அமெரிக்கரை கொலை செய்த அந்தமான் பழங்குடியினர்

கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.

அமெரிக்கரை கொலை செய்த அந்தமான் பழங்குடியினர்

அந்தமான் நிக்கோபார் தீவுகளில், அங்குள்ள ஆபத்தான பழங்குடியினர்களால் அமெரிக்கர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

அந்த அமெரிக்கரை, மீனவர்கள் வட சென்டினல் தீவிற்கு கூட்டிச் சென்றுள்ளனர். அங்கிருந்த பழங்குடியினர் அவரை அம்புகளால் எய்து, அவரது உடலை கடற்கரையோரம் விட்டுச்சென்றுள்ளனர்.

கொல்லப்பட்டவர் அலபாமாவை சேர்ந்த, 27 வயதான ஜான் ஆலன் எனபது தெரிய வந்துள்ளது. ஆபத்தான அந்தமான் பழங்குடியினர் தனியாக வாழ்ந்து வருகின்றனர். வெளியுலகில் இருக்கும் நோய்களால் அவர்களுக்கு ஆபத்து என்பதால், அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வது சட்டவிரோதமானது.

இந்த பழங்குடியினரை சந்தித்து அவருக்கு கிறிஸ்துவ மதம் குறித்து பிரசங்கம் செய்ய ஜான் ஆலன் விரும்பி இருக்கலாம் என்று இவரது கொலை குறித்து உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நாகரிகத்தில் இருந்து அப்பாற்பட்டு வாழும் சென்டினல் தீவு பழங்குடியினர் 50ல் இருந்து 150 எண்ணிக்கையில் மட்டுமே உள்ளனர். அவர்களுக்கு பணத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றுகூட தெரியாது.

ஒரே இடத்தில் 230 எலும்புக்கூடுகள்

இலங்கையில் வட மேற்கு மன்னாரில் பெரும் கல்லறை ஒன்றில் நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள் இந்தாண்டு தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்நாட்டு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்பு போர் மண்டலமாக இருந்த இடத்தில் உள்ள கல்லறையில் 230க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆகஸ்டில் இதே போன்று வேறொரு இடத்தில் 90 எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டது.

2009ஆம் ஆண்டு முடிந்த இலங்கை போரில் குறைந்தது 20,000 பேர் காணாமல் போயிருக்கலாம் என மனித உரிமை குழுக்கள் தெரிவிக்கின்றன. இலங்கை துருப்புகள் மற்றும் புலிகளுக்கு எதிராக நடந்த 26 ஆண்டுகால போரில் குறைந்தது லட்சம் பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்ட இடத்தை விரிவாக தோண்ட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"230க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகளை தோண்டி எடுத்துள்ளோம். மனித எச்சங்களை தவிர்த்து, அங்கு பீங்கான், உலோக பொருட்களோடு, அங்கு இறந்தவர்களின் ஆபரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எலும்புகள் சிதறி கிடக்கின்றன" என கொழும்பு அருகே உள்ள கெலனிய பல்கலைக்கழகத்தின் தடயவியல் தொல்பொருள் நிபுணர் சோமதேவ தெரிவித்தார்.

அதிபர் டிரம்பை கண்டித்த அமெரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

அமெரிக்காவின் தென்பகுதி வழியாக அகதிகளாக நுழைவோர் அந்நாட்டில் புகலிடம் கோருவதற்கு விதித்திருந்த தடையுத்தரவை விலக்கி உத்தரவிட்ட சான்பிரான்சிஸ்கோ மாவட்ட நீதிமன்ற நீதிபதியை விமர்சித்த அதிபர் டிரம்பினை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் கண்டித்துள்ளார்.

சான்பிரான்சிஸ்கோ மாவட்ட நீதிபதியை, தனக்கு எதிராக தீர்ப்பளித்ததற்காக "ஒபாமா நீதிபதி" என டிரம்ப் விமர்சித்திருந்தார்.

"இங்கு ஒபாமா நீதிபதிகள் அல்லது டிரம்ப் நீதிபதிகள், புஷ் நீதிபதிகள் அல்லது க்ளின்டன் நீதிபதிகள் என்றெல்லாம் கிடையாது. நம்மிடம் இருப்பது மிகச்சிறந்த மற்றும் திறமை வாய்ந்த நீதிபதிகள். சுதந்திரமான நீதித்துறை பெற்றதற்கு நாம் அனைவரும் நன்றியுடன் இருக்க வேண்டும்" என அஷோசியேட் பிரஸ்ஸிடம் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

'சல்மானை நீக்க வேண்டும்' - கோரிக்கைக்கு செளதி அமைச்சரின் பதில் என்ன?

சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலை தொடர்பாக உலகின் பல நாடுகளிலும் எதிர்ப்பு குரல்கள் மற்றும் கண்டனங்கள் உள்ள நிலையில், செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் நடப்பதற்கு சாத்தியமேயில்லை என்று அந்நாட்டின் வெளியுறவுதுறை அமைச்சர் பிபிசியிடம் தெரிவித்தார்.

துருக்கியில் உள்ள இஸ்தான்புல்லில் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி நடந்த கஷோக்ஜியின் கொலையில் செளதி இளவரசருக்கு எந்த பங்கும் இல்லை என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அடேல் அல்-ஜுபேர் குறிப்பிட்டார்.

கஷோக்ஜியின் கொலையில் சல்மானுக்கு தொடர்பு உள்ளதா என்று விசாரிக்க வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றம் கோரிக்கை விடுத்தற்கு அடுத்த நாளில் செளதி அமைச்சரின் இந்த மறுப்பு வெளிவந்துள்ளது.

செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் ஜமால் கஷோக்ஜி மிருகத்தனமாக கொல்லப்பட்டது குறித்து சௌதியின் இளவரசர் முகமது பின் சல்மானுக்கு ' தெரிந்திருக்கும் அல்லது தெரியாமல்கூட இருக்கலாம்' என்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: