You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை மன்னார் மனித புதைகுழி: கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள் எண்ணிக்கை 230 ஆனது
- எழுதியவர், அன்பரசன் எத்திராஜன்
- பதவி, பிபிசி செய்தியாளர்
இலங்கையில் வட மேற்கு நகரான மன்னாரில் பெரும் கல்லறை ஒன்றில் நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள் இந்தாண்டு தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்நாட்டு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்பு போர் மண்டலமாக இருந்த இடத்தில் உள்ள கல்லறையில் 230க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன் இதுபோன்று வேறொரு இடத்தில் 90 எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டது.
2009ஆம் ஆண்டு முடிந்த இலங்கை போரில் குறைந்தது 20,000 பேர் காணாமல் போயிருக்கலாம் என மனித உரிமை குழுக்கள் தெரிவிக்கின்றன. இலங்கை துருப்புகள் மற்றும் புலிகளுக்கு எதிராக நடந்த 26 ஆண்டுகால போரில் குறைந்தது லட்சம் பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்ட இடத்தை விரிவாக தோண்ட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதில் உள்ளவர்கள் யார், அவர்கள் எப்படி இறந்தார்கள் என இன்னும் தெளிவாக தெரிய வரவில்லை.
"230க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகளை தோண்டி எடுத்துள்ளோம். என் அனுபவத்தில் இதுவரை தோண்டி எடுக்கப்பட்டதில் மிகப் பெரிய கல்லறை இதுதான். மனித எச்சங்களை தவிர்த்து, அங்கு பீங்கான், உலோக பொருட்களோடு, அங்கு இறந்தவர்களின் ஆபரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எலும்புகள் சிதறிக் கிடக்கின்றன. மனித உடல்களை சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை" என கொழும்பு அருகே உள்ள கெலனிய பல்கலைக்கழகத்தின் தடயவியல் தொல்பொருள் நிபுணர் சோமதேவ தெரிவித்தார்.
தமிழ் சிறுபான்மையினர் அதிகமுள்ள மன்னார் பகுதியில், இலங்கை பாதுகாப்பு படை மற்றும் தமிழ்ப் புலிகளுக்கு இடையே நடந்த இரு தசாப்த போரின்போது, அங்கிருந்த நூற்றுக்கணக்கானோரை காணவில்லை என சமூக தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.
இலங்கை போரின் போது மன்னார் நகரம், பெரும்பாலும் ராணுவ கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், அதன் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் அம்மாவட்டத்தின் பல இடங்களை தமிழ்ப்புலிகள் ஆதிக்கம் செலுத்தின. கொமூரமான போர்களுக்கு பிறகு, அந்த ஒட்டுமொத்த மாவட்டத்தையும் ராணுவம் கைப்பற்றியது.
தோண்டி எடுக்கப்பட்ட எச்சங்கள், மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. முழுவதும் தோண்டி எடுக்கப்பட்ட பின்னரே அடுத்து என்ன என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும்.
போர் முடிந்ததில் இருந்து, இலங்கையின் முன்னாள் ராணுவ மண்டலமாக இருந்த பகுதிகளில் இருந்து இவ்வாறு பல கல்லறைகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
2014ஆம் ஆண்டு 96 மனித உடல்களின் எச்சங்கள் மன்னாரில் உள்ள திருக்கெத்தீஸ்வரம் இந்து கோயிலுக்கு அருகே கண்டெடுக்கப்பட்டது.
ஆனால், நான்கு ஆண்டுகள் ஆகியும், அங்கு கொல்லப்பட்டவர்கள் யார், யாரால் கொல்லப்பட்டார்கள் என தெளிவாக தெரிய வரவில்லை.
ராணுவம் மற்றும் தோற்கடிக்கப்பட்ட தமிழ்ப்புலிகள் இரண்டுமே பொதுமக்கள் இறந்ததற்கு காரணம் என மனித உரிமை குழுக்கள் குற்றஞ்சாட்டுகின்றன.
ஆனால், பொதுமக்கள் இறந்ததற்கு அல்லது காணாமல் போனதற்கு தங்கள் படைகள் காரணமல்ல என அரசு கூறுகிறது. மன்னாரில் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த கல்லறையில் உள்ள உடல்களுக்கும், வீரர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ராணுவம் கூறுகிறது.
சர்வதேச அழுத்தத்தை தொடர்ந்து, இந்தாண்டு தொடக்கத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து விசாரிக்க, தனிச்சையான அமைப்பு தொடங்கப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: