You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்காவில் குடியேறிகளுக்கு தடை விதிக்கும் டிரம்ப் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை
அமெரிக்காவின் தென்பகுதி வழியாக அகதிகளாக நுழைவோர் அந்நாட்டில் புகலிடம் கோருவதற்கு அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்திருந்த தடையுத்தரவை விலக்கி சான்பிரான்சிஸ்கோ மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க மனித உரிமை குழுக்களின் வாதங்களை கேட்ட சான்பிரான்சிஸ்கோ மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஜான் டிகர், அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த தடையுத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க எல்லைக்குள் ஆயிரக்கணக்கான அகதிகள் நுழைவதை அடுத்து இந்த தடையுத்தரவை இம்மாதத் தொடக்கத்தில் டிரம்ப் அறிவித்திருந்தார்.
தேசத்தின் நலன்களை கருத்திற்கொண்டு இவ்வாறு செய்ததாக டிரம்ப் கூறினாலும், அதை ஏற்றுக்கொள்வதற்கு மனித உரிமை அமைப்புகள் மறுத்தன.
மத்திய அமெரிக்காவை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான அகதிகள் பல வாரங்களாக பயணித்து அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையை நோக்கி வந்துகொண்டிருந்தனர்.
துன்புறுத்தல், வறுமை, வன்முறை போன்ற காரணங்களினால் ஹோண்டுராஸ், கௌதமாலா, எல் சால்வடோர் ஆகிய நாடுகளை சேர்ந்த தாங்கள் அமெரிக்காவில் அடைக்கலம் கோருவதற்காகப் பயணிப்பதாக அகதிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து, சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க இடைக்காலத்தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய டிரம்ப், புலம் பெயர்ந்தோரில் பெரும்பாலானோர் குற்றவாளிகள் என்றும், அணியணியாக நாட்டின் எல்லையை நோக்கி அகதிகள் வருவதை படையெடுப்பு என்றும் கூறியதுடன், எல்லைகளில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுமாறு ராணுவத்துக்கும் உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி, இந்த விவகாரம் அரசியல் காரணங்களுக்காக பெரிதுபடுத்தப்படுவதாகவும் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
நீதிபதி என்ன சொன்னார்?
வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் "அமெரிக்காவின் அனுமதிக்கப்பட்ட புகலிடம் கோரும் இடத்தின் வழியாக நுழைகிறாரோ இல்லையோ", சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளபடி அவர்கள் புகலிடம் கோரி விண்ணப்பிக்க முடியும் என்று தனது தீர்ப்பின்போது நீதிபதி டிகர் சுட்டிக்காட்டினார்.
இம்மாதம் 9ஆம் தேதி டிரம்ப் வெளியிட்ட பிரகடனம், இதற்கு முந்தைய நடவடிக்கைகளைவிட "கடுமையானது" என்றும் அவர் கூறினார்.
"எந்த நோக்கத்திற்காகவும் அமெரிக்க அதிபரின் நிர்வாகம், ஏற்கனவே நடைமுறையிலுள்ள குடிவரவு சட்டங்களை மீறி பிரகடனத்தை அமல்படுத்த முடியாது" என்று அவர் மேலும் கூறினார்.
டிரம்பின் தடையுத்தரவு சட்டவிரோதமானது என்று அறிவிக்கக்கோரி அமெரிக்கன் சிவில் லிபர்டீஸ் யூனியன் என்ற அமைப்பு தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
டிகர் வழங்கியுள்ள இந்த தீர்ப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், இதுகுறித்த வழக்கு டிசம்பர் மாதம் விசாரிக்கப்படும் வரை இது நீடிக்கும் என்றும் அந்த தீர்ப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் அடைக்கலம் கோருவதற்கு, சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இடங்களிலேயே விண்ணப்பிக்க முடியுமென்றும், சட்டவிரோதமாக அமெரிக்காவின் எல்லைப்பகுதிகள் வழியாக நுழைபவர்களுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் கூறி இம்மாதம் 9ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பிரகடனம் வெளியிட்டிருந்தார்.
அதுமட்டுமின்றி, இந்த தடையுத்தரவு அடுத்த 90 நாட்களுக்கோ அல்லது அமெரிக்கா மெக்ஸிகோவுடன் உடன்பாடு எட்டும் வரையோ அமலில் இருக்குமென்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :