி கோரி ஆதரவுக் கடிதங்களை ஆளுநர் மாளிகைக்கு ஃபேக்ஸ் செய்ய முயன்றபோது அதை பெறவேண்டிய ஆளுநரின் ஃபேக்ஸ் இயந்திரம் வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்த முன்னாள் முதல்வர் மெகபூபா, ஆனால், அந்த ஃபேக்ஸ் இயந்திரம், சட்டசபை கலைக்கப்படும் அறிவிப்பை அனுப்பியது என்று தெரிவித்தார்.
தேசிய மாநாட்டுக் கட்சி ஐந்து மாதங்களாக சட்டசபையைக் கலைக்கவேண்டும் என்று வலியுறுத்தி வந்தது. ஆனால், மெகபூபா முஃப்தி ஆட்சியமைக்க அனுமதி கோரிய சில நிமிடங்களில் சட்டசபையைக் கலைக்க உத்தரவு வருவது தற்செயல் அல்ல என்று டிவிட்டரில் தெரிவித்திருந்தார் ஒமர் அப்துல்லா.
அத்துடன் கவர்னர் மாளிகைக்கு அவசரமாக புதிய ஃபேக்ஸ் மெஷின் தேவை என்றும் கிண்டலாகப் பதிவு செய்திருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :