You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமிர்தசரஸ் நிரன்காரி: ‘எங்களுக்குப் பயம் கிடையாது; ஆனால் எதிர்வினையாற்ற மாட்டோம்‘
- எழுதியவர், அரவிந்த் சாப்ரா
- பதவி, பிபிசி பஞ்சாபி
கடந்த 71 ஆண்டுகளில் டெல்லிக்கு வெளியே நடைபெறும் முதலாவது மாநாட்டுக்காக நிரன்காரியர் ஆயத்தப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அமிர்தசரஸில் நிரன்காரி பவன் மீது ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடந்திருக்கிறது.
``ஹரியானாவில் சமல்க்கா என்ற இடத்தில் நவம்பர் 24 முதல் 26 வரையில் நடைபெறவுள்ள மாநாட்டில் பல லட்சம் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்,'' என்று சண்டிகாரில் உள்ள ஊடகப் பொறுப்பாளர் ரஜிந்தர் குமார், பிபிசி பஞ்சாபி இடம் தெரிவித்தார்.
பெயர் குறிப்பிட விரும்பாத நிரன்காரி ஒருவர் கூறியதாவது: ``தாக்குதலை நாங்கள் பின்னுக்குத் தள்ளிவிட விரும்புகிறோம். அது துரதிருஷ்டவசமான ஒரு சம்பவம். ஆனால் நாங்கள் அதுபற்றி கருத்து கூறவில்லை.'' பெரிய மாநாடு தான் தற்போது மனது ஓடிக் கொண்டிருக்கிறது என்று அவர்கள் கூறுகின்றனர்.
நாட்டில் பல இடங்களில் நிறைய கூட்டங்கள் நடைபெறுகின்றன என்றாலும், அவையெல்லாம் சில மணி நேரங்கள் அல்லது ஒரு நாள் நடப்பவையாக இருக்கும் என்று ரஜிந்தர் குமார் கூறினார். ``ஆனால் 1948ல் எங்களுடைய முதலாவது மாநாடு நடந்ததற்குப் பிறகு, டெல்லிக்கு வெளியே மாநாடு நடந்தது கிடையாது'' என்று அவர் தெரிவித்தார்.
1978ல் அமிர்தசரஸில் நடைபெற்ற மாநாடும் ஒரு நாள் தான் நடந்தது என்றும், அப்போது 16 சீக்கியர்கள், மூன்று நிரன்காரிகள் என 19 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார். அந்த மோதல்தான் மாநிலத்தில் கலகச் செயல்களின் தொடக்கமாக இருந்தது என்றும், அதன் தொடர்ச்சியாக 1980களிலும், 1990களின் தொடக்கத்திலும் ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள நிரன்காரி பவனைச் சுற்றிலும், மாநாடு குறித்த பெரிய சுவரொட்டிகளைக் காண முடிகிறது.
``எங்களுடைய தலைவர், சத்குரு மாட சுதிக்ஷா மகராஜ் இங்கு வருகிறார்'' என்று அவர் தெரிவித்தார். இங்கு செக்டார் 30 பகுதியில் நிரங்காரி பவன் அமைந்துள்ள இடத்தில் உள்ளேயும், வெளியிலும் சில கமாண்டோக்கள் உள்பட காவல் துறையினர் சோதனை நடத்தினர். பவனை சுற்றிலும் காவல் துறையினர் நிறுத்தப்படவில்லை என்றாலும், புலனாய்வு அதிகாரிகள் சிலரை அங்கு காண முடிந்தது.
``நாங்கள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கை சந்தித்தோம். எங்களுக்குத் தேவையான அனைத்து பாதுகாப்பு வசதிகளும் அளிப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்,'' என்று நிரன்காரி அமைப்பின் பிராந்தியப் பொறுப்பாளர் ஜோகிந்தர் கவுர் கூறினார்.
``எங்களுடைய தேவைகள் குறித்து விரைவில் அரசுக்கு நாங்கள் தெரிவிப்போம்'' என்று அவர் குறிப்பிட்டார். தங்களிடம் எந்த அச்சமும் இல்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
``வரக்கூடிய நிகழ்ச்சியில் வேலை பார்ப்பதற்கு நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்புவதாகத்தான், தாக்குதலில் காயம் அடைந்தவர்களின் குடும்பத்தினர் கூறுகிறார்கள்'' என்று ஜோகிந்தர் கவுர் தெரிவித்தார்.
``யாருடனும் எங்களுக்குப் பகை கிடையாது. யார் இதைச் செய்தார்கள் என்று எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. எப்படியிருந்தாலும், காவல் துறையினர் தங்கள் கடமையைச் செய்கிறார்கள்'' என்று அவர் கூறினார்.
இந்தச் சமூகத்து மக்களுக்கு அச்சம் எதுவும் இல்லை என்று, பவனில் உள்ள ஹரிஷ்குமார் என்ற நிரன்காரி கூறினார். ``எங்களுக்குப் பகைவர்கள் கிடையாது. இது அரிதாக நடந்த ஒரு சம்பவம் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்,'' என்று அவர் குறிப்பிட்டார்.
``இந்தத் தாக்குதல் எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் எங்கள் சமூகத்தவர்களின் ஆர்வத்தை அது குறைத்துவிடவில்லை,'' என்று ரஜிந்தர் குமார் கூறினார்.
அந்தப் பகுதியில் எட்டு அல்லது ஒன்பது கிலோமீட்டர் தொலைவுக்கு ஓர் இடத்தில் நிரங்காரிகளுக்கு பவன்கள் இருப்பதாக ஜோகிந்தர் கவுர் தெரிவித்தார். இந்தியாவில் தங்களுக்கு 3,000க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளதாகவும், 2,500 பவன்கள் இருப்பதாகவும் மற்றொரு மூத்த தலைவர் தெரிவித்தார்.
மாநாட்டுக்காக சமல்க்காவில் அமைக்கப்படும் இடம் இந்த அமைப்புக்குச் சொந்தமானது. 600 ஏக்கர் பரப்புள்ள அந்த வளாகத்தை, அதன் தலைவர் சத்குரு மாட சுதிக்ஷா மகராஜ் கடந்த மாதம் திறந்து வைத்தார்.
சந்த் நிரன்காரி சேவாதளத்தின் சுமார் 4,000 தொண்டர்கள் மற்றும் நாடு முழுக்க உள்ள அதன் பல்வேறு கிளைகளில் உள்ள பக்தர்கள் அங்கு இரவு பகலாக பணியாற்றி வருகிறார்கள் என்று மண்டலப் பொறுப்பாளர் கிர்பா சாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் வசதிக்காக மாநாடு நடைபெறும் இடத்துக்கு அருகில் உள்ள போத்வல் மஜ்ரி ரயில் நிலையத்தில், நவம்பர் 10 முதல் டிசம்பர் 5 வரையில் ரயில்கள் இரண்டு நிமிடங்கள் நின்று செல்வதற்கு ரயில்வே நிர்வாகம் ஒப்புக்கொண்டிருப்பதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :